தலைவனின் கவசமாக நின்று விண்தொட்ட விசுவரூபம் - சேரமான்

14.12.13

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒவ்வொரு மாவீரர்களுக்கும் தனித்துவமான இடமுண்டு. தேச விடுதலை என்ற அதியுயர் இலட்சியத்திற்காக ஒவ்வொரு மாவீரர்களும் புரிந்த ஈகங்களும், சாதனைகளும் வார்த்தைகளால் அளவிட முடியாதவை.
ஈழ மண் கண்ட பெருந்தமிழ் வீரர்களான எல்லாளன், கரிகாற் பெருவளவன், குளக்கோட்டன், இராசராச சோழன், இராசேந்திர சோழன், சங்கிலி குமாரன், பண்டாரவன்னியன், கண்ணுச்சாமி ஆகியோர் வரிசையில் உதித்த பெருந்தலைவன் பிரபாகரனை மையப்படுத்தி எழுதப்படும் தமிழீழ விடுதலை வரலாற்றில் ஒவ்வொரு அத்தியாயமும் மாவீரர்களுக்கு உரித்தானது.

தனித்துவம் மிக்க மாவீரர்களின் மத்தியில் தனித்துவம் மிக்கவராக மிளிர்பவர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் ஆயுதம் ஏந்தியது கிடையாது. எந்தவொரு தருணத்திலும் அவர் போர் வீரர்களின் சீருடை அணிந்ததும் இல்லை. ஆனால் தன் வாழ்நாள் முழுவதும் ஆயுதம் ஏந்தாத, சீருடை தரிக்காத தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் போராளியாகவே அவர் வாழ்ந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பாலா அண்ணையின் வரலாறு 1978ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகின்றது. அக்காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரித்தானியக் கிளைச் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து பரப்புரைப் பணிகளை ஆரம்பித்த பாலா அண்ணை, அன்றைய காலப் பகுதியில் ஆயுதப் புரட்சி மூலம் தமிழீழத் தனியரசை அடைவதற்கான வாய்ப்புக்கள் பற்றி நூல்கள் - பிரசுரங்கள் போன்றவற்றை எழுதி வெளியிட்டார். தவிர தமிழீழத் தேசியத் தலைவரும், அவரது தோழர்களும் அக்காலப் பகுதியில் பெரிதும் தேடிக் கொண்டிருந்த கெரில்லா யுத்தத்திற்கான யுக்திகள் பற்றிய உலகப் புரட்சியாளர்களின் ஆக்கங்களை தமிழில் மொழிபெயர்த்துத் தலைவர் அவர்களுக்கு பாலா அண்ணை அனுப்பி வைத்தார். இவையெல்லாவற்றிலும் அப்பொழுது தலைவர் அவர்களைக் கவர்ந்தது பாலா அண்ணை எழுதிய ‘சோசலிசத் தமிழீழத்தை நோக்கி...’ என்ற நூல்.
தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் மார்க்சிய-லெனினிச சித்தாந்தத்திற்கு முரணானது என்றும், தனியரசுக்கான ஆயுதப் போராட்டத்தில் தமிழீழ மக்கள் ஈடுபடுவது உலக முதலாளித்துவத்திற்கு முண்டுகொடுக்கும் செய்கை என்றும், கெரில்லா யுத்தத்தின் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்றும் வைதீக மார்க்சியவாதிகளும், முற்போக்குவாதிகளாக தமக்கு முலாம் பூசிக்கொண்டவர்களும் பிதற்றிக் கொண்டிருந்த காலப்பகுதி அது. தவிர அரசியல் சித்தாந்தம் ஏதுமின்றி குருட்டுத்தனமான ஆயுதப் போராட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபடுவதாக இயக்கத்திலிருந்து பிரிந்து சென்று குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்த சிலர் அவதூறு பரப்பிக் கொண்டிருந்த வேளையும் அது. இவையெல்லாவற்றையும் தனது தத்துவார்த்த வார்த்தைகளால் உடைத்தெறிந்து தலைவர் பிரபாகரன் தெரிவு செய்த பாதையே சரியானது என்பதை மார்க்சிய-லெனினிச சித்தாந்தத்தின் ஊடாக தனது நூலில் பாலா அண்ணை நிறுவினார். அத்தோடு 1971ஆம் ஆண்டு ஜே.வி.பி மேற்கொண்ட ஆயுதப் புரட்சி தோல்வியுற்றதற்கான காரணங்களை அனைத்துலக அரசியல் நடைமுறைகள் ஊடாக நுணுகி ஆராய்ந்து எவ்வாறான யுக்திகள் மூலம் கெரில்லா இயக்கம் என்ற நிலையில் இருந்து மரபுவழித் தேசியப் படையாக தமிழீழ விடுதலைப் புலிகள் பரிணமிக்க முடியும் என்பதையும் அந்நூலில் நுட்பமான முறையில் பாலா அண்ணை விளக்கினார்.

இதுவே தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரித்தானியக் கிளையுடன் இணைந்து செயலாற்றிய கல்விமான் என்ற நிலையில் இருந்து இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் என்ற நிலையையும், இயக்கத்தின் கொள்கைகளை சித்தாந்த ரீதியாகக் கட்டமைக்கும் தத்துவாசிரியர் என்ற நிலையையும் பாலா அண்ணை அடைவதற்கு காலாக அமைந்தது. 1979ஆம் ஆண்டு சென்னையில் தமிழீழத் தேசியத் தலைவருடனும், மூத்த உறுப்பினர் பேபி சுப்ரமணியம் (வெ.இளங்குமரன்) அவர்களுடனும் பாலா அண்ணை மேற்கொண்ட முதலாவது நேரடிச் சந்திப்பு அவரை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்திற்குள் கொண்டு சென்றது.

அன்று தொடக்கம் புற்றுநோய் உயிரைக் குடிக்கும்வரை தலைவர் பிரபாகரனுக்காகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காகவும், தமிழீழ மக்களுக்காகவும் தனது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார் பாலா அண்ணை. அதனால்தான் பாலா அண்ணையின் உயிர் மண்ணுலகைவிட்டுப் பிரிந்த பொழுது அவரை “விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக, பிதாமகனாக மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர்” என்று புகழாரம்சூட்டிய தலைவர் அவர்கள், அவருக்கு ‘தேசத்தின் குரல்’ என்ற அதியுயர் விருது வழங்கி விடுதலைப் போராட்ட வரலாற்றில் அவரது பாத்திரம் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டார்:
“எமது இயக்கத்தின் வளர்ச்சியிலும் அதன் இன்றைய விரிவாக்கத்திலும் பாலாண்ணைக்கு ஒரு நிரந்தரமான இடம் இருக்கிறது. ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக, எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும், உத்வேகமும் அளித்தவர். ஆலோசனையும், ஆறுதலும் தந்தவர். எனது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு, எனது பளுக்களைப் பங்கிட்டுக் கொண்டவர். எமது விடுதலை இயக்கம் தோற்றம்பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளையும், வேதனைகளையும், சவால்களையும், சங்கடங்களையும் தாங்கிக் கொண்டவர். எமது அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புக்களுக்கு மூலாதாரமாக, முன்னால் நின்று செயற்பட்டவர்.”
வெளிநாட்டு இராசதந்திரிகள் - ஊடகவியலாளர்கள் போன்றோருடன் தமிழீழத் தேசியத் தலைவர் மேற்கொண்ட கலந்துரையாடல்களிலும், இயக்கத்தின் கொள்கை விளக்க சந்திப்புக்களிலும், சமாதான முன்னெடுப்புக் காலங்களில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடுகளிலும், பொது நிகழ்வுகளிலுமே பலருக்கு பாலா அண்ணையைத் தெரியும். அனல் பறக்கும் அவரது அரசியல் புலமையையும், நகைக்சுவை தெறிக்கும் அவரின் மேடைப் பேச்சையும் கண்டு இரசித்தவர்கள் ஏராளம். ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பாலா அண்ணைக்கு இன்னொரு பாகமும் உண்டு.

உலக அரசியல் ஓட்டங்களை நுணுகி ஆராய்ந்து தலைவர் அவர்களுக்கு மதியுரை வழங்கும் அரசியல் ஆலோசகர் என்ற பக்கத்திற்கு அப்பால், காலத்திற்குக் காலம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் சித்தாந்தத்திற்கு தத்துவார்த்த வடிவம் கொடுத்து நெறிப்படுத்தும் அரசியல் ஞானி என்ற நிலைக்கு அப்பால், தலைவர் அவர்களின் பாதுகாப்புக் கவசமாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால இராணுவ வளர்ச்சியில் அச்சாணியாகவும் பாலா அண்ணை வகித்த ‘பலரும் அறிந்திருக்காத’ பாகம் அது.
1981ஆம் ஆண்டு ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு இயக்கத்தின் மத்திய குழுவின் தலைமைப் பதவியிலிருந்தும், இயக்கத்தை விட்டும் உமா மகேஸ்வரன் நீக்கப்பட்ட பொழுது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உடைத்துக் கொண்டு உமா மகேஸ்வரனின் விசுவாசிகள் சிலர் வெளியில் சென்று தாமே உண்மையான புலிகள் என்று உரிமை கோரத் தொடங்கினர். அப்பொழுது கப்டன் பண்டிதர், பேபி சுப்ரமணியம் ஆகியோரோடு இணைந்து தலைவர் பிரபாகரன் அவர்களைப் பாதுகாத்தவர் பாலா அண்ணை. ரெலோ இயக்கத்துடன் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகள் செயலாற்றிக் கொண்டிருந்த காலப்பகுதி அது.
உமா மகேஸ்வரனின் சதியால் பலவீனமடைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளைத் தமது அமைப்புக்குள் இணைக்குமாறு தலைவர் பிரபாகரன் அவர்களை ரெலோ இயக்கத்தினர் வலியுறுத்திக் கொண்டிருந்தனர். எந்தக் காலத்திலும் பதவியை விரும்பாதவர் தலைவர் பிரபாகரன். ஒரு விடுதலைப் போராளியாகவும், போராளிகளின் தளபதியாகவும் இருப்பதைத் தவிர தலைமைப் பதவிகளை வகிப்பதில் தலைவர் அவர்களுக்கு ஆர்வம் இருந்தது கிடையாது. அந்தச் சந்தர்ப்பத்தில் கப்டன் பண்டிதர், பேபி சுப்ரமணியம் ஆகியோருடன் இணைந்து தலைவர் அவர்களை அணுகிய பாலா அண்ணை, தமிழீழப் புரட்சிகர ஆயுதப் போராட்ட வரலாறு என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாறுதான் என்றும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தவர் என்ற வகையில் அதனை வழிநடத்தும் முழு உரிமையும், தகமையும் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே உரித்தானது என்றும், எந்த காலத்திலும் இந்த உரிமையை தலைவர் அவர்கள் விட்டுக் கொடுக்கக்கூடாது என்றும் வாதிட்டார்.


விளைவு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தமது அமைப்பிற்குள் உள்வாங்குவதற்கு ரெலோ இயக்கம் எடுத்த முயற்சி கைகூடவில்லை. ஆனால் அத்தோடு பாலா அண்ணை நின்றுவிடவில்லை. உமா மகேஸ்வரன் குழுவினரின் சதியை முறியடிப்பதற்கான பரப்புரைகளை பேபி சுப்ரமணியம் அவர்களுடன் இணைந்து தீவிரமாக முன்னெடுத்தார். தமிழீழத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் இயங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுடன் கடிதம் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தித் தலைவர் பிரபாகரன் அவர்களே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைத்துவத்திற்கு உரித்துடையவர் என்பதை வாதிட்டு, உமா மகேஸ்வரன் குழுவினரைப் பலவீனப்படுத்தினார். இதன் விளைவாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உரிமை கோருவதற்கு உமா மகேஸ்வரன் எடுத்த அனைத்து முயற்சிகளும் படுதோல்வியைத் தழுவின. இறுதியில் உமா மகேஸ்வரன் குழுவினரின் சுயரூபம் ‘புளட்’ எனும் ஆயுதக் கும்பலாக வெளிப்பட்டது.

இதேபோன்று 1983ஆம் ஆண்டு தலைவரின் உயிரைப் பாதுகாத்த பெருமை பாலா அண்ணைக்கு உண்டு. அக்காலப் பகுதியில் வெலிக்கடை சிறையில் இருந்து குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகிய மாவீரர்களை மீட்கும் நடவடிக்கை ஒன்றை நேரடியாகவே களத்தில் இறங்கி மேற்கொள்வதற்கு தலைவர் அவர்கள் திட்டமிட்டிருந்தார். சிங்களத்தின் கோட்டையில் தலைவர் அவர்கள் மேற்கொள்ளவிருந்த இந்த நடவடிக்கை அவரது உயிருக்கே உலை வைக்கக்கூடியது என்பது தலைவர் அவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது. ஆனாலும், குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோரை மீட்பதற்காக தனது உயிரைப் பணயம் வைப்பதற்கு தலைவர் அவர்கள் துணிந்திருந்தார். அவ்வேளையில் தலைவரின் திட்டம் பற்றிக் கேள்வியுற்ற பாலா அண்ணை உடனடியாக இதில் தலையிட்டு, வெலிக்கடை சிறைமீட்பு நடவடிக்கையைக் கைவிடுமாறு வாதாடினார். தலைவர் பிரபாகரன் இல்லாதுவிட்டால் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பதே இருக்காது என்பதை அந்தத் தருணத்தில் தலைவர் அவர்களிடம் ஆணித்தரமாக பாலா அண்ணை தெரிவித்தார். இதன் விளைவாகப் பெரும் தயக்கத்தின் பின் சிறைமீட்புத் திட்டத்தைத் தலைவர் கைவிட்டார்.
இவ்வாறு எண்பதுகளின் ஆரம்ப காலப்பகுதியில் தலைவர் அவர்களின் பாதுகாப்புக் கவசமாக விளங்கிய பாலா அண்ணை, அக்காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஈட்டிய இராணுவ வளர்ச்சியிலும் காத்திரமான பங்கை வகித்தார். எண்பதுகளின் ஆரம்பத்தில் இலண்டனில் பாலா அண்ணை வசித்த பொழுது அவருக்கு அடிக்கடி தலைவர் அவர்களிடமிருந்து இயக்கத்திற்காக நிதி திரட்டித் தருமாறு கோரிக்கை விடுக்கப்படும். அப்பொழுது இலண்டனில் வசித்த புலம்பெயர்ந்த ‘மெத்தப்படித்த’ தமிழ்க் கனவான்களைத் தேடி நிதியுதவி கோரிச் செல்லும் பாலா அண்ணைக்கு ஏமாற்றமே காத்திருக்கும். “ஒரு அரசாங்கத்தை எதிர்த்துப் போராடி உங்களால் எதையும் சாதிக்க முடியாது” என்று அப்பொழுது பாலா அண்ணையை எள்ளிநகையாடும் ‘மெத்தப்படித்த’ தமிழ்க் கனவான்கள், அவரை வெறுங்கையோடு திருப்பியனுப்புவார்கள். ஆனால் அதனையிட்டு பாலா அண்ணை சோர்ந்துபோனது கிடையாது. தனது வருமானத்தையும், கலாநிதி ஆய்வுக்காக தான் சேர்த்து வைத்திருக்கும் பணத்தையும் அப்படியே மொத்தமாக தலைவர் அவர்களுக்கு அனுப்பி விட்டு அடேல் அன்ரியுடன் பாலா அண்ணை பட்டினி கிடந்த நாட்கள் ஏராளம். கடும் குளிர்க் காலங்களில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும். மின்சாரக் கட்டணமும், எரிவாயுக் கட்டணமும் செலுத்துவதற்குப் பணமின்றி கடும் குளிரில் போர்வைக்குள் அமர்ந்திருந்து, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் போராட்டத்திற்கான எழுத்துக்களையும், தனது கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வுகளையும் பாலா அண்ணை மேற்கொண்ட நாட்கள் ஏராளம்.
1983 கறுப்பு யூலை இனப்படுகொலைகளைத் தொடர்ந்து அனைத்துத் தமிழ்ப் போராளி இயக்கங்களுக்கும் இந்தியா ஆயுதப் பயிற்சி அளித்த பொழுது அப்பயிற்சித் திட்டத்திலிருந்து திட்டமிட்ட வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஓரம்கட்டப்பட்டிருந்தது. அனைத்துப் போராளி இயக்கங்களும் பலமடைய, இந்திய ஆயுதப் பயிற்சி கிட்டாத நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பலவீனமடைந்து சிறுமைப்படும் அபாயம் ஏற்பட்டிருந்தது. அவ்வேளையில் இலண்டனில் தனது கலாநிதி ஆய்வின் இறுதிக் கட்டத்தை பாலா அண்ணை எட்டியிருந்ததோடு இலண்டன் சவுத்பாங் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அப்பொழுது பாலா அண்ணைக்கு தலைவர் அவர்களிடமிருந்து அவசர செய்தி வந்தது. உடனடியாக இந்தியா சென்று எப்படியாவது இந்திரா காந்தி அம்மையாருடன் தொடர்பை ஏற்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு இந்திய ஆயுதப் பயிற்சி கிடைப்பதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என்பதே அந்தச் செய்தி.
அந்தத் தருணத்தில் எந்தத் தயக்கமும் இன்றி எல்லாவற்றையும் விட்டெறிந்து விட்டு தலைவரின் அழைப்பை ஏற்று பாலா அண்ணை இந்தியா சென்றார். தமிழகத்தில் தங்கியிருந்து பெரும் சிரமத்தின் மத்தியில் இந்திரா காந்தியுடன் தொடர்பை ஏற்படுத்தி அதன் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்திய ஆயுதப் பயிற்சி கிடைப்பதற்கு வழிவகை செய்தார். பின்னர் அங்கிருந்தவாறே எம்.ஜி.ஆருடன் தொடர்பை ஏற்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பெரும் தொகையில் நிதியுதவிகளைப் பெற்றுக் கொடுத்தார்.

இவ்வாறு எண்பதுகளில் தலைவரின் பாதுகாப்புக் கவசமாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவ வளர்ச்சியில் அச்சாணியாகவும் விளங்கிய பாலா அண்ணை, இந்திய-புலிகள் போரில் தலைவருக்கு பக்கபலமாக நின்று காய்களை நகர்த்தி, பிரேமதாசாவை தன்வசப்படுத்தி ஈற்றில் இந்தியப் படைகளை தமிழீழ மண்ணை விட்டு வெளியேற்றுவதற்கு வழிவகை செய்தார். இதன் பின்னர் யாழ்ப்பாணத்தை நிர்வாகத் தலைநகராகக் கொண்டு 1990ஆம் ஆண்டு தமிழீழ நடைமுறை அரசைத் தமிழீழ விடுதலைப் புலிகள் நிறுவிய பொழுது, இயக்கத்தின் அரசியல் - நிர்வாகக் கட்டமைப்புக்களின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் காத்திரமான பங்கை பாலா அண்ணை வகித்தார். தமிழீழக் காவல்துறை, நீதித்துறை, நிதித்துறை, அரசியல்துறை போன்றவற்றைச் சேர்ந்த போராளிகளுக்கு ஆசானாக விளங்கியவர் பாலா அண்ணைஒரு அரசுக்குரிய பண்பியல்புகளுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் மிளிரத் தொடங்கிய அக்காலப் பகுதியில் தலைவர் பிரபாகரன் அவர்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் என்றே இயக்கத்தின் அதிகாரபூர்வ ஊடகங்கள் உட்பட தமிழ்த் தேசிய ஊடகங்கள் விளித்து வந்தன. அதனை மாற்றியமைத்துத் தலைவர் அவர்களை தமிழீழத் தேசியத் தலைவராக அழைக்கும் நடைமுறையைக் அறிமுகப்படுத்தியவர் பாலா அண்ணை. ‘பிரபாகரன் வெறும் புலிகளின் தலைவர் மட்டுமல்ல. அவர் தமிழீழத் தேசத்தின் தலைவர்’ என்ற யதார்த்தத்தை அனைவருக்கு உறைக்கச் செய்த பெருமை பாலா அண்ணைக்கே உண்டு.


