யாழில் மாணவர்களின் கல்விப் பற்றை அழிக்க முயற்சி : முதலமைச்சர்

16.12.13

இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் குடாநாட்டு மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. இராணுவக்கட்டுப்பாட்டில் இருப்பதால், யார் இதனை அறிமுகப்படுத்தினர் என்று ஆராய்ந்து பார்க்க முடியவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தென்மராட்சி கல்வி வலயத்தின் மார்கழித் திங்கள் முழுநிலா நாள் கலை விழா நிகழ்வு சாவகச்சேரி சிவன் கோயில் வீதியிலுள்ள தென்மராட்சி கலைமன்ற கலாசார மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது மாணவ சமூகத்தை சீர்குலைக்க சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றார்கள். மாணவர்களிடமுள்ள சுதந்திர வேட்கையை அழிப்பதுடன், மாணவர்களின் கல்வி மீதுமுள்ள பற்றை இல்லாதொழித்து புலன் இன்பங்களில் மாணவர்களின் எண்ணங்களை திசைதிரும்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே மாணவர் சமுதாயம் இவற்றை தவிர்த்து விளையாட்டுகளிலும் கலைகளிலும் கல்வியிலும் தமது ஈடுபாட்டைக் காட்ட வேண்டியது அவர்களின் இன்றியமையாத கடமையாகும்.
இலங்கையில் சுதந்திரம் கிடைத்த காலத்தில் சிங்கள அரசியல் தலைவருடன் ஒத்துழைத்து செல்வோம் என தமிழ் மக்களின் அரசியல் சிந்தனைகள் இருந்தது. ஆனால் சிங்கள தலைவர்கள் இந்திய வம்ச வழியினரின் வாக்குரிமையை பறிந்த போது எம்மக்களிடையே முரண்பாடுகளை வளரத்தொடங்கின. அதன் பின்னர் படிப்படியாக அடக்குமுறைகள் இலங்கைத் தமிழர்களுக்கும் பிரயோகிக்கப்பட்டது.
இதனையடுத்தே, எமது இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளப்பட்டனர். போர் முடியும் போது தான் தெரிந்தது பயங்கரவாதம் இளைஞர்களின் தனிப்பட்ட சொத்தல்ல என்பது. இப்பொழுது சர்வதேச அரசாங்கங்கள் யாதார்த்தத்தை புரிந்துகொண்டு நடந்து வருகின்றனர் என்றார்.

0 கருத்துக்கள் :