போராளிகள் உதித்த மண்ணில் இப்படியும் இன்று போராட்டமாம்; எங்கே போகிறது யாழ்ப்பாணம்?

22.1.14

விடுதலைப் போராட்டத்துக்காக பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மண்ணில், சினிமா விமர்சனத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறிக்கொண்டு விஜய் ரசிகர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திய ஒரு கூட்டம் நேற்று "உதயன்' பத்திரிகை அலுவலகம் முன்பாகப் போராட்டம் நடத்தியது.

ஞாயிறு சூரியகாந்தி இணைப்பிதழில் வெளியான "ஜில்லா' படம் தொடர்பான விமர்சனத்தில் "இந்தத் திரைப்படத்தைப் பார்க்க திரையரங்குக்குப் போய் மூன்று மணி நேரத்தை வீணடிப்பது கொழுப்பு அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?" என்று எழுதப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத்தான் போராட்டம் நடத்துவதாகக் கூறிக் கொண்டு மு.ப. 11 மணி முதல் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் கொளுத்தும் வெயிலின் மத்தியில் வீதியோரமாக நின்று கொண்டிருந்தது அந்தக் கூட்டம்.

முன்னதாக இப்படி ஒரு போராட்டம் "உதயன்' பத்திரிகை அலுவலகத்திற்கு முன்பாக நடக்கிறதா? என்று முற்பகல் முதல் புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக எமது நிறுவனத்தை கண்காணித்துக் கொண்டிருந்தனர்.

குறித்த கூட்டத்தைச் சேர்ந்த 14 பேர் வரையிலானோர் வீதியில் நின்றுகொண்டிருந்த போது அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது போன்று புலனாய்வாளர்களாகத் தம்மை இனங்காட்டிய சுமார் 20இற்கும் மேற்பட்டவர்கள் "உதயன்' அலுவலகத்தை அண்டிய பகுதிகளில் நின்றிருந்தனர்.

இராணுவத்தினருக்கு வீடியோ எடுப்பவர் என்று தன்னை அடையாளப்படுத்திய ஒருவர் வீடியோவில் இவர்கள் செய்தவற்றைப் பதிவு செய்துகொண்டிருந்தார். மதியத்திற்குப் பின்னர் அந்தக் கூட்டம் அங்கிருந்து கலைந்து சென்றது.
http://onlineuthayan.com/News_More.php?id=788002591922229895

0 கருத்துக்கள் :