ஜெனிவா பிரேரணையை வலுப்படுத்த பிரித்தானியா நடவடிக்கை

25.1.14

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக, எதிர்வரும் ஜெனீவா மாநாட்டில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணையை மேலும் வலுச்சேர்க்க முயற்சிப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளர் மார்க் சைமண்ட்ஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
நேற்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் பிரித்தானிய வெளிவிவகார திணைக்களம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்: ஆதரவு திரட்டும் மும்முரத்தில் பிரிட்டனும் அமெரிக்காவும்

ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழு கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக சமர்பிக்க உள்ள யோசனைக்கு ஆதரவு திரட்டும் பாரிய பணிகளில் பிரித்தானியாவும் அமெரிக்காவும் ஈடுபட்டுள்ளன.
பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகம் முக்கிய ஆதரவாளரான அமெரிக்காவுடன் இணைந்து ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பிரித்தானிய அமைச்சர் மார்க் சிம்மோன்ட்ஸ் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன் மனித உரிமை ஆணைக்குழுவில் அமைச்சர்கள் மட்டத்திலான பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இலங்கை 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னதாக நம்பகமான உள்நாட்டு வழிமுறைகளை ஆரம்பிக்கவில்லை என்றால், ஐ.நா மனித உரிமை ஆணையாளருடன் இணைந்து பணியாற்றி சர்வதேச விசாரணை ஒன்றுக்கான அழைப்பு விடுக்கப்படும்.
இந்த விடயத்தில் சர்வதேச ஆதரவை கட்டியெழுப்புவதில் பிரித்தானிய முக்கிய பங்கு வகிக்கும்.
கொழும்பில் கடந்த வருடம் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பிரித்தானியா கலந்து கொண்டமை தொடர்பில் மனித உரிமை கண்காணிப்பகம் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் மேற்கொண்டு வரும் விமர்சனங்களை அமைச்சர் நிராகரித்துள்ளார்.


0 கருத்துக்கள் :