செனல் 4 வுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல ஐக்கிய தேசியக் கட்சி தயார் : பொறுப்பை ஒப்படைக்குமாறு வலியுறுத்தல்

6.2.14

யுத்தக்குற்றம் என்ற பெயரில் போலியான தகவல்களை வெளியிட்டு வரும் செனல் - 4 நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு அரசாங்கம் செல்லாதிருப்பது ஏன் என்று சபையில் கேள்வியெழுப்பிய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தால் முடியா விட்டால் நாட்டையும் இராணுவத்தையும் பாதுகாக்கும் பொறுப்பை எதிர்க்கட்சியிடம் ஒப்படைக்குமாறும் நேற்று அரசாங்கத்தை வலியுறுத்தி நின்றது. 

அரசாங்கம் தயாரில்லாத போதும் செனல் - 4 வுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்தை நாடுவதற்கு தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டது.  

பாராளுமன்றத்தின் நேற்று புதன்கிழமை அமர்வின் போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்திலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி.யான ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு அரசாங்கத்தை கேள்விக்குட்படுத்தினார்.  

ரவி கருணாநாயக்க எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்,  

பிரித்தானியாவின் செனல் -4 நிறுவனம் இலங்கை தொடர்பில் வெளியிட்ட போலியானதும் பொய்யானதுமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்கள் தொடர்பில் அந்நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்தார். 

ஆனால்  அரசாங்கம் இன்று வரையில் சனல் 4 நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எதனையும் மேற்கொண்டிருக்கவில்லை. நாட்டிற்கு களங்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு சென்றிருப்பின் இன்றைய அளவிலான பிரச்சினை எழுந்திருக்க வாய்ப்பில்லை.  

செனல் - 4 நிறுவனத்தால் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டானது அரசாங்கம் சார்ந்த பிரச்சினை அல்ல. அது தேசிய பிரச்சினையாகவுள்ளது. எனவே இதற்கெதிராக நீதிமன்றம் செல்லாதது ஏன்?  

அரசாங்கத்தினால் முடியா விட்டால் அந்த பொறுப்பினை எதிர்க்கட்சியிடம் ஒப்படையுங்கள். நாம் இவ்விடயத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்று நாட்டையும் இராணுவத்தையும் பாதுகாக்கின்றோம் என்றார்.  

இதற்குப்பதிலளித்த அமைச்சர் பீரிஸ் கூறுகையில்,  

எல்லா விடயங்களுக்கும் நீதிமன்றம் சென்று விடமுடியாது. நீதிமன்றம் செல்வது பெரிய விடயம் அல்ல. ஆனாலும் இவ்விடயத்தில் நீதிமன்றம் செல்வதென்பது பொருத்தமானதாக அமையாது நீதிமன்றம் செல்லும் பட்சத்தில் அதன் கால எல்லை செலவீனம் குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது.  

இவ்விடயம் தொடர்பில் குறுகிய நோக்கோடு சிந்திப்பது ஆகாது. இது அரசியல் பிரச்சினை சார்ந்தது என்பதை விட தேசிய பிரச்சினை என்பதே பொருத்தமாகும். எனவே விமர்சனங்களைத் தவிர்த்து அரசியல் நோக்கம் கருதாது அனைவரும் இணைந்து இவ்விடயத்துக்கு தீர்வு காண முன்வர வேண்டும். 

எமது நாட்டைப் பாதுகாக்கும் விடயத்தில் சகல விடயங்களையும் ஆராய்ந்தே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டைப் பாதுகாப்பது தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் நாமே தீர்மானிக்க வேண்டும். வேறு யாரும் அல்ல எனவும் கூறினார்.   

இதனையடுத்து ரவி கருணாநாயக்க எம்.பி. கூறுகையில், 

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அமெரிக்காவுக்கு சென்று இலங்கையில் யுத்தக் குற்றம் தொடர்பில் விசாரணை நடத்துவதென்றால் நாட்டுக்குள் குழப்பநிலை உருவாகும் எனத் தெரிவித்துள்ளார்.   

ஜனாதிபதி செயலாளர் இவ்வாறு அமெரிக்காவில் கூறயிருப்பதானது இங்கு குற்றங்கள் இழைக்கப்பட்டிருப்பதாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது.   

இங்கு போர்க்குற்றம் எதுவும் இழைக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகளே கூறுகின்ற நிலையில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க இலங்கையில் குற்றங்கள் இழைக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ளும் வகையில் தமது கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார். இது பாரதூரமான விடயமாகும். நிலைமை இவ்வாறிருக்கும் போது அரசாங்கம் அவ்வாறு எதிர்க்கட்சியின் ஆதரவைப் பெறப்போகின்றது என்று கேள்வியெழுப்பினார்.   

இதற்குப் பதிலளித்த அமைச்சர் பீரிஸ்,  

இலங்கையில் யுத்தக் குற்றங்கள் இழைக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த சந்தர்ப்பதிலும் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை என்பதை மிகவும் பொறுப்புடன் கூறிக் கொள்கின்றேன் என்றார்.

0 கருத்துக்கள் :