இந்திய காங்கிரஸ் கட்சியையும் ஆட்டிப்படைக்கும் தமிழீழ ஆத்மாக்கள்!

6.12.13

இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்த அவலங்களின் எதிர் விழைவுகள் இரண்டு தேசங்களின் அரசியல் எதிர்காலத்தையே தீர்மானிக்கப்போகும் சக்தியாக மாற்றம் கண்டுள்ளது. 
 
போர்க் குற்ற நெருக்கடிக்குள்ளாகிய சிறிலங்கா ஆட்சியாளர்கள் அதிலிருந்து தப்பிக் கொள்வதற்காகத் தப்புத் தப்பான ஆட்டங்களை அரங்கேற்றி வருகின்றார்கள். இதுவரை, சிங்கள ஆட்சியாளர்களை சர்வதேச அழுத்தங்களிலிருந்து காப்பாற்றிவந்த இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்கள், தமிழக மக்களது கோபத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதற்காக அதே தப்பாட்டத்தின்மீது நம்பிக்கை வைத்து ஆடும் பரிதாபகர நிலைக்கு வந்துள்ளார்கள். 
 
தங்களது அத்தனை வளங்களையும் திரட்டி, உலகையே ஏமாற்றி ஒரு பாரிய இன அழிப்பினால் பெற்ற சிங்கள தேசத்தின் வெற்றிப் பெருமிதத்தைத் தக்க வைப்பதற்கான வீர வசனங்கள் எவையும் கை கொடுக்காத நிலையில், மேற்குலக நாடுகளின் கருணையை எதிர்பார்த்து சிங்கள ஆட்சியாளர்கள் அரை வேக்காட்டுத் தனமாக சில காரியங்களை நடாத்திவிட முயற்சிக்கின்றார்கள். 
 
பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொண்ட பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெறோன் அவர்களது மூன்று மாத காலத்துடனான எச்சரிக்கை சிங்கள தேசத்தை கலக்கி எடுத்துள்ளது. ஆனாலும், இலங்கைத் தீவில் தமிழர்கள் எதிர் கொண்ட, எதிர் கொள்ளும் அவலங்களுக்கான எந்த நிரந்தர தீர்வுக்கும் வழி காணாமலேயே போர்க் குற்றச்சாட்டிலிருந்து தப்புவதற்கான குறுக்குப் பாதைகளிலேயே சிங்கள ஆட்சியாளர்கள் இப்போதும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். உலப மயப்பட்ட ஈழத் தமிழர் விவகாரத்தில் சிங்கள ஆட்சியாளர்கள் அப்படி எளிதாகத் தப்பித்துக்கொள்ள முடியாது என்பதை, பிரான்சின் பட்டினிக்கெதிரான அமைப்பின் சிறிலங்காவுக்கு எதிரான குற்றச்சாட்டு தெரிவிக்கின்றது. தமது பணியாளர்கள் 17 பேரை 2006 இல் சிறிலங்கா படையினரே முழங்காலிட வைத்துச் சுட்டுக் கொன்றது. அந்தக் குற்றவாளிகளை இதுவரை சிறிலங்கா அரசு நீதியின் முன்னால் நிறுத்தாமல் காப்பாற்றி வருகின்றது என அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. 
 
அமெரிக்கா, கனடா, பிரித்தானியாவைத் தொடர்ந்து, பிரான்சும் சிறிலங்கா ஆட்சியாளர்களது போர்க் குற்றங்களுக்கு எதிரான நிலையை எடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால், ஜெனிவா நோக்கிய புலம்பெயர் தமிழர்களது பார்வையும் கூர்மையடைந்து வருகின்றது. கடந்த நான்கு வருடங்களாக, புலம்பெயர் தமிழர் தளங்களில் உள் நுழைந்து, சிதைவு முயற்சிகளில் ஈடுபட்ட சிங்களச் சதி முறியடிக்கப்பட்டு, இந்த வருட மாவீரர் தினமும் போட்டிகளுக்கிடமின்றி நடாத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான அமர்வே புலம்பெயர் தமிழர்களது அடுத்த இலக்காக எதிர்பார்க்கப்படுகின்றது. 
 
சிங்கள தேசத்தின் ஆட்சியாளர்களது எதிர்காலத்தை எதிர்வரும் மார்ச் மாதம் அச்சப்படுத்திவரும் அதே காலப்பகுதியில் இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்களையும் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் அச்சத்திற்குள்ளாக்கி வருகின்றது. ஊழல் கறைகளாலும், திறமையற்ற ஆட்சி நிர்வாகத்தாலும் பெரும் நெருக்கடிக்குள்ளாகிவரும் காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு தமிழகத்தின் காங்கிரசுக்கு எதிரான தமிழ் மக்களது எழுச்சி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. 
 
