தவறு களைவோம் - ச ச முத்து

27.12.13


பாலா அண்ணையின் ஏழாவது ஆண்டு நினைவு இப்போதுதான் நடந்துசென்று விட்டிருக்கிறது. பாலா அண்ணை என்று சொன்னால் எப்போதும் நினைவில் நிற்பது அவர் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற அமைப்பையோ தேசியத் தலைவரையோ விட்டுக்கொடுத்து பேட்டிகளோ, உரையோ ஏதுமே செய்ததில்லை.

பாலா அண்ணையில் எண்ணற்ற ஆளுமைகள் கல்வியறிவு, பட்டறிவு, உலகஞானம் என்பன இருந்தாலும் இவை எல்லாவற்றையும்விட பாலா அண்ணையின் சிறப்புகளில் முன்னிற்பது அவர் தேசிய விடுதலைக்கான இந்த அமைப்பையையோ தலைமையையோ ஒருபோதும் ஒரு வசனத்தில்கூட பிழையான அர்த்தத்தில் சொல்லியதோ பேட்டியளித்ததோ இல்லை.
உண்மை செருப்புமாட்டிக் கொண்டு வருவதற்கிடையில் பொய் உலகம் முழுதும் சுற்றிவந்துவிடும் என்று அடிக்கடி தேசியத் தலைவர் உவமானத்துக்கு கூறும் பழமொழியின் முழு அர்த்தத்தையும் புரிந்து கொண்டவர் பாலா அண்ணை. தான் கூறும் ஒரு சிறு சொல்கூட அர்த்தம் ஆயிரம் கற்பிக்கப்பட்டு எதிரிகளால் காற்றில் பறக்கவிடப்படும் என்பதை மிக அழகாக புரிந்துகொண்டிருந்தவர் பாலா அண்ணர்.

ஆயிரமாயிரம் வீரர்கள் வீராங்கனைகள், இளையோர் தமது இனிய வாழ்வை, உயிரை அர்ப்பணித்து களத்தில் செய்கின்ற தியாகங்களை அர்த்தம் இழந்து போகவைத்துவிடும். அந்த மனிசன் இதனை கவனத்தில் எப்போதும் கொண்டவராக இருந்தார். இத்தனைக்கும் பாலா அண்ணையை வலிந்து இழுத்து பேட்டி என்றும் நேர்காணல் என்றும் மாயாமான் விளையாட்டுக்காட்டி அவரின் வாயில் இருந்து ஏதாவது ஒரு சொல்லை அல்லது ஏதாவது ஒரு கருத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிராக கக்கவைப்பதற்கு சர்வதேசத்து ஊடகங்கள் முதல் அயல்நாட்டு ஊடகங்கள்வரை அனைத்துமே பெருமுயற்சி செய்துதான் பார்த்தன. ம்ஊகூம்...முடியவில்லை என்பதுதான் உண்மை.

பேட்டிகள், நேர்காணல் என்று அவரை சுற்றி விரிக்கப்பட்ட எத்தனையோ சதி வலைகளை அநாயசமாக அறுத்தெறிந்து முன்வந்தவர் பாலா அண்ணை. ஆனால், இப்போது 2009க்கு பிறகு தேசிய விடுதலையின் சார்பாக கொடுக்கப்படும் பேட்டிகளிலும் அறிவிப்புகளிலும் காணக்கிடைக்கும் கற்றுக்குட்டித்தனமும் ஏனோதானோ மனப்பாங்கும் விடுதலையின் ஆழத்தை, மாவீரர்களின் ஆன்ம உறுதியை முழுதாக புரிந்துகொள்ளாத நிலையுமே தெரிகிறது.
இதற்கு உதாரணமாக அண்மையில் மாவீரர் நாளில் ஒரு நாட்டில் அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு கொடுக்கப்பட்ட பேட்டி ஒன்றில் அமிர்தலிங்கம், சிறீசபாரெத்தினம் ஆகியோரையும் மாவீரர் பட்டியலில் இணைக்கவேண்டிய தேவை ஒன்று உள்ளதை தலைமை உணரவேண்டும் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் போர்க்குற்ற விசாரணை செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஏதோ தன்னை ஒரு நடுநிலையாளனாக யாருக்கோ காட்டவேண்டிய தேவை உள்ள ஒருவரின் பேட்டிபோன்றே இது அமைந்திந்தது.

தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தியதே சிங்கள பேரினவாதம் தொடர்ச்சியாக நடாத்திய ஆயுத அரச பயங்கரவாதத்தின் மறுவிளைவாகவே என்பதை உணாத்த தவறிய இந்த பேட்டி எமது போராளிகள் அனைவரையும் அவமதிப்பதாகவே அமைந்திருந்தது. தவிர, இனப்படுகொலை, சர்வதேச விசாரணை என்று சர்வதேசம்கூட மெதுமெதுவாக முணுமுணுக்க தொடங்கியுள்ள இந்த நேரத்தில் போர்க்குற்ற விசாரணை, அதிலும் விடுதலைப்புலிகளையும், சிங்கள அரசையும் ஒன்றாகவே விசாரிக்கவேண்டும் என்று கூறுவது அரசியலின் வடித்தெடுத்த வங்குரோத்துதனம்.

விடுதலை என்பதிலும் விடுதலைக்கான அமைப்பை எந்த நேரத்திலும் கருத்து ரீதியாகவும் வேறு வகைகளிலும் காப்பதிலும் எந்தவித சமரசங்களோ நளுவல்களோ எந்த கணத்திலும் யார்' செய்தாலும் இந்த தேசிய இனம் அவர்களை தூக்கியெறிந்தே நடைபோடும். ஏனென்றால் நாள் குறித்து தேதி குறித்து நேரம் குறித்து இலக்கு நோக்கு நடந்தவர்களும் அவர்களின் தோழர்களும் இந்த அமைப்பையும் இதன் தலைமையையும் எந்தநேரம்  காப்பாற்றவேண்டும் என்பதே அவர்களின் இறுதிநேரத்து வேண்டுகோள்களாக இருந்தன.

இனிமேல் தன்னும் பேட்டி நேர்காணல் என்றும் ஒலிவாங்கி முகர்வதற்கு முன்வருபவர்கள் போராட்டத்தின் கனம் அறிந்தும் மாவீரர்களின் தியாகத்தின் மதிப்புணர்ந்தும் கதைக்க முன்வரவேண்டும். அவனும் கள்வன் இவனும் கள்வன் இரண்டையும் நிறுத்து நீதியை பார்த்து தாருங்கள் என்ற கோணத்திலான கதையாடல்கள் நீதிமன்ற வாதங்களுக்கோ ,பட்டிமன்ற வாதங்களுக்கோதான் பொருந்துமே தவிர விடுதலைப்போராட்டத்துக்கு ஒரு போதும் உதவாது.

இது இப்போது ஒரு தவறு என்ற பார்வையிலேயே அணுகப்படுகின்றது. இதுவே தொடர்ந்தால் அது முழு தேசிய இனத்துக்கும், தமது இனிய உயிர்களை அர்ப்பணம் செய்த பல்லாயிரம் மாவீரர்களுக்கும் செய்யும் வரலாற்று துரோகமாகவே கருதப்படும்.

0 கருத்துக்கள் :