சிறிலங்கா படையினர் மூலம் சிங்களவர்களின் சனத்தொகையை அதிகரிக்கும் கோத்தாவின் திட்டம் பெரு வெற்றி

25.1.14

சிங்களவர்களின் சனத்தொகையை உயர்த்தும் நோக்கில், சிறிலங்கா படையினர் மூன்றாவது குழந்தையை பெற்றுக் கொள்ள ஊக்குவிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டம் ஒரே ஆண்டில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

மூன்றாவது குழந்தையைப் பெறும் சிறிலங்கா படையினருக்கு ஒரு இலட்சம் ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கும் திட்டம் 2012ம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்த வரவுசெலவுத் திட்ட முன்மொழிவில் இடம்பெற்றிருந்தது.
இதற்கு நாடாளுமன்றம் அனுமதியளித்ததை அடுத்து, கடந்த ஆண்டு உடனடியாகவே நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் மூன்றாவது குழந்தையைப் பெற்றுக் கொண்ட 7029 சிறிலங்கா படையினருக்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்காக 702.9 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் சார்பில், சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நேற்று நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு உதவி பெற்ற படையினரின் விபரங்களை தொகுதி, மாவட்ட ரீதியாக வெளிப்படுத்துமாறு ஐதேக உறுப்பினர் ரவி கருணாநாயக்க விடுத்த வேண்டுகோளை, அது படையினரின் தனிப்பட்ட குடும்ப விபரங்கள் என்று கூறி அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நிராகரித்து விட்டார்.
சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த திட்டம் சிங்களவர்களின் சனத்தொகையை அதிகரிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டதாகும்.

சிறிலங்கா ஆயுதப்படைகளில் மட்டுமே, 99 சதவீதமும் சிங்களவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
எனவே தான் ஆயுதப்படையினர் மூன்றாவது குழந்தையை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்க சிறிலங்கா அரசாங்கம் முன்வந்திருந்தது.

இந்த திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு உதவி பெற்ற சிறிலங்கா படையனரின் விபரங்களை வெளியிட்டால், அந்த உண்மை வெளிப்பட்டு விடும் என்பதாலேயே, அதுதொடர்பான ஆவணங்களை சிறிலங்கா அரசாங்கம் வெளியிட மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :