மன்னார் மனித புதை குழியில் இன்று மேலும் மூன்று எழும்புக்கூடுகள்

18.1.14


மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதை குழி 09 ஆவது தடவையாக இன்று சனிக்கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் தோண்டப்பட்ட போது மேலும் மூன்று மனித எழும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
 
மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைவாக இன்று சனிக்கிழமை  காலை 8.30 மணி முதல் காலை 11 மணிவரை குறித்த மனித புதைகுழி மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர்  டி.எல்.வைத்திய ரெட்ண ஆகியோர்    முன்னிலையில் தோண்டப்பட்டது.
 
இதன் போது முதலில் இரண்டு மனித எழும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டதோடு மேலும் ஒரு மனித எழும்புக்கூடு உள்ளமை அடையாளம் காணப்பட்டது.
 
நேற்று வெள்ளிக்கிழமை வரை 37 எழும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றுடன் மீட்கப்பட்ட மனித எழும்புக்கூடுகளின் தொகை 40 ஆக அதிகரித்துள்ளது.
 
இன்று சனிக்கிழமை காலை 11 மணிவரை 3 மனித எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டது. இதன்  போது மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை மற்றும் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்றனி விக்டர் சோசை ஆகியோர் மனித புதை குழி உள்ள இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
 
மீண்டும் எதிர் வரும் திங்கட்கிழமை  20 ஆம் திகதி   மன்னார் நீதவான் முன்னிலையில் குறித்த மனித புதை குழி தோண்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :