விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கடத்தியதாக சிறை: சிங்கப்பூர் வியாபாரியை அமெரிக்கா நாடு கடத்தியது

29.12.13

சிங்கப்பூரை சேர்ந்த இந்திய வம்சாவளி வியாபாரியான பல்ராஜ் நாயுடு ராகவன் (வயது 51) என்பவர், கடந்த 2006-ம் ஆண்டு அமெரிக்கா சென்று அங்குள்ள ஒருவரிடம், விடுதலைப்புலிகளுக்காக ஆயுதம் வாங்க பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்படி எறிகுண்டு லாஞ்சர்கள், நவீன துப்பாக்கிகள் உள்பட சுமார் ரூ.5½ கோடிக்கு ஆயுதங்கள் வாங்க முயன்றதாக தெரிகிறது.

இந்த ஆயுதங்கள் அனைத்தும் இலங்கை அருகே உள்ள சர்வதேச கடல் எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து விடுதலைப்புலிகளுக்கு அளிக்க ஏற்பாடு செய்திருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சுமார் 28 டன் ஆயுதங்கள் அமெரிக்காவின் குவாம் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்தநிலையில் பல்ராஜ் நாயுடு தனது கூட்டாளிகளான சிங்கப்பூரை சேர்ந்த அனிபா மற்றும் இந்தோனேசியாவை சேர்ந்த 2 பேர் மற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவருடன் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தண்டனை நிறைவடைந்த நிலையில் பல்ராஜ் நாயுடுவை அமெரிக்க அரசு கடந்த 16-ந்தேதி சிங்கப்பூருக்கு நாடு கடத்தியது. இந்த தகவலை அமெரிக்க சுங்கத்துறை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

0 கருத்துக்கள் :