ஒதியமலைப் படுகொலை நினைவு நாளை நினைவு கூர்ந்த மக்கள்

2.12.13

கடும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஒதியமலைப் படுகொலையின் நினைவு நாளை அப்பகுதி மக்கள் மழையின் மத்தியிலும் இன்று நினைவு கூர்ந்தனர்.
பெருமளவில் இந்நினைவு நாளை அனுட்டிப்பதற்கு முடியாத நிலையில் அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோயிலில் அன்னதான நிகழ்வுடன் மக்கள் , படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு வணக்கம் செலுத்தினர். குறித்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்கள் து. ரவிகரன், அன்டனி ஜெகநாதன், திருமதி மேரிகமலா குணசீலன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

ஒதியமலைப் படுகொலை நினைவு நாள் இன்றாகும். 1984 ஆம் ஆண்டில் டிசம்பர் இரண்டில் ஓதியமலையில் 32 பொதுமக்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களில் 27 பேர் ஒதியமலை வாசிகசாலையிலும் , 5 பேர் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் உழவு இயந்திரத்தில் எரித்தும் கொல்லப்பட்டிருந்தனர்.

அங்கு ஒதியமலைப் படுகொலையின் போது தனது தந்தையை இழந்த பெண்ணொருவர் , வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனிடம் தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டது , மிகவும் உருக்கமாக இருந்தது.

 இதே போன்ற ஒரு மழை நாளிலேயே அந்தப்படுகொலை இடம்பெற்றதாகவும், அப்போது தன் தந்தையை இழந்த நிலையில் தான் மிகவும் அதிர்ச்சியுற்றதகாவும், அன்று சிறுவனாக இருந்த தன் மகனும் முள்ளி வாய்க்காலில் கொல்லப்பட்டு விட்டதாகவும் அந்தப்பெண்மணி அழுகுரலுடன் தெரிவித்தார்.

இந்நினைவு நிகழ்வில் கலந்து கொண்டது மட்டுமின்றி, ஒதியமலை மக்களின் அனைத்து பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தி, அவர்களுடன் இணைந்திருப்பதாக ரவிகரன் மக்களிடம் தெரிவித்தார்.
பிள்ளையார் கோயிலில் விசேட வழிபாடுகள் முடிந்தவுடன் திரளான மக்கள் பங்களிப்புடன் அன்னதான நிகழ்வு இடம்பெற்றது. இதே வேளை, நிகழ்வில் பத்திற்கும் அதிகமான படைப் புலனாய்வாளர்களும் , ராணுவத்தினரும் இறுதி வரை அந்நிகழ்வைக் கண்காணித்தனர்.

0 கருத்துக்கள் :