மத நிலையங்கள் மீது தீவிரவாத பௌத்த பிக்குகள் தாக்குதல்

14.1.14

சிறிலங்காவின் தெற்கிலுள்ள சுற்றுலா நகரான ஹிக்கடுவவில் உள்ள இரண்டு கத்தோலிக்க மத நிலையங்கள் மீது தீவிரவாத பௌத்த பிக்குகள் மற்றும் அவர்களது கூலிப்படைகளைக் கொண்ட குழுவொன்று நேற்று தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்தப் பிராந்தியத்தில் செயற்படும் கத்தோலிக்க வணக்க நிலையங்களுக்கு எதிராக ஹிக்கடுவவில் உள்ள பௌத்த நிறுவனங்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

சிறிலங்கா காவற்துறையினரின் தடையையும் மீறி பிக்குகளின் தலைமையில் பௌத்த காடையர் குழுவால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், இரண்டு கத்தோலிக்க வணக்க நிலையங்கள் மீதும் கற்களை வீசி அவற்றின் சொத்துக்களை சேதமாக்கியுள்ளனர். இந்த நிலையங்களின் கதவுகள், யன்னல்கள் போன்றவற்றை உடைத்து இவற்றுக்குள் உள்நுழைந்த தீவிர பௌத்த சிங்களக் காடையர்கள் அங்கிருந்த கத்தோலிக்க அடையாளச் சின்னங்கள் மற்றும் புத்தகங்கள் போன்றவற்றை எரியூட்டியுள்ளனர்.

உள்ளுர் ஊடகங்கள் இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் காணொலியில் பதிவு செய்துள்ளதுடன், தொலைக் காட்சி சேவைகளின் பிற்பகல் செய்திகளில் இந்தச் சம்பவம் ஒலிபரப்பட்டது.
இக்கத்தோலிக்க வணக்க நிறுவனங்களிற்கருகில் வாழும் மக்கள் அச்சுறுத்தப்பட்டனர். சிறிலங்கா காவற்துறையினர் பிரதான காலி வீதியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்ததுடன் இந்தப் பிரதேச மக்கள் காலி வீதியைத் தாண்டி ஹிக்கடுவ பட்டிணத்திற்குச் செல்வதற்குத் தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டது.
கத்தோலிக்க மத நிலையங்களை அந்த இடத்திலிருந்து எடுக்குமாறு ஏற்கனவே தொடர்புபட்ட நிர்வாக அதிகாரிகள் கட்டளையிட்டிருந்ததாக ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கிய பௌத்த பிக்குகள் தெரிவித்தனர்.

எதுஎவ்வாறெனினும், தாம் ஒழுங்குமுறையில் பதிவு செய்தே தமது நிலையங்களை நடாத்துவதாகவும், தமது நிலையங்களை நடாத்தக் கூடாது எனக் கட்டளையிடப்பட்டமை சட்டரீதியற்றது எனவும் இந்த கத்தோலிக்க நிறுவனங்களுக்குப் பொறுப்பான மதகுருக்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது சிறிலங்காவில் அதிகரித்து வரும் சிறுபான்மை மதங்களுக்கு எதிரான தீவிரத் தாக்குதல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் பொருத்தமான நகர்வுகளை எடுக்கத் தவறினால் இவ்வாறான தாக்குதல்கள் எதிர்காலத்தில் மேலும் தொடரும் என சிவில் சமூகத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

0 கருத்துக்கள் :