என் தலைவர் பிரபாகரன் போன்ற புரட்சித் தமிழர்கள் இருக்க என்னை அப்படி அழைக்காதீங்க!சத்யராஜ்

9.1.14

என் தலைவர் பிரபாகரன் போன்ற உண்மையான புரட்சித் தமிழர்கள் இருக்கும் போது அந்தப் பட்டத்துக்குக் கொஞ்சமும் தகுதி இல்லாத என்னை, இனி அப்படி அழைக்காதீங்கனு கெஞ்சிக் கேட்டுக்கிறேன். இவ்வாறு  நடிகர் சத்யராஜ் விகடன் மேடை நிகழ்வில் வாசகர் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
அவரிடம் வாசகர்கள் கேட்ட சில கேள்விகளும் விடைகளும்,

புரட்சித்தமிழன்’ என்ற பட்டத்துக்குத் தாங்கள் தகுதியானவரா?

என் தலைவர் பிரபாகரன் போன்ற உண்மையான புரட்சித் தமிழர்கள் இருக்கும்போது அந்தப் பட்டத்துக்குக் கொஞ்சமும் தகுதி இல்லாத என்னை, இனி அப்படி அழைக்காதீங்கனு கெஞ்சிக் கேட்டுக்கிறேன்.
20 வருஷத்துக்கு முன்னாடி 'திருமதி பழனிச்சாமி’ படம் நடிச்சுட்டு இருந்த சமயம், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது, அவங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டது. அப்ப நான் 2 லட்சம் கொடுத்தேன். என் மனைவி தன் வளையல்களைக் கழட்டிக் கொடுத்தாங்க.
¨
அதுக்கு நன்றி சொல்லி கர்நாடகாவில் இருந்து ரசிகர் ஒருவர் எழுதின கடிதத்துல 'புரட்சித்தமிழன் சத்யராஜ்’னு எழுதியிருந்தார். அதைப் பார்த்த என் உதவியாளர் ராமநாதன் தான் தயாரிச்ச 'திருமதி பழனிச்சாமி’ பட விளம்பரங்கள்ல 'புரட்சித்தமிழன் நடிக்கும் திருமதி பழனிச்சாமி’னு போட்டுட்டார்.

அடுத்து நான் நடிச்ச படம் 'வால்டர் வெற்றிவேல்’. அதில் 'புரட்சித்தமிழன் சத்யராஜ் நடிக்கும் வால்டர் வெற்றிவேல்’னு கார்டு போட்டாங்க. படம் 200 நாள் ஓடவும் அதை ஒரு சென்ட்டிமென்ட் மாதிரி ஆக்கிட்டாங்க. சினிமா சென்ட்டிமென்ட்டுக்கு கேக்கவா வேணும்! அப்புறம் எல்லோரும் 'புரட்சித் தமிழன்’னு போட ஆரம்பிச்சிட்டாங்க.

நானும் அதைக் கண்டுக்கலை. ஆனா, அந்தப் பட்டத்துக்குத் தகுதியே இல்லாத ஆள் நான். இனிமே 'புரட்சித் தமிழன்’னு என்னைக் குறிப்பிடாம இருந்தாலே போதும், ரொம்ப சந்தோஷப்படுவேன்!

ஒரு பகுத்தறிவாளியாக, ஈழ ஆதரவாளராக உங்களை அடையாளப்படுத்திக்கொள்வது, திரைத் துறையில் என்னவிதமான சிரமம், சங்கடத்தை உங்களுக்கு ஏற்படுத்தியது, ஏற்படுத்துகிறது?

நிறைய விஷயங்கள் இருக்கு. ஒண்ணு ரெண்டை மட்டும் சொல்றேன். தேங்காய்ல சூடத்தை வெச்சு கொளுத்தி கேமராவுக்குச் சுத்தி எடுத்துட்டு வருவாங்க. நான் எடுத்துக்க மாட்டேன்னு சொல்வேன்.
அப்ப சிலர், 'எங்க மனசு புண்படுமேனு நினைச்சாவது இந்தக் கற்பூரத்தைத் தொட்டு கண்ல ஒத்திக்கலாம்ல’னு கேப்பாங்க. உடனே, 'என் மனசு புண்படும் கிறதுக்காக நீங்க தேங்காய் சுத்தாம இருக்கலாம்ல’னு திருப்பிக் கேட்டுடுவேன்.

இதேபோல சினிமாவுல இன்னொரு மிகப் பெரிய காமெடி இருக்குது. ஒரு காட்சியில செத்துப்போற மாதிரி நடிச்சா, அப்படி நடிச்சு முடிச்ச பிறகு கேமராவை ஒருமுறை பார்த்து சிரிக்கச் சொல்வாங்க.
அதாவது 'ஆள் சாகலை... திரும்ப எந்திரிச்சு சிரிச்சுட்டார்’னு விதியை ஏமாத்துறோமாம். ஆனா, நான் சிரிக்க மாட்டேன்னு சொல்வேன். 'இல்ல சார் சிரிச்சிடுங்க’னு விடாப்பிடியா நிப்பாங்க. 'சிரிக்காட்டி நான் நிஜமாவே செத்துடுவேன்னு பயப்படுறீங்களா?’னு கேட்பேன்.

யார் என்ன சொன்னாலும் சிரிக்க மாட்டேன்னு உறுதியா இருப்பேன். எங்க போனாலும் எனக்கு இது பெரிய போராட்டமா இருக்கும்.
அதே மாதிரி ஈழப் பிரச்சினையில், மனசுல அவ்வளவு ஆதங்கம், கோபம், சோகம் இருக்கு. அதை எல்லாத்தையும் மேடையில் கொட்டித் தீர்த்தால், கண்டிப்பா எனக்கு ஜெயில்தான்.

அப்படி நான் ஜெயில், கோர்ட், கேஸ்னு அலைஞ்சேன்னா, தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவாங்க. அதான் மனசுல இருக்கிறதைக் கொட்டித் தீர்க்காமல் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டிய சூழல். அது என் மனசாட்சியை ரொம்ப உறுத்தும்!
இவ்வாறு சத்யராஜ் பதிலளித்தார்.

0 கருத்துக்கள் :