மீட்கப்பட்டுள்ள மனித எச்சங்களுள் சிறுவர்களதும்!தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு!!

11.1.14

மன்னார்- திருக்கேதீஸ்வரம் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதை குழி தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பில் அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,மன்னார் திருக்கேதீஸ்வரம் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட மாந்தைச் சந்தியில் இருந்து திருக்கேதீஸ்வரத்திற்குச் செல்லும் பிரதான வீதியிலிருந்து 75 மீற்றர் தூரத்தில் குடிநீர் விநியோக திட்டப் பணியில் ஈடுபட்டவர்கள் குடிநீர் குழாய் பொருத்துவதற்காக கடந்த டிசெம்பர் 20ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை குழி தோண்டியபோது மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவ்விடத்தில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுரதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல் வைத்தியரட்ண ஆகியோர் முன்னிலையில் குறித்த மனிதப் புதைகுழி தோண்டப்பட்டபோது இதுவரை 32 மண்டை ஓடுகளும் மனித எலும்புக்கூடுகளும் மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன.மீட்கப்பட்ட மண்டை ஓடுகளில் துவாரங்கள் இருப்பதுடன், சிறுவர்களுடைய நான்கு மண்டை ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் மீட்கப்பட்ட மனித எச்சங்களில் காணப்படும் மனிதப் பற்கள் 6 வயது குழந்தைகளுடையதாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

குறித்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம் 1990 ஆம் ஆண்டிலிருந்து இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாகவும், இராணுவப் பிரிவு ஒன்றின் கட்டளை தலைமையகமாகவும் இருந்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.எனவே இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள மண்டை ஓடுகள் எலும்புக்கூடுகள் என்பன கடந்த காலத்தில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர் காணாமல் போன தமிழ் மக்களுடையது என்றே நாம் சந்தேகிக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆயுதம் தரிக்க முடியாத சிறுவர்களும் கொல்லப்பட்டிருப்பதானது போராளிகள் என்பதற்கும் அப்பால் ஒரு இனத்தின் இருப்பினை ஒட்டுமொத்தமாக அழிக்கின்ற எண்ணத்தினை கொலையாளிகள் கொண்டிருந்துள்ளமையை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது.

 எனவே இது அப்பட்டமான இனப்படுகொலையின் ஒரு அங்கமாகும்.கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்டவர்களின் எச்சங்களாக இருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டிருக்கின்றது.எனவே சர்வதேச சமூகமானது யுத்தம் நடைபெற்ற இறுதி மூன்று ஆண்டுகளில் மட்டும் நடைபெற்ற போர்க்குற்றங்களிற்கு விசாரணையை கோருவதுடன் மட்டுப்படுத்திக் கொள்ளாது இலங்கையில் இருந்து பிரித்தானியர்கள் வெளியேறிய நாள் தொடக்கம் இன்று வரை நடைபெற்ற, நடைபெற்ற வருகின்ற இனப்படுகொலை தொடர்பில் முழுமையான சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையை நடாத்த முன்வர வேண்டும்.

இப்புதைகுழி தொடர்பாக சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் எந்தவொரு விசாரணையும் உண்மையை வெளிக்கொண்டுவந்து குற்றவாளிகளை தண்டிப்பதற்கு வழிவகுக்காது.கடந்த காலத்தில் செம்மணி புதைகுழி விசாரணைகள் நீதிபதி ஒருவரது முன்னிலையில் இடம்பெற்றபோதும் அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதுடன் அக்கொலையுடன் தொடர்புடையவர்கள் கண்டுபிடிக்கப்படவோ தண்டிக்கப்படவோ இல்லை.எனவே தற்போது மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைகுழி தொடர்பாகவும் இதுவரை தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட படுகொலைகள் தொடர்பாகவும் ஓர் சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சர்வதேச சமூகத்திடம் கோருகின்றது என்றுள்ளது.

0 கருத்துக்கள் :