எந்தவொரு விசாரணையும் சர்வதேசத் தரத்தில் இல்லை; இலங்கை அரசைக் கடுமையாகச் சாடுகிறது பிரிட்டன்

30.1.14

இலங்கை அரசால் இதுவரை நிறுவப்பட்ட எந்தவொரு ஆணைக்குழுவின் விசாரணைகளும் சர்வதேச தரத்துக்கு ஏற்புடையதாக இல்லை என்று சாடியுள்ள பிரிட்டன், சர்வதேச தரத்துக்கு ஏற்புடைய உள்ளக விசாரணைகளை இலங்கை ஆரம்பிக்குமானால் அதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் இடம் பெற்ற விவாதத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபன் ரிம்ஸ் எழுப்பிய கேள்வி யயான்றுக்குப் பதிலளிக்கும் போதே வெளியுறவு, பொது நலவாயப் பணியகத்தின் இணை அமைச்சர் ஹுகோ ஸுவைர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எந்தவொரு உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையும், நம்பகமானதாக சுதந்திரமானதாக வெளிப்படைத் தன்மை கொண்டதாக, சர்வதேச சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும்.

இன்று வரை இலங்கை அரசு செயற்படுத்திய நல்லிணக்க ஆணைக்குழு உள்ளிட்ட எந்தவொரு விசாரணை ஆணைக் குழுவும் சர்வதேச தரத்துக்கு அமைவாகச் செயற்பட வில்லை.

கடந்த செப்ரெம்பர் மாதம், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்குச் சென்று வந்த பின்னர் சமர்ப்பித்த அறிக்கையில், போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்துவதற்கான எந்த முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டதாகத் தமது பயணத்தின் போது கண்டறியவில்லை என்று குறிப்பிட்டிருந்ததையும் ஸுவைர் சுட்டிக்காட்டினார்.

கடந்த நவம்பரில் நடந்த பொதுநலவாயத் தலைவர்களின் உச்சி மாநாட்டின் போது, நம்பகமான தேசிய பொறுப்புக் கூறும் செயல் முறையை எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் முறைப்படி ஆரம்பிக்காது போனால், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அனைத்துலக விசாரணை அழைப்புக்குப் பயன்படுத்து வோம் என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன், ஜனாதிபதியிடம் தெளிவாக கூறியிருந் தமையையும் ஸுவைர் இந்தச் சந்தர்பத்தில் நினைவூட்டினார்.

எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் உண்மையான நம்பகமான செயல்முறைகள் ஆரம்பிக்கப்பட்டால், நாம் அதற்கு முழுமையான ஆதரவை வழங்குவோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :