இலங்கை மனித உரிமை நிலை. அமெரிக்க தொடர்ந்தும் கவலை

9.1.14

அமெரிக்க அரசு இலங்கையில், போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து பொறுப்பு சுமத்துவதிலும், நல்லிணக்கத்தை எட்டுவதிலும் போதிய முன்னேற்றம் ஏற்படாமல் இருக்கும் நிலை குறித்து தொடர்ந்து கவலை கொண்டிருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

போர்க்குற்றங்களுக்கான அமெரிக்கத் தூதர் ஸ்டீபன் ராப், செவ்வாய்க்கிழமை , இலங்கைக்கு தனது விஜயத்தைத் தொடங்கிய நிலையில், அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் நடத்திய சந்திப்பில், எதிர்வரும் ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில், இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில், ஒரு சர்வதேச விசாரணையைக் கோரும் தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழியும் என்று கூறியதாக, அந்த சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறைப் பேச்சாளர் ஒருவர், இலங்கையில் பல்வேறு மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் அமெரிக்கா தொடர்ந்து கவலை கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இலங்கையில் நடப்பதாகக் கூறப்படும் நில அபகரிப்புகள், மத ரீதியான நோக்கமுடைய தாக்குதல்கள் , ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலான வழக்குகள் விசாரித்துத் தீர்வு காணப்படாதது, ஆகியவைகள் காரணமாக, ஐ.நா மன்ற மனித உரிமைக் கவுன்சிலின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று தங்களைக் கணிக்க வைத்திருப்பதாக அவர் கூறினார்.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்பு சுமத்தும் வழிமுறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் ஏற்படாத நிலையில் அமெரிக்கா, 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில், ஐநா மனித உரிமை கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், மீண்டும் ஒரு தீர்மானத்தை எதிர்வரும் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்திலும் கொண்டுவரும் என்று அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :