விழலுக்கு இறைத்த நீராகும் வடக்கு மக்களின் நம்பிக்கை

7.12.13

அதிகாரப் பரவலாக்கலா அல்லது மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூறுவதா, எது முக்கியத்துவம் மிக்கது என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.
வடமாகாண சபையின் மூலம் மக்களுக்கு அவசரமாகத் தேவைப்படுகின்ற சேவைகளைச் செய்ய வேண்டிய தேவை முக்கியத்துவமிக்கதாக இருக்கின்றது. மக்களுடைய வாழ்வாதாரம் உள்ளிட்ட பல முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய அவசியத் தேவையும் இருக்கின்றது. அதே நேரம் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்கும் குறிப்பாக அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டியதும், முக்கியமாகும்.

ஏனெனில், போருக்குப் பின்னரான காலப்பகுதியிலும், அடிப்படை உரிமைகள் உட்பட மனித உரிமைகள், மோசமாக மீறப்படுகின்றன. இடம்பெயர்ந்துள்ள மக்களினதும், மோசமான இடப்பெயர்வுக்குப் பின்னர் மீள்குடியேறியுள்ள மக்களினதும் உரிமைகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாத போக்கே காணப்படுகின்றது. அரசாங்கத்தினதும், அரச கட்டமைப்புக்களான இராணுவம் உள்ளிட்ட பலதரப்பினருடைய இத்தகைய செயற்பாடுகளைத் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.

பொதுநலவாய மாநாட்டுக்கு முந்திய நிலைமை

சுனாமி பேரலையைப் போன்று பொதுநலவாய மாநாடு இலங்கையில் பெரும் புயலை ஏற்படுத்தி நடந்து முடிந்திருக்கின்றது. ஆயினும், அந்த மாநாட்டுக்கு முன்னதாக இலங்கை அரசியலில் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான விடயமே முன்னிலையில் இருந்தது. முன்னுரிமை பெற்றிருந்தது. ஏனெனில் இந்த மாநாட்டுக்கு முன்னதாக நாட்டில் வடமாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்று முடிந்திருந்தது. அந்தத் தேர்தலில் அரசாங்கம் மோசமான முறையில் வடபகுதி மக்களினால் தோற்கடிக்கப்பட்டு, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அமோகமான வெற்றியை ஈட்டியிருந்தது.
இந்த மாகாண சபையில் பெரும் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தி, முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் அதிகூடிய பெரும்பான்மையான மேலதிக வாக்குகளினால் தெரிவாகியிருந்தார். நீPதித்துறையில் நீண்டகால அனுபவம் பெற்றிருப்பவர் என்ற காரணத்தினால், அரசாங்கத்திற்கு சட்ட ரீதியாக அதிக நெருக்கடிகளைக் கொடுத்து, அவர் வடமாகாண சபைக்கு அதிகாரங்களைப் பெற்றுச் செயற்படுவார் என்ற எதிர்பார்ப்பு எல்லா தரப்பினரிடையேயும் இருந்தது.

மாகாணசபைக்கான உறுப்பினர்களாகப் பதவியேற்பது தொடக்கம். பல்வேறு பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வது வரையில், மாhகண சபையின் வரைமுறைகள், சட்டதிட்டங்கள், அதிகாரங்கள் என்பன பற்றிய பேச்சுக்களும் சிந்தனைகளும் முக்கியத்துவம் பெற்றிருந்தன. அரசாங்கமும்கூட, வடமாகாண சபையின் செயற்பாடுகள், அதற்குரிய அதிகாரங்களைப் பற்றி அதிக கவனமும், அக்கறையும் செலுத்த வேண்டிய நிலைமையில் இருந்தது.
அதேநேரம், வடமாகாண சபையை முன்னிறுத்தி, அதிகாரப் பரவலாக்கல் விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கமும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் நெருங்கிச் செயற்பட வேண்டிய தேவையும் எழுந்திருந்தது. இந்தப் போக்கின் அடிப்படையிலேயே வடமாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்றவுடன், எதிர்ப்புக்கள் இருந்த நிலையிலும், அரசாங்கத்திற்குத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நல்லெண்ணத்தைக் காட்டும் வகையில், கொழும்பில் அலரி மாளிகைக்குச் சென்று ஜனாதிபதியின் முன்னிலையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். தொடர்ந்து இரண்டாம் முறையாகவும் அங்கு சென்று அமைச்சர் பதவிப் பொறுப்புக்களையும் ஜனாதிபதியின் முன்னிலையில் அவர் ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் மாகாண சபைக்கான அதிகாரப் பரவலாக்கலில் ஒரு முன்னேற்றம் ஏற்படும் என்ற வகையில் அதிகாரப் பரவலாக்கல் என்பது முக்கியத்துவம் பெற்றிருந்தது. அதில் முன்னேற்றம் ஏற்படலாம், அரசாங்கமும் தனது கடும்போக்கைக் கைவிட்டு, தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் விட்டுக்கொடுப்புடன் நடந்து கொள்ளும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருந்தது.


