பீரிசின் கோரிக்கையை நிராகரித்த அமெரிக்கத் தூதுவர்

19.1.14

அமெரிக்கத் தூதரகத்தின் டுவிட்டர் செய்தியை அகற்றும்படி, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசினிடம் நேரடியாக கோரிக்கை விடுத்த போதிலும் அது உறுதியாக நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென். அந்தனிஸ் மைதானத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படையினரின் பீரங்கித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக, அமெரிக்கத் தூதரகத்தின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த படத்தையும் விளக்கத்தையும் அகற்றும்படி சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசனிடம் தொலைபேசி மூலம் கோரிக்கை விடுத்தார்.
ஆனால் அதற்கு அமெரிக்கத் தூதுவர் உறுதியாக மறுப்புத் தெரிவித்து விட்டதாகவும், இதையடுத்து கடுமையான வார்த்தைப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாகவும், தம்மை வெளிப்படுத்த விரும்பாத அரசதரப்பைச் சேர்ந்த ஒருவர் கொழும்பு ஆங்கில வாரஇதழிடம் கூறியுள்ளார்.
எனினும், அந்த வார்த்தைப் பரிமாற்றங்கள் குறித்து உடனடியாக எந்த தகவலும் தெரியவரவில்லை என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தூதரகத்திடம் டுவிட்டர் செய்த குறித்து விளக்கம் கோரப்படும் என்று, வெளிவிவகாரச் செயலராக இருந்த கருணாதிலக அமுனுகம தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :