ஆழிப்பேரலை நினைவு நிகழ்வு இன்று நாடெங்கும் அனுஷ்டிப்பு

26.12.13

ஆழிப்பேரலை இடர்களின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முகமாக இன்று காலை 9.25 முதல் 9.27 வரையான இரண்டு நிமிடங்கள் சகலரும் அஞ்சலி செலுத்துமாறு, இடர் முகாமைத்துவப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.
 
இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை 2004 ஆம் ஆண்டு ஆழிப் பேரலை தாக்கிய பின்னர் ஒவ்வொரு ஆண்டும் டிசெம்பர் 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்புத் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
 
இந்த வருடம் தேசிய பாதுகாப்புத் தினத்தின் தேசியரீதியான பிரதான நிகழ்வு களுத்துறையில் இடம்பெறவுள்ளது. அத்துடன் மாவட்டங்கள் ரீதியிலான தேசிய பாதுகாப்புத்தின நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
குறிப்பாக ஆழிப்பேரலையால் பாதிப்புற்ற பகுதிகளில் இந்த நிகழ்வு உணர்வுடன் அனுஷ்டிக்கப்படவுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆழிப்பேரலையால் பாதிப்புற்ற அம்பாறை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் விசேட நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ஆழிப்பேரலையில் உயிரிழந்தோரின் கல்லறைகள், நினைவிடங்கள் என்பவற்றின் அவர்களின் உறவுகள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
இதேவேளை, யாழ்.மாவட்ட தேசிய பாதுகாப்புத்தின நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு யாழ்.மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இன்று இடம்பெறும் இந்த நிகழ்வில் இடர்முகாமைத்துவ திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கிராமசேவையாளர்களுக்கான மற்றும் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்திய போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
  
  ஆழிப்பேரலை நினைவேந்தலை முன்னிட்டு காலை 9.25 மணி முதல் 9.27 வரையில் இரண்டு நிமிட நேர அஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதன்போது வீதிகளில் பயணிப்போர் அலுவலகங்களில் பணிபுரிவோர் உட்பட அனைவரும் இரண்டு நிமிடம் தமது பணிகளை நிறுத்தி எழுந்து நின்று அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :