சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை – பிரித்தானியா அறிக்கை

21.1.14

குற்றவாளிகள் தண்டிக்கப்படாத கலாசாரம் சிறிலங்காவில் தொடர்வது கவலையளிப்பதாக தெரிவித்துள்ள பிரித்தானியா, கடந்த மூன்று மாதங்களில் சிறிலங்காவின் மனிதஉரிமை நிலைமைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தினால், நேற்று வெளியிடப்பட்டுள்ள, 2012 ஒக்ரோபர் தொடக்கம் டிசெம்பர் வரையிலான காலாண்டுக்கான, சிறிலங்காவின் மனிதஉரிமைகள் மற்றும் ஜனநாயகம் குறித்த அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கடந்த நொவம்பர் மாதம் நடந்த கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்களின் மாநாட்டின் போது, சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து அனைத்துலகம் கவனம் செலுத்திய போதிலும், கொமன்வெல்த் மாநாடு நடந்த வாரத்தில் பல மனிதஉரிமை மீறல்கள் அரங்கேற்றப்பட்டன.
வடக்கில் காணாமற்போனவர்களின் குடும்பத்தினர் கொழும்பில் நடக்கவிருந்த நிகழ்வில் ஒன்றுகூட விடாமல் சிறிலங்கா படையினரால் தடுக்கப்பட்டனர்.
வடக்கிற்குச் செல்ல முற்பட்ட சனல்-4 ஊடகவியலாளர்கள் குழு, சிறிலங்கா அரசாங்கத்தின் தெளிவான திட்டத்தின் படி, பொதுமக்களால் தடுக்கப்பட்டனர்.

திருகோணமலையில் 5 மாணவர்களின் படுகொலையில் சம்பந்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 12 சிறப்பு அதிரடிப்படையினரும் கடந்த ஒக்ரோபரில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தண்டிக்கப்படாத நிலை சிறிலங்காவில் தொடர்வது வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்துக்கு கவலையளிக்கிறது.

இந்தக் காலப்பகுதியில், விசாரணைகளின் போது, தடுப்புக்காவலில் இருந்த சந்தேக நபர்கள் மரணமாகியுள்ளனர்.இரண்டு ஆட்கடத்தல்கள் பதிவாகியுள்ளன.

சாதகமான மாற்றங்களாக, சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டமூலம் நாடாளுமன்ற நடைமுறைகளை நெருங்கியுள்ளதையும், போர்க்காலத்தில் காணாமற்போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை ஆறு மாதங்கள் நீடிக்கப்பட்டிருப்பதையும் குறிப்பிடலாம் என்றும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.

0 கருத்துக்கள் :