அமெரிக்காவின் காலில் விழுகிறதா சிறிலங்கா?

23.1.14

வரும் மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக மீண்டும் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவை சமாதானப்படுத்தும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க திடீரென அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்து விளக்கமளிப்பதற்காக லலித் வீரதுங்க ஜெனிவா சென்றிருந்தார்.
நேற்று அவர் அங்குள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேசியிருந்தார்.
இந்தநிலையில், அவர் திடீரென வொசிங்டனுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வொசிங்டனில் அவர், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள், காங்கிரஸ் மற்றும் செனெட் உறுப்பினர்களை சந்தித்துப் பேசவுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெனிவாவில் அடுத்த தீர்மானம் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ள அமெரிக்காவுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் லலித் வீரதுங்க வொசிங்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதற்கிடையே, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் நேற்று திடீரென யாழ்ப்பாணம் சென்று, வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரனுடன் சுமார் 3 மணிநேரம் வரை பேச்சு நடத்தியதாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
எனினும் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.

0 கருத்துக்கள் :