தென்னாபிரிக்க மக்களின் விடிவெள்ளிக்கு வீரவணக்கம்

7.12.13

உலகில் விடுதலை வேண்டி நிற்கின்ற இனங்களுக்கு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்த நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்கா மக்களுக்கு விடிவெள்ளியாகத் திகழ்ந்தார். உலகின் பார்வையைத் தன் பக்கம் திரும்ப வைத்து இறுதியாக தனது இலட்சியத்தில் வெற்றி பெற்ற அவர் ஒரு மாமனிதர் என்று தெரிவித்துள்ள யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை அந்த உயரிய மனிதருக்கு தமது வீரவணக்கத்தை தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களின் போராட்டமும் தென்னாபிரிக்கா மக்களின் போராட்டமும் பல விடயங்களில் ஒத்திருந்தது. இதனால் தமிழீழ விடுதலைப் புலிகளால் நேசிக்கப்பட்ட ஒரு தலைவராக நெல்சன் மண்டேலா திகழ்ந்தார். அதனாலேயே அவர் சிறையிலிருந்து வெளியே வந்து தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற போது விடுதலைப் புலிகள் அவருக்கு நேசக்கரம் நீட்டியிருந்தனர் என்றும் மேற்படி தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.
மண்டேலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து யாழ்.குடாநாட்டு தமிழ் மக்கள் பேரவை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பரந்து விரிந்த இந்தப் பூமிப் பந்தில் எந்தவொரு இனமும் தனித்துவாக வாழ்வதை எந்தக் காலத்திலும் மேலாதிக்க சக்திகள் விரும்பியதில்லை. அதேபோன்று பல கோடிக்கணக்கான மக்கள் தொகை கொண்ட தென்னாபிரிக்கா தேசத்து மக்கள் மீது சிறிய தொகை கொண்ட வெள்ளையினம் ஆதிக்கம் செலுத்தியது. இந்த ஆதிக்கத்தால் தென்னாபிரிக்கா மக்கள் என்றுமில்லாத துன்பங்களை எதிர்கொண்ட வேளை வந்துதித்த நெல்சன் மண்டேலா என்ற அற்புதமான மனிதர் அந்த மக்களுக்காகப் போராடத் துணிந்தார்.

ஈழத் தமிழ் மக்களின் அடிமை நிலையை உடைத்தெறிவதற்காக தேசியத் தலைவர் பிரபாகரன் உருவெடுத்ததைப் போன்று வெள்ளையினத்தவரிடம் இருந்து தன்தேச மக்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்ற ஒரே இலட்சித்திற்காக நெல்சன் மண்டேலா போராடப் புறப்பட்டார்.

விடுதலையை எவருமே தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தரமாட்டார்கள். போராடியே விடுதலையைப் பெறவேண்டும் என்ற உண்மையை எமது தேசியத் தலைவர் கொண்டிருந்ததைப் போன்று நெல்சன் மண்டேலாவும் அதே கொள்கையையே கொண்டிருந்தார். எதரி பலம் மிக்கவனாக இருப்பதைப் பார்த்து ஆரம்பத்தில் அகிம்சை வழிப்போராட்டத்தை முன்னெடுத்த நெல்சன் மண்டேலா பின்னர் அந்த வழி சரியானது அல்ல என்று தீர்மானித்து ஆயுதப் போராட்டத்தை தொடங்கினார். அதற்காகவே அவர் கைது செய்யப்பட்டார்.

27 வருடங்கள் எதிரியின் சிறைக்குள் இந்த போதிலும் தென்னாபிரிக்கா மக்களின் விடுதலையையே அவர் சிந்தித்துக்கொண்டிருந்தார். தனது இலட்சியத்திலிருந்து அவர் மாறவில்லை. அவருடைய இந்த விடுதலைப் பற்று உலக நாடுகளை விழித்தெழ வைத்தது. ஈற்றில் அவர் விடுதலை பெற்றார். தென்னாபிரிக்காவைக் கட்டியெழுப்பிய சிற்பியாக அவர் முகிழ்திருக்கின்றார். இவருடைய போராட்ட முறைகளும் வழிகளும் உலகில் விடுதலை வேண்டிப் போராடுகின்ற அடக்கப்பட்ட இனங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளன.

நெல்சன் மண்டேலா என்ற தனியொரு மனிதரின் பெயர் இந்த உலகம் முழுமைக்கும் பரந்திருப்பதற்கு அவருடைய திட்டமிடல்களும் சகிப்புத்தன்மையுமே காரணமாக அமைந்தன. அவர் உலகில் விடுதலை வேண்டி நிற்கின்ற இனங்களுக்கு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்துடன் தென்னாபிரிக்கா மக்களுக்கு விடிவெள்ளியாகத் திகழ்ந்தார். உலகின் பார்வையைத் தன் பக்கம் திரும்ப வைத்து இறுதியாக தனது இலட்சியத்தில் வெற்றி பெற்ற அவர் ஒரு மாமனிதர்.

தமிழ் மக்களின் போராட்டமும் தென்னாபிரிக்கா மக்களின் போராட்டமும் பல விடயங்களில் ஒத்திருந்தது. இதனால் தமிழீழ விடுதலைப் புலிகளால் நேசிக்கப்பட்ட ஒரு தலைவராக நெல்சன் மண்டேலா திகழ்ந்தார். அதனாலேயே அவர் சிறையிலிருந்து வெளியே வந்து தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற போது விடுதலைப் புலிகள் அவருக்கு நேசக்கரம் நீட்டியிருந்தனர். அந்தளவிற்கு அவர் தமிழ் மக்கள் மத்தியில் நன்கு மதிக்கப்பட்டவராக விளங்கினார். இன்று அவர் இந்த உலகை விட்டு நீங்கிச் சென்றுவிட்டார் என்ற செய்தியறிந்து நாங்கள் ஆழ்ந்த துயரடைகின்றோம். தமது தேசத் தலைவனை இழந்து தவிக்கின்ற தென்னாபிரிக்கா மக்களின் துயரில் நாங்களும் பங்கெடுக்கின்றோம்.

சத்தியத்திற்காகப் போராடியவர்களை சாவு என்றும் அழித்துவிடுவதில்லை. அவர்கள் சந்ததி சந்ததியாக மக்கள் மத்தியில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள் என்ற எமது தேசியத் தலைவர் கூறியதைப் போன்று நெல்சன் மண்டேலாவும் இந்த உலகில் மனித இனம் உள்ளவரை மறக்கப்படமுடியாதவராக வாழ்ந்துகொண்டிருப்பார். சாவை அணைத்து ஆழ்ந்த துயில் கொள்கின்ற அந்த உயரிய தலைவனுக்கு எமது தாயக உறவுகள் சார்பாக நாங்கள் வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தமிழ் மக்கள் பேரவை
யாழ்.மாவட்டம்.
06.12.2013

0 கருத்துக்கள் :