இலங்கை ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது:அமெரிக்கா

2.1.14

ஈரானிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய முடியாது என இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஈரானிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.
எவ்வாறெனினும், ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு சலுகை வழங்கியிருந்தது.
எனினும், ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது என அமெரிக்கா இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளதாக பெற்றோலிய வள அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மசகு எண்ணெய் இறக்குமதி தொடர்பில் அமெரிக்காவுடன் இலங்கை பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.
ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதற்கு உலகத் தலைவர்கள் அண்மையில் இணக்கம் வெளியிட்டிருந்தனர்.
எனினும், மசகு எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஈரானுக்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை.

ஈரானிய மசகு எண்ணெயை சுத்திகரிக்கும் நோக்கிலேயே சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டதாகவும், தற்போது ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளமை வருத்தமளிப்பதாகவும் பெற்றோலிய வள அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.

மேலும் ஆறு மாதங்களுக்கு மசகு எண்ணெய் இறக்குமதி செய்ய இலங்கைக்கு கடந்த நவம்பர் மாதம் அமெரிக்கா சலுகை அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :