காணாமற்போனோர் விடயத்தில் சர்வதேச விசாரணையே தேவை; கொழும்பில் தீப்பந்தப் போராட்டம்

26.1.14

காணாமற்போனவர்கள் தொடர்பில் தொடர் போராட்டத்தின் ஆரம்பமாக, கொழும்பில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு, காணாமற் போனவர்களின் உறவுகளால் தீப்பந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
‘காணாமற்போனோர் பிரச்சினைக்குச் சர்வதேச விசாரணையே தேவை என்பதை வலியுறுத்திச் சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்குடன், ஜெனிவா அமர்வுக்கு முன்னதாக இந்தத் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படும்’ என்று போராட்ட ஒருங்கிணைப்பாளரான சுந்தரம் மகேந்திரன் தெரிவித்தார்.

கேலிச் சித்திர ஊடகவியலாளரான பிரகீத் எக்கலிகொட காணமற்போய் 4 வருடங்களாவதை முன்னிட்டும், காணமற்போனோரின் உறவுகளை விடுவிக்குமாறு கோரியும் காணாமற்போனோரைக் தேடிக் கண்டறியும் குழுவினால் மஹரகமவில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை 10 மணியிலிருந்து கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடத்தப்பட்டோரை விடுதலை செய்
வடக்கு – கிழக்கு மற்றும் தலைநகர் கொழும்பில் கடத்தப்பட்டுக் காணாமற் போனவர்களின் உறவுகள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ‘மனித உரிமைகளுக்கு மதிப்பளி’, ‘தாய்மாரின் கண்ணீருக்குப் பதில் சொல்’, ‘கடத்தப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்’ ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாதைகளைக் காணாமற் போனோரின் உறவுகள் தாங்கியிருந்தனர்.
இதன் தொடர்சியாக இரவு 6 மணி முதல் ஒரு மணி நேரம் தீப்பந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. காணாமற் போனோரின் உறவுகள் கையில் தீப்பந்தம் ஏந்தி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக வடக்கு – கிழக்கிலும் காணமற்போனோர் தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோரிக் கவனவீர்ப்புப் போராட்டம் நடத்தப்படும் எனவும், ஐ.நா மனித உரிமைகள் அமர்வுக்கு முன்னர் சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் காணாமற்போனோரைத் தேடிக் கண்டறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :