கலைகின்றதா, சிங்களக் கனவுகள்?

3.12.13

நீண்ட காலமாக சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஒற்றைக் கனவாக இருந்தது, தமிழர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே. துட்டகைமுனு காலத்தில் ஆரம்பமான இந்த பேரினவாத சிந்தனை, சுதந்திர இலங்கையின் மகிந்த ராஜபக்சே ஆட்சி வரை தொடர்ந்து வருகின்றது. 
 
தமிழர்களைத் தோற்கடிக்க, அவர்களது வளங்களை அபகரிக்க, நிலங்களை ஆக்கிரமிக்க என சிங்கள தேசியவாதத்தின் சிந்தனைகள் எல்லாமே அதில் மட்டுமே முடங்கிக்கொண்டதனால் மனித நேயமும், மனிதாபிமான சிந்தனைகளும் சிங்கள சமூகத்தில் அருகிப் போய்விட்டன. 
 
தமிழ் மக்களது வாழ்வுரிமைப் போராட்டங்கள் சிங்கள பேரினவாதத்தால் தோற்கடிக்கப்பட்ட போதும், சிங்கள மக்கள் சந்தோசப்பட்டார்கள் (இங்கே சிங்கள மக்கள் எனக் குறிப்பிடப்படுவது, அவர்களில் பெரும்பான்மையோரின் மனநிலை குறித்தே). நிராயுதபாணிகளான தமிழ் மக்கள் இனக் கலவரம் என்ற பெயரில் சிங்களக் காடையர்களால் வேட்டையாடப்பட்டபோதும், குதறி எடுக்கப்பட்ட போதும் சிங்கள மக்கள் அதற்காகப் பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை. சிங்களப் பேரினவாத அரச பயங்கரவாதத்திற்கு எதிராகத் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடிய போதும், தமிழர்களுக்கான நீதி வழங்கப்பட வேண்டும் என்று சிங்களப் பெரும்பான்மை நினைக்கவில்லை. அவர்களது குறி எல்லாமே தமிழர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே. 
 
தமிழீழ மக்களது ஆயுதப் போராட்டத்திற்கான காரணங்களைக் கண்டுபிடித்து, அதற்கான தீர்வினை வழங்கவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை சிங்கள மக்கள் தமது ஆட்சியாளர்களிடம் உருவாக்கியிருந்தால், இலங்கைத் தீவின் அத்தனை வளங்களும் அழிவுகளுக்கான ஆயுதங்களாக மாற்றம் பெற்றிருக்காது. சிங்களப் பேரினவாதமும், அதனை மக்கள் மயப்படுத்திய பௌத்த சிந்தனைவாதமும் அதற்கான பக்குவத்தைத் தமது மக்களுக்கு வழங்கியிருக்கவில்லை. தமிழர்களைத் தோற்கடிப்பதற்காகத் தங்களது அத்தனை வளங்களையும் மட்டுமல்ல, தங்களது எதிர்காலத்தையும் சேர்த்தே வாரி வழங்கியது சிங்களம். 
 
மிகக் கொடூரமான போர் நிகழ்த்தப்பட்டு, தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட போதும், அது சிங்கள இனத்திற்குள் எந்தச் சலனத்தையும் ஏற்படுக்கவில்லை. தமிழர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்ற இலக்கோடு, தடைசெய்யப்பட்ட போராயுதங்களைப் பயன்படுத்தி, ஒரு இன அழிப்புப் போரை சிங்கள ஆட்சியாளாகள் நடாத்தி முடித்தபோதும் மனித அழிவுகள் குறித்து சிங்களம் கவலை கொள்ளவில்லை. மாறாக, தமிழர்களது ஆயுத போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்த மகிந்த ராஜபக்சே நவீன 'துட்ட கைமுனு'வாக சிங்களத்தால் கொண்டாடப்பட்டார். தமிழின அழிப்பின் இறுதி நாளை, சிங்களத்தின் வெற்றி நாளாகக் கொண்டாடுவதற்கும் சிங்களம் வெட்கப்படவில்லை. 
 
இறுதிப் போர் சிங்களத்திற்கு வழங்கிவிட்டதாகக் கருதப்பட்ட வெற்றியும், பெருமிதமும் இப்போது மெல்ல, மெல்ல கரைந்து வருகின்றது. தமிழர்களைத் தோற்கடிக்க அத்தனை வளங்களையும் அள்ளிக் கொடுத்த சிங்கள மக்கள் இப்போதுதான் தாமும் அம்மணமாக நிற்பதைப் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கின்றார்கள். தமிழர்களை எதிர்த்துப் போராடுவதற்காக தங்களது முப்படைகளுக்கும் சீருடை வழங்கிய சிங்கள இனம், இப்போது தமது தலைநகரில் கோவணத்துடன் நின்று போராடுகின்றது. 
 
தமிழர்களுடனான யுத்தத்திற்கு உலக நாடுகளிடமிருந்து பெற்ற கடனுக்கு மேலாகத் தன்மீது சுமத்தப்படும் போர்க் குற்றங்களை மறைப்பதற்காகக் கடன் பட்டுச் செலவு செய்ய வேண்டிய நிலைக்கு சிங்கள ஆட்சி பீடம் தள்ளப்பட்டுள்ளது. உலக நாடுகள் மத்தியிலும், பன்நாட்டு அரங்குகளிலும் பேரம் பேசும் சக்தியை இழந்துவிட்ட சிங்கள அரசு, அங்கெல்லாம் சந்திக்கும் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக மேலும் செலவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பல கோடி செலவுகளில் தலைநகர் கொழும்பில் நடாத்த முற்பட்ட பொதுநலவாய மாநாடும் எதிர்பார்த்த வெற்றிகளை சிங்கள தேசத்திற்குப் பெற்றுக் கொடுக்கவில்லை. 
 
அடுத்த வருடம், மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் மாநாடு குறித்த அச்சம் இப்போதே சிங்கள ஆட்சியாளர்களைப் பாடாய் படுத்துகின்றது. தமிழர்களைத் தோற்கடிக்க சிங்களம் மேற்கொண்ட நீதியற்ற யுத்தம் இப்போது சிங்களத்தை உலக அரங்குகளில் தோற்கடிக்கும் கருவியாக மாறியுள்ளது. 
 
இறுதிப் போரில் தமிழர்கள் கொல்லப்பட்டார்களே ஒழிய, அவர்கள் தோற்கடிக்கப்படவில்லை என்பதை இனியாவது சிங்கள இனம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களுக்கான நீதி, இதற்குப் பின்னரும் மறுக்கப்பட்டால், சிங்களம் நிரந்தரமாகத் தோற்றுப்போகும் நிலை உருவாகிவிடும் என்பதை சிங்கள மக்கள் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும். சிங்களக் கனவு முற்றாகவே கலைந்துவிடும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். 
 
- இசைப்பிரியா

0 கருத்துக்கள் :