தென்னாப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா நேற்று காலமானார்.

6.12.13

தேசத்தின் மகத்தான புதல்வனை இழந்து தவிக்கிறது தென்னாபிரிக்கா…
தென்னாப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா (95) ஜோகன்னெஸ்பர்க்கில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நள்ளிரவு காலமானார்.
கடந்த ஜூன் 8ஆம் தேதி நெல்சன் மண்டேலா நுரையீரல் பாதிப்பு காரணமாக பிரிட்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 3 மாதங்களாக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். தொடர்ந்து அவருக்கு வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு இந்திய நேரப்படி 12.20 மணிக்கு நெல்சன் மண்டேலா மரணம் அடைந்தார். இந்தச் செய்தி அந்நாட்டு ஜனாதிபதியால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்சன் மண்டேலாவின் மரணத்திற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன், அமெரிக்க அதிபர் ஒபாமா உள்பட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


வாழ்க்கை வரலாறு

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி மண்டேலா இனவெறி ஆட்சிக்கு எதிராக போராடி 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். சிறையின் பெரும்பாலான காலத்தை ராபன் தீவில் உள்ள சிறிய அறையில் கழித்தார். 1990ஆம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு தென்னாப்பிரிக்காவில் புதிய குடியரசு மலர்ந்தது.
பின்னர், நெல்சன் மண்டேலா 1994 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி ஆனார்.
அவர் ஜனாதிபதி ஆனபின்னர் 1998ஆம் ஆண்டு அந்நாட்டில் உள்ள பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.
தென்னாப்பிரிக்காவில் கறுப்பினத்தை சேர்ந்த முதலாவது ஜனாதிபதியான மண்டேலா, 1999ஆம் ஆண்டு அந்த பதவியை விட்டு விலகினார்.
பின்னர் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார்.
அமைதிக்கான நோபல் பரிசை நெல்சன் மண்டேலா பெற்றுள்ளார். மண்டேலா உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர்.

0 கருத்துக்கள் :