ஈழத் தமிழர் விவகாரங்களால், தமிழகத்தில் செல்வாக்கிழந்த கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டு வைப்பதற்கு தி.மு.க.வும் அச்சப்படுகின்றது. காங்கிரஸ் கட்சிக்கு எதிரான தமிழக மக்களின் உணர்வு, அதனுடன் தேர்தல் கூட்டு வைத்தால் தம்மையும் துடைத்து எடுத்துவிடும் என அதன் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி நம்புகின்றார். இதனால், அண்மைக் காலமாக, காங்கிரஸ் கட்சி மீதான தனது தாக்குதல்களை அதிகரித்து, தமிழகத்தின் தமிழீழ மக்களுக்கான ஆதரவு உணர்வினைத் தனது பக்கம் சாய்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 
 
சிங்கள ஆட்சியாளர்களால் நடாத்தி முடிக்கப்பட்ட தமிழினப் படுகொலைக்கான அத்தனை வளங்களையும், உளவுத் தகவல்களையும் வழங்கியதுடன், இறுதிப் போரை நிறுத்துவதற்கான மேற்குலகின் முயற்சிகளையும் முறியடித்த இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்கள்மீதான தமிழக மக்களின் கோபம் காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் அரசியல் அநாதை ஆக்கியுள்ளது. இந்த நிலையில், இறுதிப் போர் காலத்தில் சிங்களப் படைகளுடன் இந்தியப் படைகளும் சேர்ந்து போரை முன்னெடுத்த தகவல்களும் புகைப்படங்களும் வெளிவந்துள்ளன. 
 
இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தமிழகத்தின் காங்கிரஸ் எதிர்ப்பு உணர்வலைகளின் தீவிரத்தைக் குறைப்பதற்காக மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தைக் களம் இறக்கியுள்ளார்கள். சிதம்பரத்தின் ஊடாக, இலங்ழகயில் நடைபெற்றது இன அழிப்புப் போரே எனவும், அதற்கு நீதியான அனைத்துலக தரத்திலான விசாரணை அவசியம் என்றும் சொல்ல வைத்துள்ளது. அதை விடவும், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்து, வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மூலமாக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான கருத்தினை வெளிப்படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 
 
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் யாழ்ப்பாணம் செல்வதற்கு அனுமதிக்க முடியாது என்று சிறிலங்காவின் இனவாதிகள் உண்மை அறியாது கூக்குரல் இட்டாலும், இந்தியா இறுதிப் போர் காலத்தில் செய்த பேருதவிகளுக்கு நன்றிக்கடனாக மன்மோகன் சிங் யாழ்ப்பாணம் செல்வதற்கு மகிந்த ராஜபக்சே ககோதரர்கள் அனுமதி வழங்குவார்கள் எனவும், அண்மையில் கோத்தபாய ராஜபக்சேயின் டில்லி விஜயத்தின்போது இதில் இணக்கம் எட்டப்பட்டதாகவும் அறியப்படுகின்றது. 
 
ஆக, போர்க் குற்றச்சாட்டின் பிடியிலிருந்து தப்புவதற்கு சிங்கள ஆட்சியாளர்களும், ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்பில் பங்கேற்ற குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துக் கொள்ள இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்களும் சம காலத்தில் வியூகம் வகுத்து வருகின்றார்கள். அதற்காக, ஒரு பக்கத்தில், சிங்கள ஆட்சியாளர்கள் போரின் இழப்புக்கள் குறித்து நம்பகம் அற்ற கணக்கெடுப்பு நடாத்துகின்றார்கள். மறு பக்கத்தில், இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு குறித்து நீதி விசாரணை வேண்டும் என்கின்றார்கள். 
 
நாட்கள் நெருங்கும் காலத்தில், ஒருவரை ஒருவர் குழி பறிக்கவும், காட்டிக் கொடுக்கவும் செய்யக் கூடும். அப்படி நடைபெற்றால், தமிழின அழிப்பிற்காக இந்தியாவும் பொறுப்புக் கூற நிர்ப்பந்திக்கப்படலாம். இந்திய காங்கிரஸ் கட்சியையும் ஆட்டிப்படைக்க ஆரம்பித்துள்ளது, தமிழீழ ஆத்மாக்களது பலம்!
 
- இசைப்பிரியா

0 கருத்துக்கள் :