முரண்பாடுகளுக்குள் மூழ்கடிக்கப்படுகின்றதா தமிழ் ஊடக பலம்? - யார் முந்திப் போகிறார்களோ அவர்களுக்கு முன்வரிசையில் இடம்!

11.1.14

'ஒரு ஊடகவியலாளரிடம் கதைத்தபோது, 'நான் இந்த உடகத்துறையிலிருந்தே ஒதுங்கிவிடலாம் என்று முடிவு செய்துவிட்டேன். இனி, எல்லோரையும்போல், எனது மனைவி, எனது பிள்ளைகள் என்று அவர்களுக்காக வாழப் போகின்றேன்' என்று சலிப்புடன் கூறினார். தமிழீழ விடுதலைக்கு வல்லமை சேர்த்த பல ஊடகவியலாளாகள், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் காணாமலேயே போய்விட்டார்கள். இன்னமும், தமிழ் மக்களுக்காக எழுதும் ஊடகவியலாளர்கள் புனை பெயருக்குள் ஒழிந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். ஒரு சில ஊடகவியலாளாகள் மட்டுமே தேசிய விடுதலைக்கான போர்க் களத்தில் இப்போதும் எழுத்தாயுதத்துடன் நிமிர்ந்து நிற்கின்றார்கள். இவர்களும், இப்போது சலிப்புக் கொள்ளும் வகையில் நிலமைகள் கவலைக்கிடமாக மாறி வருகின்றது.
   
ஒரு சமூகத்தின் வாழ்வியல் தடத்தில் ஊடகம் மிக முக்கியமான சக்தியாக உள்ளது. ஒரு நாட்டின் உறுதிப்பாட்டிற்கும், அமைதிக்கும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக முண்டு கொடுத்து நிற்கும் வல்லமை படைத்தது ஊடகம். விடுதலை கோரும் மக்களின் பாதையினைச் செப்பமிடவும், அந்தப் பாதையில் மக்களை அணி திரட்டவும் வல்லமை கொண்டது ஊடகம். ஊடக பலம் இல்லாத மக்கள் கூட்டம் விடுதலை பெற்று வாழ்வது என்பதுகூட சாத்தியமானது அல்ல.
ஆனாலும், புலம்பெயர் தமிழர்களாகிய நாங்கள் தெரிந்தே ஊடகத்துறையைச் சாகடித்து வருகின்றோம் அல்லது புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் தெரிந்தே மக்கள் பலத்தைச் சிதறடித்து வருகின்றன. இது இரண்டுமே புலம்பெயர் தமிழ் ஊடக பரப்பில் சமகால நிகழ்வுகளாகத் தொடர்கின்றன. முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர், புலம்பெயர் தேசியத் தளங்களில் பிளவுகளும், போட்டிகளும் உருவாகியபோதே ஊடகங்களும் சரிவுகளை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துவிட்டன. தேசியவாதத்தைக் கையில் எடுத்த ஊடகங்கள் பலவும், குழுநிலை வாதத்திற்குள் தம்மைப் புதைத்துக்கொண்டன. சில அரசபக்கம் சார்ந்து பிழைக்கப்பழகிக் கொண்டன.

ஆனாலும், தேசியத்தை நேசித்த ஊடகவியலாளாகள் இன்னமும், தமக்கான பாதையினை மாற்றிக்கொள்ளாமலேயே கடும் தவம் இயற்றிக்கொண்டிருக்கிறார்கள். அந்த மண்ணில் புதைந்துபோன மாவீரர்களுக்காகவும், மக்களுக்காகவும் நீதி கோரும் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். கனவுகளை மட்டுமே நெஞ்சில் சுமந்துகொண்டு, தமிழீழத்தின் இருளை அகற்ற ஒரு கை விளக்குடன் விடியலைத் தேடி அலைகின்றார்கள்.
முள்ளிவாய்க்கால்வரை நேர் பாதையில் பயணித்த ஊடகங்களும், ஊடகர்களும்கூட இப்போது தடுமாறித் தளர்ந்து போவதற்கும், மனம் நொந்து, சலித்துப் போவதற்கும் தமிழ்த் தேசிய தளங்களில் உருவாகி, நிலைத்துப்போன பிளவுகளே முக்கிய காரணமாக உள்ளது. தமக்கிடையே உருவாக்கிக்கொண்ட குழுநிலை வாதத்தில் இருந்துகொண்டே தேசியத்திற்கான தேவைகளை அலட்சியம் செய்கின்றனர். ஊடக பலத்தின் அவசியத்தை உணர்ந்து கொள்ள மறுக்கின்றார்கள். நேர் – எதிர் திசைகளில் நின்று தமிழர்களுக்கான பலத்தைச் சிதறடிக்கின்றார்கள் என்ற ஊடகர்களது குற்றச்சாட்டில் உண்மைகள் இல்லாமல் இல்லை.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த நகர்வு வெற்றிகரமாக அமைய வேண்டுமாகின், தமிழ்த் தேசியத்திற்கான ஊடகப் பரப்பு பலப்படுத்தப்பட வேண்டும். ஊடகர்களை ஒன்றிணைக்கும் செயல்திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அவர்களை ஒரு தளத்தில் சந்திக்க வைத்து, கருத்துப் பரிமாறல்களை நடாத்தி, தெளிவான நிலைப்பாட்டிற்கு அவர்களைக் கொண்டு வரவேண்டும். மிகப் பெரிய ஜனநாயக சக்தியான ஊடகப் பரப்பை ஆக்க சக்தியாக்கி, தமிழீழ விடுதலைக்கா வெளிச்சங்களாகப் பயன்படுத்த வேண்டும்.
இல்லையேல், தேசியத்திற்கான ஊடக பலத்தை நாமாகத் தெரிந்தே தொலைத்த பழிக்கு நாம் ஆளாவோம் என்பது மட்டும் உறுதி!
- இசைப்பிரியா-
இசைப்பிரியா அனுப்பிவைத்த ஊடகங்கள் பற்றிய கட்டுரைக்கு செய்தி இணையம் சிறு பிண்ணினைப்பை கூறவிழைகிறது..

நன்றி இசைப்பிரியா - தங்களது ஊடக முக்கியத்துவம் பற்றிய கட்டுரை மிக ஆழமான கருத்துக்களையும் சிந்தனைகளையும் கொண்டுள்ளது.! ஊடகவியலாளா்கள் எல்லோரும் கொழும்பில் முகாமிடுகின்றனர். யார் முந்திப் போகிறார்களோ அவர்களுக்கு முன்வரிசையில் இடம் கிடைக்கிறது. முந்திப் போபவர் அங்கு நாலுபேரோடு பழகிவிட்டால் புலம் பெயர் தேசங்களில் இயங்கி வரும் எனைய தமிழ் உணர்வுள்ள ஊடகங்களை நசுக்கவோ - தடை செய்யவோ - முன்னுரிமை தரப்படுகிறதாம்.
 அதுவும் புலம்பெயர் தேசத்தில் நான்கு பிரமுகர்களது ஆதரவும் அரவணைப்பும் இருந்துவிட்டால் இருதலைக் கொள்ளிகளாகவே.. மீனுக்குவாலும் பாம்புக்கு தலையும் காட்டி பிழைக்கவும் முடிகிறதாம்.

 ஏன் மற்ற ஊடக காரர்கள் தேடிப் போடும் செய்திகளை கூட அப்படியே எடுத்து போடவும் செய்கிறார்களாம் - அதுமட்டுமா ஒருசில இணைய ஊடககாரர்களது விருப்பத்திற்கும் ஆசைக்கும் அவல் கொடுத்து இலங்கையில் ஒரு சில ஊடகங்களும் வாசகர் கண்படாதவாறு முடக்கப்படுகிறதாம். ஆதோடு மட்டுமல்லாமல் தங்கட கண்ணுக்கை தாங்களே மண்போட்டும் காட்டவும் செய்கிறார்களாம்..!!
 

0 கருத்துக்கள் :