தனித் தமிழீழம் கோரி ஐ.நா. முன் முற்றுகை இன்று; நடத்துகிறது மே 17 இயக்கம்

12.2.14

சுதந்திர தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு நடத்துமாறுகோரி நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா.தலைமைச் செயலகம் முன்பாக இன்று புதன்கிழமை முற்றுகைப் போர் இடம்பெறவுள்ளதாக மே 17 இயக்கம் அறிவித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 25 ஆவது கூட்டத் தொடர் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது. இதன்போது இலங்கைக்கு எதிராகக் கடுமையான பிரேரணையயான்றைக் கொண்டுவரும் செயற்பாடுகளில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.இந்தப் பிரேரணையில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் அமெரிக்கா ஆராய்ந்து வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையிலேயே மே 17 இயக்கம் அமெரிக்காவின் பிரேரணையை வலுவூட்டும் விதத்தில் இன்று முற்றுகைப் போரை நடத்தவுள்ளது.

ஈழத்தில் போர் முடிவடைந்து 4 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்ற இனப் படுகொலைக்கு இன்னமும் சர்வதேச சமூகம் நீதி வழங்கவில்லை. இன்றும் கூட சரியான விசாரணை நடத்தப்பட்டு, அவர்களின் துன்பங்கள் வெளியுலகத்துக்குக் கொண்டு வரப்படவில்லை.

இவ்வாறானதொரு நிலையில் சுதந்திர தமிழீழத்துக்கான வாக்கெடுப்பை ஐக்கிய நாடுகள் சபை நடத்தவேண்டும் எனக் கோரியும், ஈழத்தில் நடந்தேறிய இனப்படுகொலை, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள்,போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரியும் இன்று புதன்கிழமை இந்த முற்றுகைப் போரை முன் னெடுக்கவுள்ளதாக மே 17 இயக்கம் அறிவித்துள்ளது.

நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்துக்கு முன்பாக இன்று தமிழின உணர்வாளர்களை அணிதிரளுமாறு மே 17 இயக்கம் அறை கூவல் விடுத்துள்ளது.

0 கருத்துக்கள் :