அதிகரிக்கிறது சர்வதேச நெருக்கடி சரிகிறது மகிந்தவின் செல்வாக்கு

18.12.13

‘கடும் முறுக்கு தெறிக்கும்’ என்பது முதுமொழி. மகிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் செய்யும் பித்தலாட்டத்திற்கெல்லாம் ஒரு முடிவு கட்டும் காலம் நெருங்கிவிட்டமாதிரியான ஒரு உணர்வு பாதிக்கப்பட்ட தமிழர்களிடையே துளிர்விட்டுள்ளதை அவதானிக்கலாம்.

இதற்கு, ஜேர்மனியில் மூன்று நாட்களாக நடைபெற்ற விசாரணையின் இறுதியில் ‘ஈழத்தில் நடைப்பெற்றது இனப்படுகொலையே, இந்தியா உதவியது, விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல’ என ஜேர்மனியில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் விசாரணையின் இறுதியில் தீர்ப்பு வழங்கியுள்ளமை ஒவ்வொரு தமிழரையும் நெஞ்சாறச் செய்துள்ளது.

அதிலும், தீர்ப்பாயம் வழங்கியுள்ள தீர்ப்பில்,

1) சிங்கள அரசு ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்துள்ளது.

2) தமிழீழ இனப்படுகொலைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகள் சிங்கள அரசுக்கு துணைபோயுள்ளன.

3) தமிழீழ விடுதலைப்புலிகள் தீவிரவாத அமைப்பு அல்ல. என்று கூறியுள்ளதுடன், சிறீலங்கா அரசாங்கம் பாரியளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.


சிறீலங்காவின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச நீதிமன்றமொன்று முதல் தடவையாக இவ்வாறு தீர்ப்பு அளித்துள்ளது. சர்வதேச மனித உரிமை ஒன்றியம் (International Human Rights Association) மற்றும் சிறீலங்கா சமாதானத்திற்கான ஐரிஸ் போரம் (Irish Forum for Peace in Sri Lanka) இந்த தீர்ப்பினால்  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு எதிர்காலத்தில் பாரிய பின்னடைவு ஏற்படவும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.
இது இவ்வாறாயிருக்கத்தக்கதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் பாரிய முரண்பாடுகள் வெட்டுக்குத்துக்கள் ஆரம்பித்துவிட்டது. மகிந்த அரசாங்கத்தின் முடிவுரை பந்தியை எங்கிருந்து தொடங்குவது என்று எதிர்பார்த்திருந்த சிங்கள மக்களுக்கு 2014 ஆம் ஆண்டுக்கான பாதீடு ஒரு தக்க துரும்பாக மாட்டிக் கொண்டதென்றே கூறவேண்டும்.

பாதீட்டு வாசிப்புக்கள் முடிவு பெறுவதற்கு முன்னதாகவே, மகிந்த அரசுக்கு முடிவுரை எழுதும் பந்தியை விவசாயிகள் கோவணத்துடன் சிறீலங்காவின் தலைநகர் கொழும்பில் ஆரம்பித்துவிட்டார்கள். அதனைத் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அதிகாரத்திற்கு உட்பட்ட குறைந்தது நான்கு ஐந்து உள்ளூராட்சி மன்றங்களின் வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் இரண்டாம் முறையாகவும் சமர்ப்பிக்கப்பட்டதுடன், மூன்று மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. கெஸ்பேவ நகர சபையின் வரவு-செலவுத்திட்டமும் இரண்டாம் முறையாக தோற்கடிக்கப்பட்டது. ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இருவர் வரவு-செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
மதவாச்சி பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் அதிகாரத்திற்கு உட்பட்ட ஹங்குராங்கெத்த பிரதேச சபை மற்றும் வத்தேகம நகர சபை என்பவற்றின் வரவு-செலவுத்திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளன.

ஹங்குராங்கெத்த பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் 13 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. கண்டி, வத்தேகம நகர சபையின் வரவு - செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 4 வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் அளிக்கப்பட்டது தோற்கடிக்கப்பட்டுள்ளது.

பெந்தோட்டை பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டமும் நான்கு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு விடயத்தை அவதானிக்க வேண்டும், ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளமை இந்த அரசாங்கத்தின் கொடுங்கோல் ஆட்சியை நன்கு புலப்படுத்துகிறது. ஒரு அரசாங்கத்தை ஆட்டம் காணவைக்கும் அதிகாரம் ஒரு கீழ் மட்டத்தில் இருந்துதான் உருவெடுக்கின்றது. அந்தவகையில் மகிந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஏழரைச் சனியன் தொட்டுவிட்டது என்றுதான் கூறவேண்டும்.


