சமூகச் சீர்கேடுக்களுக்குள் மூச்சுத் திணறும் தமிழர் தாயகம்

3.1.14

மிக நீண்ட தொண்மையினைக் கொண்டது அழகிய தமிழ் மொழி. அதேபோன்ற அழகிய இலட்சிய வேட்கையினைக் கொண்டது ஈழத்தமிழ் மக்களுடைய போராட்டம். கடந்த 60 வருடத்திற்கும் மேலாக அகிம்சை வழியிலும் சரி, ஆயுத வழியிலும் சரி எமது போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருந்தது. அந்தக் காலப்பகுதிகளில் ஈழத்தமிழ் மக்களுடைய போராட்டத்தில் ஒரு வேகம் இருந்து வந்தது. ஆனால் 2009ம் ஆண்டுடன் பெரும் இழப்பினைச் சந்தித்த எமது இனம் ஆயுதப் போராட்டத்தின் மௌனத்துடன் இலட்சிய பயணத்தின் வேகத்தினை குறைத்து விட்டது.

எமது இலட்சியப் பயணப் போராட்டத்தின் வேகம் குறைந்து சென்றமைக்கு பல காரணங்களினை கூறிவிடலாம். ஆனாலும் இலட்சியப் பயணத்தின் பாதையில் நாம் ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து பயனிப்பதை கைவிட்டு விட்டோம். இல்லை இல்லை கைவிட நிர்ப்பந்திக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றோம்.

எதுவாக இருந்தாலும் சரி எமது புனிதமான இலட்சியப் பயணமானது இலக்கினை எட்டியே தீரும் என்பது அனைவருடைய மனங்களிலும் கல்மேல் எழுதப்பட்ட எழுத்துக்கள் போல் பதிந்து இருக்கின்றது. இருப்பினும் அவ்வாறான ஒரு இலட்சியத்தினை எமது தமிழ் இனம் அடையும் போது தமிழர் என்ற அடையளத்தினையும், பாரம்பரியத்தினையும் தொலைத்தவர்களாகவே நாம் இருக்கப் போகின்றோம்.

எங்களுடைய நிலங்கள் இன்று எங்களிடம் இல்லை. எமது உறவுகளைக் கொன்றுகுவித்த வஞ்சகர்களால் அது கபளீகரம் செய்யப்பட்டு ஆட்சி செய்யப்படுகின்றது. எங்களுடைய கடலுக்குள் நாங்கள் கால்நனைக்க முடியாது. ஆனால் அந்நியர்கள் வந்து எங்கள் கடலில் மீன்படிக்கின்றார்கள். எங்களுடைய வரலாற்றுப் பதிவுகள் அனைத்தும் இடித்தழிக்கப்பட்டுவிட்டது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் எங்களுடைய கலை, சலாசாரம், பண்பாடு என்பனவும் நிலைகுலைய வைக்கின்றது.

தமிழ் மக்களின் கலாசாரத்தில் உலகமே மதிப்பு வைத்திருக்கின்றது என்று சொன்னால் மிகையாகாது. அதிலும் யாழ்ப்பாணம் என்றால் கலாசாரத்தில் பெயர்போன இடம். ஆனால் இன்று சிறீலங்கா அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளாலும் நவநாகரீகத்தின் போக்கினாலும் தலைகீழாக மாறிவருகின்றது. இதிலும் வெளிநாட்டு மோகத்தினால் எமது தமிழ் சமூகம் தடம்புரண்டு போகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இருந்த கட்டுக்கோப்புகள் அனைத்தும் தற்போது தகர்த்தெறியப்பட்டுவிட்டது. இளவயது கர்ப்பம், பாலியற் துஸ்பிரயோகம், சிறுவர் துஸ்பிரயோகம், கொலை, கொள்ளை.... என்று சொல்லிக்கொண்டே போகலாம். இருப்பினும் வெளிநாட்டு மோகத்தினால் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துயரமான சம்பவம் ஒன்றினை எல்லோரும் அறிந்திருப்பீர்கள்.

யாழ்ப்பாணம் இராசபாதம் வீதி என்றாலே அங்கு மிக விசாலமாக அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லம்தான் அனைவருக்கும் ஞபகம் வரும். ஆனால் அது இப்போது சிறீலங்கா இராணுவத்தின் 51-2வது படையணி முகாமிட்டுள்ளது. இந்த முகாமிற்குப் பின்னால் உள்ள சிறிய கிராமமே உரும்பிராய் செல்வபுரம் என அழைக்கப்படுகின்றது. கல்வீடுகள் என்று சொல்லிக் கொள்ளும் வகையில் பெரிய வீடுகள் அங்கு இல்லை. குடிசைகளும், அரைநிரந்தர வீடுகளுமே எங்குபார்த்தாலும் இருக்கும்.

