அமெரிக்க பிரேரணை கடுமையானது அது வெற்றிபெற ஆதரவு தேடுவோம்; திருமலையில் சம்பந்தன் தெரிவிப்பு

27.1.14

மார்ச் மாதம் ஜெனிவாவில் நடக்க இருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில் இலங்கை அரசு மீது அமெரிக்கா கொண்டு வரும் பிரேரணை கடுமையானதாக இருக்கும் என்றும் அது வெற்றி பெறுவதற்கு உலக நாடுகளின் ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரும் என்றும் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் தலை வரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

"அமெரிக்காவால் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள பிரேரணை கடுமையாக இருக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம். அந்தப் பிரேரணை  வடக்கு, கிழக்குத் தமிழருக்குத் தீர்வைப் பெற்றுத்தரக்கூடியதாக அமைய வேண்டும் என நாம் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபை உறுப்பு நாடுகளுடனும் நாம் பேச்சு நடத்தவுள்ளோம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது.

இதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில் தமக்கு எதிராகக் கடுமையான பிரேரணையை அமெரிக்கா கொண்டுவரவுள்ளமையை இலங்கை அரசு நன்றாக உணர்ந்துவிட்டது.

இந்த நிலையில், அந்தப் பிரேரணையைத் தடுப்பதற்கு - தோற்கடிப்பதற்கு ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் நாடுகளுடன் அரசு இரக சியமான முறையில் பேச்சுகளை நடத்தத் தொடங்கியுள்ளது. எனினும், சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் இந்தக் கடுமையான பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற வைக்கும்.

அரசு முட்டுக்கட்டை 
வடமாகாணசபைத் தேர்தல் நடைபெற்று நான்கு மாதங் கள் நிறைவடைந்துவிட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் வடமாகாணசபை உள்ளது. ஆனால், இந்த மாகாண சபையை முறையாக இயங்கவிடாமல் மஹிந்த அரசு தொடர்ந்து முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகின்றது.

இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­வுடன் வடக்கு முதல்வர் பேச்சு நடத்தியிருக்கின்றார். இந்தப் பேச்சின் போது வடமாகாண சபை பிரதம செயலாளரை மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை தற்போதைக்கு நிறைவேற்ற முடியாது என்றும்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களின் ஏனைய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவேன் என்றும் வடக்கு முதல்வரிடம் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். ஆனால், அவர் உறுதியளித்த விடயங்கள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் ஆளுகைக்குள் இருக் கும் வடக்கு மாகாணசபை இலங்கையிலுள்ள ஏனைய மாகாண சபைகளுக்கு முன் மாதிரியாக இருந்துவிடும் என்ற அச்சத்தால் இந்த மாகாண சபைக்குத் தொடர்ந்து முட்டுக் கட்டைகளைப் போட்டுவரு கின்றது மஹிந்த அரசு.

தமிழர் ஒற்றுமையாக போராடவேண்டும்
இலங்கை அரசு எம் மீது தொடர்ந்து அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து வருவதால் அதற்கெதிராக தமிழர் நாம் ஒற்றுமையாக இருந்து ஜனநாயக வழியில் போராட வேண்டும்.

கிராமங்கள், பிரதேசங்கள், மாவட்டங்கள் ரீதியில் பரப்புரைகளை நாம் முன்னெடுக்கவேண்டும்.
 
கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை, மாகாணசபை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிக வும் அவதானத்துடன் இருக்க வேண்டும். எமக்கெதிராக சதி வலைகளைச் செய்ய சிலர் முயற்சித்து வருகிறார்கள்.

அண்மையில் கூட்டமைப் பின் ஆளுகைக்குட்பட்ட உள் ளூராட்சி சபைகளின் வரவு -செலவுத் திட்டங்கள் இந்தச் சதி வேலைகளால் தோற்கடிக்கப் பட்டுள்ளன. இனியும் நாம் இதற்கு இடமளிக்கக்கூடாது - என்றார்.

தமிழரசுக் கட்சியின் இந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, பொன். செல்வராஜா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், சி.சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரட்ணசிங்கம் மற்றும் கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி, வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், மத்திய செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

0 கருத்துக்கள் :