அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பாடுபடுவேன்; வடக்கு முதல்வர்

13.1.14

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முயற்சிகளை எடுப்போம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
அதன்படி கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலைக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட வடக்கு முதல்வர் அடங்கிய குழுவினர் கைதிகளைச் சந்தித்ததுடன் அவர்களுக்கு பொங்கல் பரிசுகளையும்  வழங்கி வைத்தனர்.

அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 70 பேரை மாத்திரமே சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தது. இருப்பினும் சகலரையும் ஒரே நேரத்தில் சந்திப்பதற்கான வாய்ப்பு கிட்டவில்லை. அதன்படி ஏழு அல்லது எட்டுபேர் அடங்கிய குழுக்களாகவே இவர்களை நாம் சந்திக்க முடிந்தது.
இதன்போது பெண் அரசியல் கைதிகள் நால்வரையும்  சந்தித்தோம். எனினும் இதுவரையும் அவர்களுக்கான வசதிகள் சிறைச்சாலைக்குள் செய்துகொடுக்கவில்லை என முறையிட்டுள்ளனர்.
மேலும் அதிலொரு பெண் கைதியின் கணவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களுக்கு எவ்விதமான வருமானமும் இல்லாமையினால் சவர்க்காரம் கூட வாங்கிக்கொள்ள முடியாமல் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அரசியல் கைதிகள் சகலரையும் ஒரே மாதிரியாக பார்க்க முடியாது. அவர்களில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளோர், விளக்கமறியல் கைதிகள், வழக்கு தொடரப்பட்டோர் மற்றும் தண்டனை விதிக்கப்பட்டோர் என்று பல வகையான தமிழ் அரசியல் கைதிகள் இருக்கின்றனர்.
வழக்குகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றவர்கள் தங்களுக்கு சட்டத்தரணிகளின் ஆதரவு போதுமானதாக இல்லையென்றும் சட்டத்தரணிகளின் அனுசரணையை பெற்றுத்தருமாறும் கேட்டுக்கொண்டனர்.
எனினும் நாம் இவர்களை சுதந்திரமாகவே சந்தித்தோம். எந்தவிதமான இடையூறுகளும் இருக்கவில்லை.

இருப்பினும் சகலரையும் ஒரே நேரத்தில் சந்திக்க வேண்டுமாயின் அமைச்சரின் அனுமதி தேவை. அமைச்சர் தற்போது நாட்டில் இல்லை.
அவர்கள் பலருக்கும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. இது குறித்து ஜனாதிபதியை சந்தித்த போது தெளிவுபடுத்தியிருந்தேன்.
எனினும் அவர், அரசியல் கைதிகளின் முழு விபரங்களையும் என்னிடம் கேட்டதுடன் அவர்களது முழு விபரங்களுடனும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவை சந்திக்குமாறும் எனக்கு தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் அரசியல் கைதிகளின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றி அவர்களுக்கு நிவாரணம் பெற்றுகொடுக்க முயற்சிப்போம்.
இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருடன் சந்தித்து விபரங்களை கொடுப்பேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பூஸாவில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் முதலமைச்சர்  உள்ளிட்ட குழுவினர் இன்று சந்திப்பார்கள் என்று ம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துக்கள் :