அங்கு கடந்த 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை சிசு ஒன்றின் சடலம் புதைக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்களால் இனங்காணப்பட்டிருந்தது. அச் சடலம் மறுநாள் திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டிருந்து. மீட்கப்பட்ட சிசுவின் சடலம் பாதி எரிந்த நிலையில் காணப்பட்டிருந்தது.

இச் சம்பவம் தொடர்பாக அன்றில் இருந்தே விசாரணைகள்

மும்முரப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்ட பற்றைக்காணியில் இருந்து சுமார் 300 மீற்றர் தூரத்தில் ஒரு வீடு இருப்பதாகவும், அங்கு நிறைமாத கர்ப்பிணி ஒருவர் இருந்தாகவும் அவருடைய குழந்தையாக இது இருக்கக் கூடும் என்றும் கிராம வாசிகள் காவல்துறையினரிடம் தெரிவித்திருந்தனர். அதன்படி குறித்த வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அந்த வீடு பூட்டப்பட்டிருந்தது, ஆனால் வீட்டில் இருந்து பொருட்கள் அனைத்தும் அந்தந்தப்படியே இருந்தன. இதன் பின்னர் அவ்வீட்டில் இருந்தவர்களுடைய தகவல்களை பெற்றுக் கொண்ட காவற்துறையினர் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதற்கிடையில் சிசுவின் சடலம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது சிசு 8 மாதங்களில் பிரசுவிக்கப்பட்டுள்ளது என்றும், நலமாக பிறந்த சிசு கொலை செய்யப்பட்டுள்ளது என்றும் தெரியவந்தது. குறித்த சிசுவின் தாய் முறையாக குழந்தை பிரசுவிக்காத காரணத்தினால் பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல்யமான அனைத்து வைத்தியசாலைகளையும் நாட்டிய அவருக்கு எந்த ஒரு வைத்தியரும் சிகிச்சை அழிக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.

இதனால் வேறுவழியின்றி குறித்த சிசுவின் தாயார் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கடந்த 24ம் திகதி செவ்வாக்கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தகவல் அறிந்த காவல்துறையினர் அவரை காவலில் வைத்து விசாரணை மெற்கொண்டனர். இதன்போதுதான் மீட்கப்பட்ட சிசுவின் சடலம் தன்னுடைய குழந்தைதான் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குழந்தையினை விரைவில் பிரசுவித்துக் கொள்வதற்காக குறிப்பிட்ட சில மாத்திரைகளை தான் உட்கொண்டதாகவும், நலமாக பிறந்த குழந்தை கொலை செய்யப்பட்ட பின்னர், பாடசாலை புத்தகப் பைக்குள் போட்டு, அதனை உரப்பைக்குள் போட்டு மண்ணிற்குள் புதைத்ததாகவும் தெரிவித்துளத்ளார்.
இதுமட்டுமல்லாமல் தன்னுடைய கணவர் அவுஸ்திரேலியாவில் பணிபுரிந்து வந்த காரணத்தினால் தானும் அங்கு செல்வதற்காக கொழும்பில் சில மாதங்கள் தங்கியிருந்ததாகவும், அதன்போது வெளிநாட்டு முகவர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்ட காரணத்தினால் தான் கற்பமுற்றதாகவும், குறித்த வெளிநாட்டு முகவர் தப்பித்து கம்பல் மூலம் அவுஸ்திரேலியா சென்றுவிட்தாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் குடும்பத்தில் குழப்பங்கள் வரும் என்ற காரணத்தினால் குழந்தையினை கருவிலேயே அழிக்க முற்பட்டபோதும் அது கைகூடவில்லை, அதனால்தான் பிறந்த குழந்தையினை கொலை செய்ய வேண்டி நேரிட்டது என்றும் எவர் தெரிவித்துள்ளார். அக்குழந்தையினைக் கொலை செய்வதற்கு வேறு சிலரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச் சம்பவமானது தனியே செல்வபுரக் கிராமத்தில் இருப்பவர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமான தமிழ் மக்களையும் தலைகுனிய வைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ் மக்களின் கலாசாரத்திற்கு ஒவ்வாத ஒரு செயற்பாடு செய்யப்பட்டது மட்டுமல்லாமல், யாரோ செய்த பிழைக்காக எதுவுமே தெரியாத சிறிய உயிர் இங்கு பறிக்கப்பட்டுள்ளது.

எங்களுக்கே உரித்தான கலாசாரம் என்றும் அழிந்துவிடக் கூடாது. இது தனி ஒருவனால் நினைத்து நடைமுறைப்படுத்தக்கூடிய விடையம் அல்ல. ஒவ்வொரு தமிழ் மகனுடைய உள்ளத்திலும் இருந்து எழ வேண்டும்.

நன்றி: ஈழமுரசு

0 கருத்துக்கள் :