கொத்தணிக் குண்டை பாவிக்குமாறு அமெரிக்கா பரிந்துரை: அதனைச் செய்யவில்லை இலங்கை

11.1.14

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் கொத்தணிக் குண்டுகளைப் பாவிக்குமாறு அமெரிக்கா பரிந்துரைத்தும், தாங்கள் அதனைச் செய்யவில்லையென்று இலங்கை ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளதாக கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கா- இலங்கைக்கு இடையேயான முறுகலின் ஆரம்பநிலையிலேயே இவ்வாறான ஆதாரங்களை வெளியிட்டுள்ள இலங்கையிடம், அமெரிக்காவின் பங்களிப்புத் தொடர்பான மேலதிக ஆதாரங்கள் இருக்கலாம் என்பதைக் கட்டியம் கூறுவதாகவே இச் செய்தி வெளிவந்துள்ளது.

  முல்லைத்தீவு புனித அந்தோனியார் மைதானத்தில் அமெரிக்க அதிகாரிகள் நின்று எடுத்த படம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை மற்றும் மன்னார் ஆயர் ஆண்டகை இராயப்பு யோசேப் அவர்கள் போரின் போது கொத்தணிக் குண்டுகள் பாவிக்கப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டு ஆகியவற்றின் விளைவாகவே அமெரிக்கா தொடர்பான இந்தச் செய்தியை இலங்கை வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் கொழும்புப் ஆங்கிலப் பத்திரிகையில் பத்தியாளர் ஒருவருக்கு இலங்கைக் கடற்படைத் தளபதி வழங்கிய பிறிதொரு செய்தியில், விடுதலைப்புலிகளின் கப்பல்களை அழிப்பதற்கான துல்லியத் தகவல்களை அமெரிக்காவே தந்து 2004ம் ஆண்டிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை ஏற்றி வந்த கப்பல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள இச்செய்தியின் பிரகாரம் நோர்வேயின் முயற்சியுடனான பேச்சு ஆரம்பித்தவுடனே அமெரிக்கா செய்த பரிந்துரைகளில் ஒன்றாக இந்த கொத்தணிக் குண்டுகளைக் கொள்வனவு செய்து விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் பாவிக்கும்படியான பரிந்துரை இடம்பெற்றுள்ளது.

நோர்வேப் பேச்சுக்கள் ஆரம்பித்தவுடனேயே இலங்கையின் முப்படைகளுக்கும் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களில் விமானப்படைக்கென அமெரிக்காவால் வழங்கப்பட்ட அறிவுரையிலேயே இந்தக் கொத்தணிக் குண்டுகளைப் பாவிக்குமாறான பரிந்துரை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு ஆதாரமும் மேற்படி செய்தியோடு இணைக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :