பீரிஸ் இந்தியா வருவதற்கு தடை விதிக்க வேண்டும்: ராமதாஸ்

11.1.14

இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தியா வருவதற்கு தடை விதிக்குமாறு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சவும் அவரது கூட்டாளிகளும் தண்டிக்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேரில் விசாரணை நடத்திய ஐ.நா.மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை அவரது இறுதி அறிக்கையை வரும் மார்ச் 26ம் திகதி ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மனித உரிமை ஆணையத்தின் 25வது கூட்டம் வரும் மார்ச் 3ம் திகதி தொடங்கி 28ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டு மற்றும் அங்கு காணப்படும் தற்போதைய சூழல்கள் குறித்து நவநீதம்பிள்ளை தாக்கல் செய்யும் அறிக்கை குறித்து 2 நாட்கள் விவாதம் நடத்தப்படவிருக்கிறது.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து நேர்மையான விசாரணை நடத்தும்படி அந்நாட்டுக்கு மனித உரிமை ஆணையம் 2 முறை ஆணையிட்ட போதிலும் இன்று வரை எந்த நடவடிக்கையையும் இலங்கை அரசு மேற்கொள்ளவில்லை.
எனவே, ஏற்கனவே எச்சரித்தவாறு இலங்கை மீது சுதந்திரமான சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்துவது குறித்து இந்த விவாதத்தின் முடிவில் மனித உரிமை ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னொரு புறம் இலங்கை போர்க்குற்றங்கள் பற்றி விசாரணை நடத்தக் கோரி ஏற்கனவே 2 முறை தீர்மானம் கொண்டு வந்த அமெரிக்கா, இந்த முறை இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை கோரி தீர்மானம் கொண்டு வரப்போவதாக தெரிகிறது.
இத்தீர்மானம் வெற்றி பெறக்கூடும் என்பதால், இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு ஆணையிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
இதனால் கலக்கமடைந்துள்ள இலங்கை அரசு, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்படவிருக்கும் தீர்மானத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.
அதன் ஒருகட்டமாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் எதிர்வரும் 28ம் திகதி இந்தியா வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்திக்கும் அவர், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை ஆதரவாக வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்வார் என கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் தூதரகங்கள் இலங்கையில் இல்லாத நிலையில், டெல்லியில் உள்ள அந்த நாடுகளின் தூதர்களையும் சந்தித்து ஆதரவு திரட்ட பீரிஸ் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கைக்கு தண்டனையும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதியும் பெற்றுத்தர வேண்டிய கடமை இந்தியாவுக்கு உள்ளது.

அவ்வாறு இருக்கும் போது ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைப்பதை தடுக்கும் நோக்குடன், மற்ற நாடுகளின் ஆதரவை திரட்டுவதற்காக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் டெல்லி வருவதை அனுமதிக்கக் கூடாது.
எனவே, பீரிஸ் இந்தியா வருவதற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவே கொண்டு வருவதுடன், அதை வெற்றி பெறச் செய்வதற்கான முயற்சிகளையும் இப்போதே தொடங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :