கடத்தப்பட்டவர்களின் உறவுகளும், துயர் வழிந்த கண்ணீரும்

29.12.13

கடத்தல்,காணாமல் போகும் சம்பவங்கள் யுத்தம் முடிவடைந்த பின்னரும் வாரத்துக்கு ஒரு சிலராவது காணாமல் போய்க் கொண்டேதான் இருக்கின்றார்கள். நாட்டில் கடத்தல்கள் இல்லை.
யாரும் காணாமல் போகவில்லை என்று சொல்வதிற்கில்லை அது தொடர்ந்து ஒரு நிழல் போல நடந்து கொண்டு தான் இருக்கின்றது.கடத்தல்காரர்களின் நாடகம் பல கோணங்களில் பல வடிவங்களில் அரங்கேற்றப்பட்டுத் தான் இருக்கிறது.

கடத்தல்காரர்களால் கடத்தல்,காணாமல் என்பது போர்க்காலங்களில் ஒரு மாயத்தோற்றத்தில் யுத்த சந்தேக நபர்களை கடத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள் அவர்கள் போராளிகளையும்,தமிழர்களையும் மட்டுமின்றி மனித உரிமை மீறல் நடவடிக்கைகளைக் சுட்டிக் காட்டும் எந்த நபரையும் அள்ளிச் சென்றுள்ளனர்.அதிலும் இளைஞர்கள்,யுவதிகள்,குடும்பத்தார்கள்,குடும்பப் பெண்கள் ,மதகுருமார்கள்,ஊடகவியளார்கள்,சமூகப் பிரதிநிதிகள் என ஆயிரக்கணக்கான தமிழர்கள் யுத்த முடிவுக்கு பின்னரும் இன்னொரு போராட்டத்தை உருவாக்க எத்தனிக்கின்றார்கள் அல்லது நாட்டின் இறைமைக்கு பங்கம் விளைவிக்கின்றார்கள் என்ற போர்வையில் கடத்தப்படுகின்றார்கள்.

கடத்திச் செல்லப்பட்டவர்கள் பலர் கொலை செய்யப்பட்டு அவர்களின் சடலங்கள் காட்டுப்பகுதிகளிலும்,நீர் நிலைகளிலும்,தெருவோரங்களிலும் கருகிய பிணங்களாகவோ,அழுகிய பிணங்களாகவோ, தலைகள் துண்டிக்கப்பட்ட மூண்டங்களாகவோ,காணக் கிடப்பார்கள்.அல்லது காணாமல் போனவராகவோ காற்றில் கரைந்தவராகவோ மட்டும் நினைவில் இருப்பார்கள் இப்படி நடந்த நடுக்கமூட்டும் கொடூரங்கள் நாட்டில் நடைப்பெற்றுள்ளது. இன்னொரு இனம் மிக கொடிய அழிப்பின் தோற்றப்பாட்டை மக்கள் மத்தியில் மறை முகமான அச்சத்தை ஏற்படுத்தி மற்றைய இனத்தை அழித்துக் கொண்டிருக்கின்றது.

1990 களிருந்து 2009 ஆண்டு இறுதிப் போர் வரை விடுதலைப் புலிகளாய் இருந்தவர்களும் இல்லாதவர்களும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களும் காணாமல் போனார்கள் அந்த கணவனை இழந்த,மகனை இழந்த, மகளை இழந்த,சகோதரனை இழந்த தந்தை இழந்த,நண்பர்களை இழந்த உறவுகளின் போராட்டங்களும் கண்ணீருடன் தான் மிச்சமாகின்றது.

உலக அரங்கில் ஈராக்குக்கு அடுத்ததாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கையில் இலங்கை தான் முன்னிலை வகிக்கின்றது. போர்க் காலங்களில் மிகவும் அச்சம் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்த தமிழர்கள் இலக்க தகடுகளில்லாத வெள்ளை வாகனத்துக்கு பயந்து தற்கொலை செய்தும் இருக்கின்றார்கள் பல மக்கள் சித்தப்பிரமை பிடித்து வாழ்கின்றார்கள். இலங்கையில் 1971 இல் இருந்தே மனிதர்கள் காணாமல் போவது என்பது ஒரு வகையில் சாதாரண விடயமாகி விட்டது.அக்காலப் பகுதியில் ஜே.வி.பி யுடன் தொடர்புடைய சுமார் 10000 பேர் கடத்தப்பட்டு காணாமல் போய் பின்னர் கொலை செய்யப்பட்டனர்.

அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த பல்வேறு அரசாங்களின் போது வடக்கு,கிழக்கு, தெற்கு என நாட்டின் அனைத்துப்பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.இது ஒரு சாதாரண விடயமாகவே பல சந்தர்ப்பங்களில் ஆட்சியாளர்களால் கருதப்பட்டது.கண் துடைப்புக்காக விசாரணை ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன.காணாமல் போவது என்பது சில பொறுப்பு வாய்ந்தவர்கள் கூட நியாப்படுத்தியுள்ளனர்.

1970 களில் காணாமல் போன தென்னிலங்கைச் சேர்ந்த இளைஞசர்களும்,90 களின் பின்னர் காணாமல் போகும் தமிழ் இளைஞர்களும் பல்வேறு அரசியல் புரச் சூழல்களின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் எவரும் மீளத் திரும்பவில்லை. இறுதி யுத்த முடிவிலிருந்து காணாமல் போயுள்ளவர்கள் மற்றும் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அரசாங்கத்தின்

உத்தரவாதத்தையடுத்து இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களும் யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்களுக்கும் மேலாகின்றன. ஆயினும் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பிலும் தகவல் தெரியாதிருப்பவர்கள் தொடர்பிலும் அரசாங்கம் இன்னும் உரிய பதிலளிக்காமலும், பொறுப்பு கூறாமலும்,
காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்களான தமக்கு இழைக்கப்படுகின்ற அநியாயம் குறித்தும் கேள்வி கேட்பார் எவரும் இல்லையா என அவர்கள் அழுது கொண்டு உறவுகளின் புகைப்படங்களுடன் தெருக்களில் மன நோயாளிகள் போல் அலைந்து திரிகின்றார்கள்.

யுத்தகாலத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு உதவிவரும் முக்கியஸ்தர்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது காணாமல் போனவர்களுக்கு மரணப் பத்திரம் மட்டும் அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருக்கிறது.ஆனாலும் இன்னும் அவர்களின் உறவுகளை தேடி அலைந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

நாட்டில் அடிக்கடி கண்டு பிடிக்கப்பட்டு இருக்கும் மனிதப் புதை குழிகளில் சொந்தங்களின் ஒரு எலும்புத் துண்டாவது கிடைக்கும் என்ற ஆவாவில் அந்த மனித புதைக் குழி நகரங்களை தேடி பயணிக்க தொடங்கியுள்ளார்கள் அதில் ஒன்றுமில்லை என்பதால் வெறுமையுடனும், ஏக்கத்துடன் திரும்புகின்றார்கள்.நாட்டில் மனிதப் புதைகுழிகள் தங்கப் புதையல்களை விட அதிகமாக தோற்றம் பெறுகின்றது. ஜக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட மனித உரிமைகள் தினமாகிய கடந்த டிசம்பர் 10 ந்திகதி அன்று திருகோணமலையில் பிரதான பேருந்து நிலையத்துக்கு அருகாமையில் அமைதிப் வழிப் போராட்டமொன்று நடத்தப்பட்டது.

மனித உரிமைகள் பாரியளவில் பறிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கவனத்தை ஈர்க்கவும் தற்போதைய அவல நிலைக்கும் பரிகாரம் தேடுவதற்குமென காணாமல் போனோரின் பெற்றோர்,வாழ்க்கைத் துணைகள் மற்றும் நெருங்கிய உறவுகளால் அமைதி வழி ஆர்ப்பாட்டம் சிவில் சமூக மற்றும் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
முற்று முழுக்க அமைதியின் முறையாகவே பேரணி நடைப்பெற்றது.

அவர்களின் கரங்களில் நீதி வழங்குமாறு கோரும் சுலோக அட்டைகளை ஏந்திய வண்ணம் பவனி சென்றனர். முகமூடி அணிந்திருந்து முகங்களை துணியால் மறைந்திருந்த மர்ம கும்பல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதலை ஏவி தாக்கியுள்ளனர்.யுத்தம் நடைபெறும் நாட்டில் காணாமல் போவது கொலைகள் இடம் பெறுவது இயல்பான, சாதாரணமான நிகழ்வுகள் சொல்லப்படுகிறது.

காணாமல் போவது என்பது இல்லாது போவது அல்லது தொலைந்து விடுவது என்று அர்த்தப்படுகின்றது. ஆனால் இலங்கையில் காணாமல் போவது என்பது வெறுமனே இல்லாமல் போவதல்ல அதற்கு யாரோ ஒருவர் பொறுப்பாக இருக்கின்றார்.காணாமல் போனவர்களாக கூறப்படுப்படுவர்களுக்கு எங்கு என்ன நடந்தது என்று யாரோ ஒருவருக்கு தெரிந்து இருக்கிறது.ஆனால் அது சட்டத்துக்கு புறம்பாக மனித விழுமியங்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இடம் பெறுவதால் வெளித் தெரியாத விடயமாகவே இருந்து விடுகிறது.

0 கருத்துக்கள் :