உள்நாட்டில் எழுந்துள்ள எதிர்ப்புக்களைச் சமாளிக்கத் திணறும் மகிந்த கும்பலுக்கு வெளிநாடுகளிலிருந்தும் அழுத்தங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதற்கு அமைவாக  கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு சிறீலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தி, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றமை மற்றும் மனித உரிமைகள் மீறப்படுகின்றமை குறித்து அவ்வப்போது தகவல்கள் பதிவாவதாகவும்

ஐரோப்பிய நாடாளுமன்றம் குறிப்பிட்டுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்றம் உலக நாடுகளினால் மதிக்கப்படும் பெரும் அமைப்பு அந்த அமைப்பில் தீர்மானங்கள் நிறைவேற்றபப்டுகின்றமை பெரும் மதிப்புக்குறியது.

தாயகத்தில் சிந்திய குருதிக்கும், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள உறவுகள் இரவு, பகலாக உழைத்த உழைப்புக்கும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நன்மைகளை அனுபவிக்கும் காலம் தொடங்கிவிட்டது. இந்நிலையில், எமது தாகமான ஈழத்தை அடைவதற்கு இன்னும் வேகமாக உழைக்க வேண்டும்.
அதேவேளை, சிறீலங்கா அரசாங்கம் யுத்த முனைப்புகளுடன்தான் தமிழர் தரப்பை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது. வடக்கு கிழக்கு மாகாணத்தில் இன்னும் யுத்த மேகம்தான் மூண்டுள்ளதைக் காணலாம். குறிப்பாக, வட பகுதிக்கான பயணத்தை மேற்கொள்ளும் போது அதனை அதிகளவில் அவதானிக்கலாம். இராணுவக் காவலரண்களும், ஆயுதப் படைகளின் பிரசன்னங்களும் அங்கு அதிகம் காணப்படுகிறது.

அனைத்துலக நாடுகளின் ஒத்துழைப்புடன் ஒரு இனத்தைப் படுகொலை செய்து யுத்தத்தை வெற்றி பெற்றுள்ளதாக சிங்களம் தனது மக்களிடையே காண்பிப்பதற்கான தமிழர் தாயகப் பகுதிகளில் கண்காட்சிகளை நடாத்திவருகின்றது.
கடந்த வாரம் கூட ஆனையிறவு பகுதியில் பெருந்திரளான சிங்கள மக்கள் சென்று பார்வையிடத்தக்கதாக காட்சிகளை நடாத்தியிருக்கின்றது.

இவ்வாறான நடவடிக்கைகள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை. மாறாக பகைமையான உணர்வுகளை ஏற்படுத்துவதுடன், சந்தேகப் பார்வைகளையே ஏற்படுத்தும். அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு உரமுட்டுவது போன்று, வெளிநாடுகளின் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் அடிக்கடி சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவதும் நல்லெண்ணத்தைத் தோற்றுவிக்கப் போவதில்லை.

அண்மையில் பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் மொஹமட் அசீஸ் சண்டிலா உள்ளிட்ட மூவரடங்கிய பிரதிநிதிகள் குழு, நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சிறீலங்கா சென்றனர். சிறீலங்காக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த கொலம்பகேயின் அழைப்பின் பேரில், இந்தக் குழுவினர் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர், கொமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

பாகிஸ்தான் கடற்படைத் தளபதி இந்தப் பயணத்தின்போது, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அத்துடன் இராணுவ மற்றும் விமானப் படைகளின் தளபதிகளையும், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியையும் சந்திக்கவுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இது உண்மையில், ஒன்றுக்கான மற்றொன்றை இழப்பதாகவோ அல்லது பெறுவதாகவோ அமையும் சந்தர்ப்பமாகக் கூட இது இருக்கலாம்.

எவ்வாறாயினும், சாமாதானம் ஏற்பட்டுவிட்டது, மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றார்கள் எனக் கூறிக் கொண்டு மறுபுறத்தில் யுத்தக் கப்பல்களையும், போர் விமானங்களையும் கனரக இராணுவத் தளபாடங்களையும் கொள்வனவு செய்வதில் சிறீலங்காவின் பாதுகாப்புத் தரப்பினர் மும்முரம் காட்டிவருகின்றனர். சிறீலங்கா அரசாங்கம் யாருக்கு எததைக் கூறினாலும், தான் செய்த குற்றத்திற்கான தண்டனையைப் பெற்றுக்கொள்ளும் காலம் நெருங்கிக் கொண்டிருப்பதனால், அதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, ஒரு சில தமிழ், சிங்கள கூலிப் படைகளின் துணையுடன் சதித் திட்டங்களில் ஈடுபட்டுவருகின்றமை நன்கு புலப்படுகிறது.

இந்நிலையில், தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒரு குடையின் ஒன்றிணைந்து, அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி, அனைத்துலக சமூகத்துடன் இணைந்து இனவாத சிங்களத்திற்கு எதிராக செயற்படுவதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைப்பதுடன், எமது தாயகக் கனவையும் அடையமுடியம் என்பது திண்ணம்.

தாயகத்தில் இருந்து எழுவான்

நன்றி: ஈழமுரசு

0 கருத்துக்கள் :