சென்னை சென்றடைந்தார் மகா தமிழ் பிரபாகரன்

28.12.13

இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக பத்திரிகையாளர் மகா. தமிழ் பிரபாகரன் இன்று விடுவிக்கப்பட்டார்.
இலங்கை பயங்கரவாத தடுப்புத் துறையினரின் காவலில் வைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு வந்த தமிழ் பிரபாகரன், இன்று மதியம் விடுவிக்கப்பட்டு, குடிவரவு குடியகல்வுத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அவர்களது ஒப்புதலும் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் கொழும்பில் இருந்து விமானம் மூலம் சுமார் 8 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
முன்னதாக கடந்த 25 ஆம் தேதியன்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோருடன் சேர்ந்து தமிழ் பிரபாகரன் கிளிநொச்சி மாவட்டத்தின் மிக பின்தங்கியிருக்கும் வேரவில்,கிராஞ்சி பகுதிக்கு சென்றார்.

அவர்கள் ஒரு கிராமத்திற்குச் சென்று மக்களோடு உரையாடிக் கொண்டிருக்கையில் அங்குவந்த இலங்கை ராணுவத்தினர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து போலீசில் ஒப்படைத்தனர்.
மாலையில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினரை விசாரணை செய்து பின்னர், தமிழ் பிரபாகரனை தவிர்த்து மற்ற அனைவரையும் விடுவித்தனர்.
ஆனால் சுற்றுலா விசா விதிமுறைகளை மீறியதாக தமிழ் பிரபாகரன் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு துறையினர் அவரை, தங்கள் காவலில் வைத்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் தமிழ் பிரபாகரனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பிலும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பேட்டி
சென்னை திரும்பிய மகா.தமிழ் பிரபாகரன் சென்னை விமான நிலையத்தில் வைத்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர், ”இலங்கை ராணுவத்தால் தடை செய்யப்பட்ட எந்தப் பகுதிக்கும் நான் செல்லவில்லை. அவர்களால் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுமே சென்று புகைப்படம் எடுத்தேன்.
இலங்கை ராணுவத்தினர் துப்பாக்கி முனையில் என்னை கைது செய்தனர். இரவில் கைவிலங்கிட்டு அடைத்து வைத்திருந்தனர். இலங்கை ராணுவத்தின் விசாரணையால் கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது” என்றார்.

0 கருத்துக்கள் :