திருகோணமலையில் பாரிய சீனப் போர்க்கப்பல்கள்

14.1.14

சீனக் கடற்படையின் இரண்டு பாரிய போர்க்கப்பல்கள் மூன்று நாள் பயணமாக திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்துள்ளன.

நேற்றுக்காலை திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்த இரு சீனப் போர்க்கப்பல்களுக்கும் சிறிலங்கா கடற்படையினர் பெரும் வரவேற்பு அளித்தனர்.

திருகோமலைக்கு வந்துள்ள சீனப் போர்க்கப்பல்களில் ஒன்றான, ஜிங் காங்சான் ஒரு துருப்புக்காவி ஈரூடகத் தாக்குதல் கலமாகும்.

210 மீற்றர் நீளத்தையும், 20 ஆயிரம் தொன் எடை கொண்டதும், 168 கடற்படையினர் பணியாற்றுவதுமான இந்தப் போர்க்கப்பலில், 800 வரையான படையினரையும் 20 வரையான போர் வாகனங்களையும் தரையிறக்கும் வசதிகள் உள்ளன.

இதில்  நான்கு சுப்பர் பிரீலோன் வகை கனரக போக்குவரத்து உலங்கு வானூர்திகளும் தரித்து நிற்கும் வசதிகள் உள்ளன.

134 மீற்றர் நீளமும் 4ஆயரம் தொன் எடையும் கொண்ட ஹெங் சூயி என்ற நாசகாரி போர்க்கப்பலும் திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.

165 கடற்படையினர் பணியாற்றுகின்ற இந்தப் போர்க்கப்பலில், நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணைகள் ரொக்கட்டுகள், மற்றும் தரைத்தாக்குதலுக்கான குறூஸ் ஏவுகணைகள், உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதிலும் காமோவ் கே.ஏ.-28 உலங்கு வானூர்தி ஒன்று தரித்து நிற்கிறது.

சீனப் போர்க்கப்பல்களின் கட்டளை அதிகாரிகள், சிறிலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தளபதி றியர் அட்மிரல் றொகான் அமரசிங்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

அண்மைக்காலமாக சீனப் போர்க்கப்பல்கள் சிறிலங்காவுக்கு நல்லெண்ணப் பயணங்களை மேற்கொள்வது அதிகரித்துள்ளது.

0 கருத்துக்கள் :