இனம்வாழ சிறையில் தவமிருந்த புரட்சிவீரன் நெல்சன் மண்டேலா!

7.12.13

வெள்ளை நிறவெறி ஒடுக்குமுறையிலிருந்து தென்னாபிரிக்கா மக்களுக்கு விடுதலை தேடித்தந்த – கறுப்பின மக்கள் வாழ்வில் வெளிச்சம் பாய்ச்சிய – மாபெரும் தலைவர் நெல்சன் மண்டேலா அவர்களின் மறைவு உலகில் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்கள் அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகிலே விடுதலை உணர்வின் முழு வடிவமாக மண்டேலா அவர்கள் விளங்கினார். ஆடுகள், மாடுகள் போல் ஒரு காலத்தில் அடிமைகளாக ஏலத்தில் விலைகூறி விற்கப்பட்ட ஆபிரிக்காவின் கறுப்பின மக்கள் வாழ்வில் புதிய நம்பிக்கையையும் மனவுறுதியையும் உருவாக்கி 'எங்களுக்கும் மானமுண்டு, வீரமுண்டு – எங்களுக்கும் நாடு உண்டு, அரசு உண்டு' என வெள்ளை இன ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராகப் போராடச்செய்த ஆயிரம் வலிமை கொண்ட ஓர் பேராற்றலின் குறியீடு மண்டேலா எனலாம். 'வெள்ளை நிறவெறி அரசு' என்னும் பெருஞ் சிறைச்சாலையாக தென்னாபிரிக்கா இருந்துவந்த காலத்தில், அதை உடைத்தெறிய மண்டேலா அவர்கள் அங்கு ஒரு சிறிய சிறைச்சாலையை ஆயுதமாக்கினார். அதில் வெற்றியும் பெற்றார். எதிரிக்கு அடிபணியாத, விட்டுக்கொடுக்காத, விடுதலைக் கொள்கையிலிருந்து எள்ளளவும் விலகாத மனவுறுதியும் எஃகு நெஞ்சமும் கொண்டவரே மண்டேலா அவர்கள் எனலாம். நெருப்பின் நடுவில் நின்று தவம்செய்த நெஞ்சுரம் மிக்க போராளி! நலிவுற்ற உலக மக்கள் அனைவருக்கும் மண்டேலா அவர்கள் நம்பிக்கை ஒளிச் சுடர்! தமிழீழ விடுதலைப் போராளிகளின் நெஞ்சங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய ஓர் உயரிய தலைவர் மண்டேலா ஆவார். வீறு கொண்டு தென்னாபிரிக்க மக்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து, உலகம் வியக்க ஈக வரலாறு படைத்து விழி மூடிய மாபெரும் விடுதலையாளர் மண்டேலா அவர்களுக்கு தமிழீழ மக்கள் சார்பாக எமது வீரவணக்கத்தை செலுத்துகின்றோம். நன்றி. 'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.'

0 கருத்துக்கள் :