விடுதலைப் புலிகள் வெற்றி பெற்றிருந்தால் போர்க்குற்றம் சுமத்தப்பட்டிருக்காது

18.1.14

யுத்தத்தில் விடுதலைப் புலிகள் வெற்றி பெற்றிருந்தால் அந்த அமைப்புக்கு எதிராக எவ்விதமான போர்க்குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டிருக்காது என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் நடைபெற்ற போரில் விடுதலைப் புலிகள் அமைப்பு வெற்றிப் பெற்றிருந்தால் எந்த சர்வதேச நாடும் போர்க்குற்றங்களை சுமத்தியிருக்காது.
ஜெனிவாவில் யோசனைகளை நிறைவேற்றியிருக்காது. இலங்கையில் மனித உரிமை பற்றி தேட எவரும் வந்திருக்க மாட்டார்கள்.

சர்வதேச நாடுகளின் தலைவர்கள் விடுதலைப் புலிகளுடன் புதிய நாட்டை எப்படி உருவாக்குவது என்பது பற்றி வன்னயில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பார்கள்.
விடுதலைப் புலிப் பயங்கரவாதிகள் கொடூரமான முறையில் மக்களை கொலை செய்து, சொத்துக்களை அழித்து கொண்டிருந்த போது மனித உரிமை பற்றி பேச ஸ்டீவன் ராப் உள்ளிட்ட சர்வதேச பிரதிநிதிகள் எங்கிருந்தனர்?
அரந்தலாவயில் பிக்குமார் வெட்டிக் கொலை செய்யப்பட்ட போதும், காத்தான்குடியில் முஸ்லிம் பள்ளிவாசலில் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட போதும், ஸ்ரீ மஹா போதி, தலதா மாளிகை போன்ற வணக்கஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதும், கிளைமோர் குண்டு தாக்குதலை நடத்தி கொப்பிட்டிகொல்லவாயில் சாதாரண மக்களை புலிகள் கொலை செய்த போதும் சர்வதேச பிரதிநிதிகள் ஏன் ஒரு வார்த்தையை கூட பேசவில்லை. இந்த சம்பவங்கள் நடந்த போது அவர்கள் எங்கிருந்தனர்?.
விடுதலைப் புலிகள் இன்று இல்லை. அவர்களை போஷித்து வளர்த்த மேற்குலக அமைப்புகள் இன்று களத்தில் குதித்துள்ளன.

மெதுவாக அபிவிருத்தியடைந்து முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நாட்டை மீண்டும் பின்நோக்கி இட்டுச் செல்லவே இவர்கள் முயற்சித்து வருகின்றனர்.
தமிழ் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் சிறிய எதிர்ப்பு மனநிலை இருக்குமாயின், அதனை அதிகப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் தேவை. இதன் மூலம் மக்கள் மத்தியில் இருக்கும் ஐக்கியத்தை சிதைப்பதே அவர்களின் நோக்கம்.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் அமெரிக்க இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற யோசனையை கொண்டு வரவுள்ளது.
இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

சர்வதேச விசாரணை என்றால் என்ன?. புலிகளை தாக்கியது போர்க்குற்றமா?. புலிகள் மீது தாக்குதல் நடத்தாது இரு தரப்பும் அங்காங்கே இருந்து கொண்டு புலிகளுடன் நட்பு பாராட்டிக் கொண்டிருந்தால் இப்படியான எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருக்காது.
புலிகளின் போரில் வென்றிந்தால் போர்க்குற்றம் பற்றி தேடுவதற்கு எதுவும் இருக்காது. வெற்றி பெற்ற அரசாங்கம் இன்று போர்க்குற்றவாளியாக்கப்பட்டுள்ளது.
போரில் வெற்றி பெற்றதான் காரணமாகவே வெற்றி பெற்றவர்களை போர்க்குற்றவாளிகள் என முத்திரை குத்துகின்றனர் என்றார்.

0 கருத்துக்கள் :