எனது மகள்கள் அமெரிக்காவில் தனியாக என்ன செய்கிறார்களோ..? தேவயானி பேட்டி

12.1.14

அமெரிக்காவின் நியூ யார்க்கில் இந்திய துணை தூதராக இருந்த தேவயானி கோப்ரகடே (39) ‘விசா’ மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
மேலும், தேவயானிக்கு தூதரக ரீதியிலான சிறப்பு சலுகைகளும், விலக்கு உரிமைகளும் வழங்கப்பட்டது. அதனால் எரிச்சல் அடைந்த அமெரிக்கா அவற்றை திரும்ப பெறுமாறு இந்தியாவை வலியுறுத்தியது. ஆனால் முடியாது என இந்தியா மறுத்து விட்டது.

எனவே நியூயார்க் கோர்ட்டில் தேவயானி ஆஜர் ஆகாத நிலையில் நேற்று முன்தினம் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரை நாட்டை விட்டு அமெரிக்கா வெளியேற்றியது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு தேவயானி நாடு திரும்பினார்.
விதிவிலக்கு உரிமையை தேவயானி இழந்து விட்டதால் விசா மற்றும் குடியுரிமை நடை முறைகளில் தேடப்படும் நபராக குறிக்கப்படுவார். அவரை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும், சாதாரணமான முறையில் அமெரிக்காவுக்கு வரவும் தேவயானியை அனுமதிக்க மாட்டோம். மீறி வந்தால் அவர் உடனடியாக கைது செய்யப்படுவார் என்றும் நேற்று அமெரிக்கா மிரட்டியுள்ளது.

இந்தியா திரும்பியுள்ள தேவயானியை டெல்லியில் உயர்பதவியுடன் பணியமர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புது டெல்லியில் ஆங்கில பத்திரிகைக்கு பேட்டியளித்த தேவயானி, ‘துணையாக நான் அருகில் இல்லாமல் அமெரிக்காவில் தனியாக இருக்கும் எனது இரண்டு மகள்களும் என்ன செய்கிறார்களோ?’ என்று வேதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தேவயானி கூறியதாவது:-

தொடர்ந்து தான் அமெரிக்காவிலேயே பணிபுரிய வேண்டும். மகள்களும் அங்கேயே தங்கி படிக்க வேண்டும் என்று எனது கணவர் முடிவு செய்து விட்டால் அமெரிக்காவுக்கு நான் செல்லவே முடியாது என்ற நிலையில் எங்கள் குடும்பம் ஒன்றும் வாய்ப்பே கிடையாதா? என்பதை நினைத்துப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது.

எனது 4 மற்றும் 7 வயது மகள்கள் இருவரும் என்னைவிட்டு பிரிந்து இருந்ததே கிடையாது. நான் திரும்பவும் அமெரிக்காவுக்கு செல்ல முடியாது என்பதை புரிந்துக் கொள்ள முடியாத வயதில் இருக்கும் எனது மகள்களை நினைத்து நான் மிகவும் கவலைப்படுகின்றேன்.
இந்தியாவுக்கு வந்த பிறகு அவர்களுடன் நீண்ட நேரம் போனில் பேசினேன். ’அம்மா.. நீங்கள் எப்போது வீட்டுக்கு வருவீர்கள்?’ என்று எனது இளைய மகள் கேட்டாள். அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சில நிமிடங்கள் கண்ணீருடன் வாயடைத்து நின்றுவிட்டேன். உதவிக்கு கூட யாருமின்றி என் மகள்களை கணவரிடம் ஒப்படைத்து விட்டு வந்துள்ளேன்.

குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்ற அவர் என்ன சிரமப்படுகிறாரோ..? என்னை பார்க்க முடியாமல் எனது மகள்கள் எப்படி தவித்துக் கொண்டிருக்கிறார்களோ.. இந்நேரம் என்ன செய்கிறார்களோ’ என்பதை நினக்கும்போது என்னால் துக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :