தென்னாபிரிக்கா வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு

2.12.13

நல்லிணக்க ஆணைக்குழு அமைப்பது தொடர்பாக பேச்சு நடத்த வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தென்னாபிரிக்கா அழைப்பு விடுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கு நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு உதவத் தயாராக இருப்பதாக, அண்மையில் கொழும்பு வந்திருந்த தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்திருந்தார்.
இந்த திட்டத்துக்கு தென்னாபிரிக்கா உதவியளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும் தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா கொழும்பில் சந்தித்து, இந்தத் திட்டம் குறித்து எடுத்துக் கூறியிருந்தார்.

அதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், தாம் இந்தியாவுடன் கலந்துரையாடிய பின்னர் பதிலளிப்பதாக கூறியிருந்தனர்.
இந்தநிலையில், தமது யோசனை குறித்த பதிலுடன் தென்னாபிரிக்காவுக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பிரிட்டோரியா அழைப்பு விடுத்துள்ளது.

அடுத்த வாரங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு பிரிட்டோரியா வரும் என்றும் தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் குறிப்பிட்டுள்ளது.

0 கருத்துக்கள் :