அநியாயமாக நடக்கிறதாம் அமெரிக்கா - வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு முறையிடப் போகிறார் பீரிஸ்

17.1.14

அமெரிக்கத் தூதரகத்தின் டுவிட்டர் செய்தி தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் அமெரிக்கத் தூதரகத்தின் டுவிட்டர் பக்கத்தில், 2009 ஜனவரியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் சிறிலங்கா படையினரின் பீரங்கித் தாக்குதலில் கொல்லப்பட்ட இடம் என்று சென். அந்தனிஸ் மைதானம் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.
இது சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதுகுறித்து தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.
எனினும் அது அமெரிக்காவின் அதிகாரபூர்வ நிலைப்பாடே என்று அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் கூறியிருந்தார்.

இந்தநிலையிலேயே, இது நியாயமற்றது என்றும், சோடிக்கப்பட்ட, நிரூபிக்க முடியாத குற்றச்சாட்டு என்றும் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அரசாங்கம் இதுகுறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்க முடிவு செய்துள்ளது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரீஸ் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து அமெரிக்காவின் இந்த நியாயமற்ற கருத்து தொடர்பாக முறையிடத் திட்டமிட்டுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துக்கள் :