குறிவைக்கும் பட்டாசுகள்!

17.1.14

தமிழர் தாயகப்பகுதிகளை சிறீலங்காவின் இனவாதப் படைகள் பெரும் எண்ணிக்கையான தமிழ் மக்களை படுகொலை செய்து நிலத்தை ஆக்கிரமித்ததுடன் நிற்காமல் அங்கு எஞ்சியிருக்கும் இளம் சமூகத்தினரையும் சீரழிப்பதற்கு கங்கணம்கட்டிநிற்கின்றன.

தற்போதும் சரி எதிர்காலத்திலும் சரி எமக்கு தமிழீழம், தனிநாடு என்று இன்றைய இளம் தலைமுறை சிந்திக்காதவாறு அவர்கள் மத்தியில் திட்டமிட்ட கலாச்சார சீர்கேட்டு வன்முறைகளைத் திணித்து வருகின்றது. புலம் பெயர் நாடுகளில் நத்தார், புதுவருடம் போன்ற விசேட நாட்களில் குறிப்பிட்ட நேரங்களை மட்டும் பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதிப்பார்கள்.

அப்படி அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மட்டும் பட்டாசுகளை வெடிக்கவைத்து வாணவேடிக்கைகளைச் செய்து மகிழ்வர். பின்னர் நாடு வழமைக்குத் திரும்பிவிடும். இதனால் பெரும் விபரீதங்கள் தவிர்க்கப்படும். ஆனால், சிறிலங்கா போன்ற நாடுகளில் இதற்கு எந்தத் தடையும் இல்லை.
குறிப்பாகத் தமிழர் தாயகப் பகுதிகளிலும் நத்தார், புதுவருடம், தமிழர் திருநாள் போன்ற நிகழ்வுகளுக்கு பட்டாசுகள் வெடிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. இது தமிழ் மக்களை திட்டமிட்டு அழிப்பதற்கு சிங்கள இனவாதம் கையாளும் உத்தி என்பது புரியாமல் இளசுகளும் தமக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக எண்ணி எல்லை மீறித் தமது அடாவடிகளை அரங்கேற்றியுள்ளனர்.

பல பகுதிகளிலும் தமது பகைமையை பழிவாங்கும் நோக்கில் பல தமிழ் இளைஞர்கள் பட்டாசுகளை ஆயுதமாகப் பாவித்துள்ள சம்பவங்கள் 2013 நத்தார் பண்டிகை மற்றும் 2014 புத்தாண்டு மலர்ந்த நேரத்தில் அரங்கேறியுள்ளதாக யாழ்.தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்குடாவின் பல பகுதிகளிலும் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டுள்ளனர்.

இவற்றைத் தட்டிக்கேட்கச் சென்றவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் காலையில் பார்த்த போதுதான், தமது உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். சேதம்விளைவித்தவர்களை இனம்காணமுடியாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பல பகுதிகளில் சேதம்விளைவித்தவர்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளபோதும், அவர்கள் காவல்துறையினருக்கு ஒரு மதுப் போத்தல் கொடுத்தால் சரி அவர்கள் சினிமா பாணியில் அவர்களை கைதுசெய்வது போன்று நாடகம் மட்டும் நடத்துவர். இதுதான் இன்று இங்குள்ள நிலை என குடும்பப் பொறுப்புவாய்ந்த இளைஞர் ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.

இங்குள்ள இளைஞர்களில், 50 வீதமானவர்கள் போதை மற்றும் அடிதடி வன்முறைகளில் ஈடுபடுவதிலேயே தமது நேரத்தைச் செலவுசெய்வதாகவும் அந்த இளைஞர் எம்மிடம் தெரிவித்தார். வன்முறைகளில் இறங்கியுள்ள பல இளைஞர்கள், சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் சிறிலங்கா இராணுவத்தினருடன் நட்பைப் பேணிவருகின்றனர் எனவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான இளைஞர்கள் பெற்றோர், உறவினர்கள், பெண்கள் முன்னிலையில் தகாத வார்த்தைப் பிரயோகங்களை சர்வசாதாரணமாகப் பிரயோகிப்பதாகவும் தெரியவருகின்றது. விடுதலைப் புலிகளின் காலங்களில் மூதாளர்களை எவ்வளவு கௌரவப்படுத்தி வைத்திருப்பர். ஆனால், தமிழர் தாயகப் பகுதிகளில் பல இளைஞர்கள் மூதாளர்களையே மதிப்பதில்லை என்பதற்கு முகநூலில் வெளிவந்த ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிடவேண்டும். தமிழர் தாயகத்தில் ஒரு மாணவன், தனது பாட்டியும் பூட்டியும் நிற்கும் புகைப்படத்தை இடுகையிட்டிருந்தார். அதற்கு பல இளைஞர்கள், கேலியான விவரணங்களை கொடுத்துள்ளமையை அவதானிக்க முடிந்தது.

தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள், மூதாளர்களை மதிப்பளிக்கும் நிகழ்வை தமிழர் தேசிய நிகழ்வாக அறிமுகப்படுத்தியிருந்தார் என்பதை குறிப்பிட்ட இளம் சமுதாயத்தினர் மனதில் வைக்கவேண்டும். இது புலம்பெயர் தமிழ் சமூகத்தினருக்கும் பொருந்தும் என்பதை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.

இதேவேளை, யாழ்.குடாநாட்டு இளைஞர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்கின்ற சிறிலங்கா அரசாங்கத்தின் செயல் திட்டங்களில்  ஒன்றாக தற்போது ‘ஆவா குறூப்’ என்ற ரவுடிக் கும்பல் ஒன்று குடாநாட்டில் உருவாக்கப்பட்டிருப்பதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் யாழ்.குடாநாட்டின் சில இடங்களில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்கள் மற்றும் திருட்டுச் சம்பவங்களில் இந்த ரவுடிக் கும்பலே ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆவா குறூப் என்று கூறப்படுகின்ற மேற்படி குழுவினர் 10 தொடக்கம் 20 வரையான உந்துருளிகளில்,  ஒன்றில் மூன்று பேர் என்ற அடிப்படையில் வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களுடன் வீதிகளில் வலம் வருகின்றனர். வீதிகளில் நிற்கின்ற அப்பாவி இளைஞர்களை கண்மூடித்தனமாக வெட்டிச் சரித்துவிட்டு அவர்கள் அங்கிருந்து சென்றுவிடுகின்றனர்.

அண்மையில் உடுவில் மற்றும் வசாவிளான் போன்ற இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில் இந்தக் குழுவினரே ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். சிறிலங்கா படைப் புலனாய்வாளர்களுக்கும் இவர்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளதாகவும் படைப்புலனாய்வாளர்களே இவர்களைக் களமிறக்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது. சில வேளைகளில் படைப்புலனாய்வாளர்களும் இந்தக் குழுவினருடன் வலம் வருகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.      

இவ்வாறு தமிழ் மக்கள் மீது திணிக்கப்படும் சிறிலங்காவின் திட்டமிட்ட வன்முறைகள், தமிழ் மக்களை மீண்டும் ஆயுதம் ஏந்தவைக்கும் என்பதே உண்மை. உலகெங்கும் பரந்து வாழும் எம் தமிழ் உறவுகளே இது சிந்திக்கும் நேரமல்ல செயற்படவேண்டிய நேரம்.

0 கருத்துக்கள் :