மன்னார் மனித புதைகுழியிலிருந்து மேலும் 5 எலும்புக்கூடுகள்: இதுவரை 53 எலும்புக்கூடுகள் மீட்பு

28.1.14

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரட்ணத்தின் முன்னிலையில் 16 ஆவது தடவையாக தோண்டப்பட்ட போது மேலும் 5 மனித எலும்புக்கூடு உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் இதுவரை மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ண தலைமையில் மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் தோண்டப்பட்டது.

இதேவேளை  திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி உள்ள இடத்திற்கு வருகை தந்த குற்ற புலனாய்வுப்பிரிவினர் (சி.ஐ.டி) 4 ஆவது  நாளாகவும் இன்று  செவ்வாய்க்கிழமை தமது விசாரணைகளை அங்கு முன்னெடுத்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை மனித புதைகுழி சுமார் 2 மீற்றர் வரை அகலப்படுத்தப்பட்டு தோண்டப்பட்டுள்ளது.

மன்னார் நீதிவானின் உத்தரவிற்கமைவாக மன்னார் பொது வைத்தியசாலையில் பாதுகாப்பான இடம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை வரை 16 பெட்டிகளில் 18 எலும்புக்கூடுகள் பொதி செய்யப்பட்டு வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் மதியம் 2 மணிவரை குறித்த பணி இடம் பெற்றது.

மீண்டும் நாளை புதன்கிழமை மன்னார் நீதிவான் முன்னிலையில் புதை
குழி தோண்டும் பணிகள்  இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



 

0 கருத்துக்கள் :