பிரான்ஸ் ஈழத்தமிழர் ஒருவருக்கு வழங்கிய அகதி அந்தஸ்தை மீளப்பெற்றுள்ளது

11.1.14

ஈழத்தமிழர் ஒருவருக்கு வழங்கிய அகதி அந்தஸ்தை, பிரான்ஸ் அகதிகள் திணைக்களம் மீளப்பெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட அந்த ஈழத்தமிழர் சிறீலங்கா அரசாங்கத்துடன் நிர்வாக ரீதியாக தொடர்பு வைத்துக்கொண்டதே இதற்கு காரணம் என்றும் அத்திணைக்களம்  தெரிவித்துள்ளது.
 
2007 ம் ஆண்டு பிரான்சுக்கு சென்ற குறித்த ஈழத்தமிழர் 2008ம் ஆண்டு அகதியாக அங்கீகரிக்கப்பட்ட பின்னர் தனது மனைவியை பிரான்சுக்கு அழைத்துள்ளார். அவரது மனைவிக்கு தற்காலிக வதிவிட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன.

இந்த குழந்தைகளுக்கு கடவுச் சீட்டு எடுப்பதற்காக அவர் பாரிசிலுள்ள சிறீலங்கா தூதரகத்துக்கு மூன்று தடவைகளுக்கு மேல் சென்றுவந்துள்ளார்.
அத்துடன் சிறீலங்கா தூதரக அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் ஊரில் இருக்கும் தனது உறவினர்கள் மூலமாக தனது பிறப்பு அத்தாட்சி பத்திரத்தையும் சிறீலங்கா அரசாங்கத்திடம் இருந்து பெற்றுள்ளார்.
 இந்த விபரங்கள் பிரான்ஸ் அகதிகள் திணைக்களத்திற்கு தெரியவந்தைதையடுத்து அந்த அமைப்பு அந்த இலங்கைத் தமிழருக்கு வழங்கிய அகதி தகுதி நிலையை திரும்பப் பெற்றுள்ளது.
இது தொடர்பாக அந்த திணைக்களம் அவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்..

2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் CNDA எனப்படும் அகதிகளுக்கான மேன்முறையிட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அகதிகளுக்கான ஜெனீவா சட்டத்தின் 1சி 1 சரத்தின் கீழ் உங்களுக்கு வழங்கப்பட்ட அகதி தகுதி நிலையை பாரிசிலுள்ள சிறீலங்கா தூதரகத்துக்கு 3 தடவைகளுக்கு மேல் சென்று வந்தது, நிர்வாக ரீதியாக தொடர்பு கொண்டது. சிறீலங்காவில் உள்ள அரச நிர்வாகத்துடன் எந்தவித தடங்கலுமின்றி தொடர்பு கொண்டது ஆகிய காரணங்களின் அடிப்படையில் மீளப் பெற்றுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசாங்கத்தால் அச்சுறுத்தல் உள்ளது என்று அகதி தகுதிநிலை பெறுவதற்காக நீங்கள் தெரிவித்த காரணங்கள் சிறீலங்கா அரசாங்கத்துடன் நீங்கள் எந்தவித நெருக்கடிகளுமின்றி தொடர்பு கொண்டதன் மூலம் வலுவற்றதாகியுள்ளதென தெரிவித்துள்ள பிரான்ஸ் அகதிகள் திணைக்களம் (OFPRA)) வெளிநாட்டவர் வருகை மற்றும் தங்குவதற்கான உரிமை தொடர்பான சட்ட சரத்துக்களின் கீழ் தங்களது முடிவை ஒரு மாத காலத்துக்குள் CNDA எனப்படும் அகதிகளுக்கான மேன்முறையிட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.
புலம் பெயர்ந்த தமிழர்களுடைய வரலாற்றில் பிரான்சில் ஒருவருக்கு வழங்கப்பட்ட அகதி தகுதிநிலை திரும்பப் பெறப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

0 கருத்துக்கள் :