1990களின் முற்பகுதியில் சிங்களப் படைகளின் முற்றுகைக்குள் யாழ் குடாநாடு சிக்கியிருந்த பொழுது அதனை உடைத்து கடல்வழி ஆதிக்கத்தை கடற்புலிகள் நிறுவுவதற்கான ஆக்கங்களை பாலா அண்ணை எழுதினார். பாலா அண்ணையின் ஆக்கங்கள் கடற்புலிகளுக்கு மட்டுமன்றி தரையில் களமாடிய புலிவீரர்களுக்கும் உத்வேகத்தை அளித்தன.

இதேபோன்று 1997ஆம் ஆண்டு ஜெயசிக்குறுய் படை நடவடிக்கையை சிங்களம் தொடங்கிய பொழுது போராளிகளின் மன உறுதியை தக்க வைப்பதற்கான ஆக்கங்களை எழுதி, போராளிகளுக்கும், தளபதிகளுக்கும் அவற்றை பாலா அண்ணை கிடைக்கச் செய்தார். 2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கிளிநொச்சியில் நடைபெற்ற அனைத்துலக செய்தியாளர் மாநாட்டில் “ரணில் விக்கிரமசிங்கவை உங்களின் பிரதம மந்திரியாக ஏற்றுக் கொள்கின்றீர்களா?” என்று தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை நோக்கி வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பிய பொழுது, உடனடியாக அதில் குறுக்கிட்ட பாலா அண்ணை, “இங்கு தமிழீழத்தில் பிரதமரும், ஜனாதிபதியும் பிரபாகரன்தான்” என்று அடித்துக் கூறினார்.

இவ்வாறு தலைவர் பிரபாகரனுக்காகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழ் மக்களின் விடிவிற்காகவும் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து பாலா அண்ணை புரிந்த அளப்பெரும் பணிகளை ஒரு பத்தியில் நாம் முழுமையாக விபரிக்க முடியாது. ஆனாலும் பாலா அண்ணையின் மறைவை முன்னிட்டு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் “எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும், உத்வேகமும் அளித்தவர். ஆலோசனையும், ஆறுதலும் தந்தவர். எனது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு, எனது பளுக்களைப் பங்கிட்டுக் கொண்டவர். எமது விடுதலை இயக்கம் தோற்றம்பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளையும், வேதனைகளையும், சவால்களையும், சங்கடங்களையும் தாங்கிக் கொண்டவர்.” என்று பாலா அண்ணை பற்றி தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டதை நாம் ஆழமாக ஆராய்ந்தால் அவருக்குத் தேசத்தின் குரல் என்ற அதியுயர் பட்டத்தை ஏன் தலைவர் அவர்கள் வழங்கினார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
நன்றி: ஈழமுரசு

0 கருத்துக்கள் :