இந்தியாவுக்கு இலங்கை விவகாரத்தில் தலையிட உரிமை கிடையாது’

1.12.13

‘இணைந்த வடக்கு கிழக்கில் தமிழர்களுக்கு தீர்வு’ பெற்றுக் கொடுக்கும் இந்திய அமைச்சர் சிதம்பரத்தின் கருத்துக்கு இலங்கை அரசு காட்டமான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் உள்நாட்டு விவகாரம் பற்றி பேசுவதற்கு வெளியாட்களுக்கு உரிமை கிடையாது என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பொதுச் செயலரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமது நாடு தனி இறையாண்மை உள்ள ஒரு நாடு என்றும், இலங்கையில் அரசியலமைப்பு மற்றும் சட்ட நடைமுறைகள் பற்றியோ வெளியாட்கள் பேச வேண்டிய தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்த கருத்துக்களை தாங்கள் பெரிய அளவில் கணக்கில் எடுக்க வேண்டியதில்லை எனவும் அவர் கூறுகிறார்.
இந்தியாவில் தேர்தல் நடக்கவுள்ளதால் அரசியல்வாதிகள் வாக்குகள் சேகரிப்பதற்காக இப்படியாக பேசுவார்கள் எனவும் கூறும் அவர், 13 ஆவது திருத்தத்தில் வட-கிழக்கு இணைப்பு குறித்து எந்த இடத்திலும் பேசப்படவில்லை எனவும் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் கூறுகிறார்.
இலங்கையின் உச்சநீதிமன்றமே வட-கிழக்கு இணைப்புக்கு எதிராக தீர்ப்பை வழங்கியுள்ளதால், அது குறித்து வேறு யாரும் பேச முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

0 கருத்துக்கள் :