தமிழ்த் தேசியப் பற்றை மழுங்கடித்து இனத்தையும் சீரழிக்க சிறிலங்கா படை கங்கணம்

19.12.13

தமிழ் இளைஞர்களைச் சீரழிப்பதன் மூலம் அவர்களிடம் உள்ள தமிழ்த் தேசியப் பற்றை மழுங்கடித்து ஒட்டுமொத்த இனத்தையும் சீரழிக்க முடியுமென்ற நோக்கத்துடன் சிறிலங்கா படையினர் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் போதைப்பொருளை விநியோகித்து வருகின்றனர் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் குற்றம்சாட்டியுள்ளார். படையினரின் இந்த திட்டமிட்ட செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை மதுசாரத்தை ஒழிப்பதற்கான இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

யுத்தத்திற்குப் பின்னர் தமிழினம் பல்வேறு வழிகளில் அழிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் குறிவைத்து போதைப் பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம், தமிழினத்திடமிருந்து எத்தகைய அசாதாரண சூழல்களிலும் கூட அழிக்க முடியாத கல்வியையும் கலாச்சாரத்தையும் அழித்தொழிக்கும் திரைமறைவு முயற்சியே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் எதிர்காலத்தில் மாணவர்களின் புத்தகப் பைகளில் போதைப் பொருட்களோடு பாடசாலைகளுக்குச் சென்றாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
எமது மண்ணின் பெருமையை இந்த நாட்டிலுள்ளவர்களுக்கு மட்டுமல்ல சர்வதேசமே கூறியிருக்கின்ற நிலையில், இன்று இந்த மண்ணின் பெருமையையும் அதன் தனித்துவத்தையும் சிதைக்கின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை சில தரப்பினர்கள் திட்டமிட்ட வகையில் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வடக்கு முதலமைச்சர் அண்மையில் தெரிவித்தது போன்று சிறிலங்கா படையினரே மறைமுகமாக இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

போதைப்பொருட்களை தென்னிலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்டு இங்குள்ள எமது எதிர்கால தலைமுறையினரான இன்றைய மழலைச் செல்வங்களுக்கு விநியோகிக்கின்றனர். இவ்வாறு எமது மாணவர்களையும் இளைஞர்களையும் மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதன் மூலமாக இந்த மண்ணின் பெருமை தனித்துவத்தை இல்லாமல் செய்வதுடன் எமது சமுதாயத்தையும் சீரழிக்க முடியும்.

இதற்காகவே இத்தகைய நடவடிக்கைகளை திட்டமிட்ட வகையில் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு இனத்தின் பண்பாட்டு கலாசார விழுமியங்களை சீரழித்து மொழி அடையாளங்களை இல்லாமல் செய்வதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆகவே எமது மாகாண சபையின் அதிகாரத்திற்குட்பட்ட வகையில் இருக்கின்ற பலத்தைப் பயன்படுத்தி இதனைத் தடுத்து நிறுத்துவதுடன் எமது சமுகத்தை இதிலிருந்து மீட்டெடுக்கின்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

0 கருத்துக்கள் :