ஆனால், துரதிஸ்டவசமாக, மாகாணசபைக்கான அதிகாரங்கள் பற்றி அரசாங்கம் அக்கறை காட்டவில்லை. பதவிப்பிரமாணம் செய்து கொண்டபோது, முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் ஜனாதிபதி நடத்தியாகத் தெரிவிக்கப்படுகின்ற சந்திப்பின்போது, மாகாண சபைக்குரிய அதிகாரங்களில் விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்வதாகத் தெரிவித்த உறுதிமொழிகள் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை என தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த உறுதிமொழியின் அடிப்படையில் சீரான ஜனநாயஎ முறையில் வடமாகாண சபையின் செயற்பாடுகளை முன்னெடு;ப்பதற்கு இராணுவ பின்னணியைக் கொண்ட, வடமாகாண ஆளுனரை மாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் பிரேரணையைக் கொண்டு வந்ததையும் அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை. மாறாக அதையும் அரசு தன்க்கு விரோதமான போக்காகவே காட்டிக்கொண்டது. கூட்டமைப்பின் பொறுப்பில் உள்ள வடமாகாண சபையுடன் இணைந்து செயற்படுவதற்கு அரச தரப்பினர் தயாராக இல்லை என்பதே வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இந்தச் சூழலில்தான் பொதுநலவாய மாநாடு கொழும்பில் நடைபெற்றது.

பொதுநலவாய மாநாட்டு நேரம்

பொதுநலவாய மாநாடு நடைபெற்ற போது அதில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த பிரிட்டிஷ் பிரதமர் யாழ்;ப்பாணத்திற்கு விஜயம் செய்ததும், அவரைச் சந்திப்பதற்கு முயன்ற காணாமல்போனோரின் உறவினர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தடுக்கப்பட்டு அது பெரும் ஆர்ப்பாட்டப் போராட்டமாக மாறியதும், அதேநேரம், சனல் 4 உட்பட பிரிட்டிஷ் செய்தியாளர்களுக்கு எதிராகக் காட்டப்பட்ட அரச தரப்பு எதிர்ப்புக்களும், அரச புலனாய்வாளர்களின் கண்காணிப்பு நடவடிக்கைகளும் நிலைமைகளைத் தலைகீழாக மாற்றி, மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என்ற அரசாங்கத்திற்கு எதிரான அழுத்தம் நிறைந்த போக்கு முன்னிலை பெற்றிருந்தது.
பொதுநலவாய மாநாட்டிற்கு வருகை தந்திருந்த உலக நாடுகளின் தலைவர்கள் மட்டத்திலும், பொதுநலவாய மாநாட்டின் செய்திகள் தொடர்பான நிலைமையிலும், போர்க்குற்றம் பற்றிய விடயமே முதன்மை பெற்றிருந்தது. பொதுநலவாய மாநாட்டின் இறுதியில் நடைபெற்ற செய்தியாளர்கள் மாநாட்டில், ஒரு கேள்விகூட, பொதுநலவாய மாநாட்டையும், அதன் தீர்மானங்கள், அதன் எதிர்காலச் செயற்பாடுகள்பற்றி கேட்கப்படவில்லை. அதில் கலந்து கொண்டிருந்த செய்தியாளர்கள் அனைவருமே இலங்கையின் போர்க்கால மனித உரிமை மீறல்கள் பற்றியும், குறிப்பாக போர்க்குற்றச் செயற்பாடுகள் என குறிப்பிட்டு அது தொடர்பாக பிரிட்டிஷ் பிரதமர் இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்திருந்த எச்சரிக்கை பற்றியுமே வினாக்களை எழுப்பியிருந்தார்கள்.

போர்க்கால மனித உரிமை மீறல்கள் பற்றி, சுதந்திரமான, நம்பிக்கையான விசாரணகைளை அரசு மேற்கொள்ளாவிட்டால், ஐநா மனித பேரவையுடன் இணைந்து இலங்கைக்கு எதிராக பிரிட்டன் நடவடிக்கை எடுக்கும் என்ற பிரிட்டிஷ் பிரதமரின் எச்சரிக்கைபற்றி என்ன சொல்கிறீர்கள் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் உள்ளுர் செய்தியாளர் ஒருவரே முதலில் கேள்வி எழுப்பியிருந்தமையே, இதில் விசேட அம்சமாக சர்வதேச செய்தியாளர்கள் மத்தியில் பேசப்பட்டிருந்தது. அந்த அளவிற்கு இலங்கை மீதான போர்க்குற்றச் சாட்டுக்கள் பற்றிய விடயம் முதன்மையும், முனைப்பும் பெற்றிருந்தது.
பொதுநலவாய மாநாடு முடிவுற்ற பின்பும் கூட, இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயமே சர்வதேச மட்டத்தில் முக்கியம் பெற்றிருந்தது. இதனால் அரசாங்கம், அது தொடர்பான விடயங்களில் அதிக கவனமும் அக்கறையும் செலுத்தியிருந்ததனால், வடமாகாண சபையை முதன்மைப்படுத்தி, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் போக்கிலான அதிகாரப்பரவலாக்கம் பற்றிய வி;டயம், பின்னால் தள்ளப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டத்தின் தலைமை விடயத்திலும்கூட, குறிப்பாக, இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளில் அதி முக்கியத்துவம் பெற்றிருக்கின்ற ஜனாதிபதியின் மகிந்த சிந்தனைச் செயற்பாடுகளை அரசாங்கம் முதன்மைப்படுத்தியிருந்தது. இந்தச் சிந்தனையின் மூலம் வடமாகாண மக்கள் எதிர்நோக்கியிருக்கின்ற அவசரமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியாது என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். இதனை வடமாகாண முதலமைச்சர் வெளிப்படுத்தியிருந்தார்.

மகிந்த சிந்தனை என்பது சிங்கள மக்களுக்குப் பொருத்தமானதாக இருக்கலாம். ஆனால் வடபகுதியில் உள்ள நிலைமைகளில் அது பெருத்தமற்றது என்றும், அதனை வடமாகாண சபையின் செயற்பாடுகளில் பொருத்திப் பார்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபை பொறுப்பேற்றதன் பின்னர் மாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றம் மாவட்ட ரீதியிலான அபிவிருத்திச் செயற்பாடுகள் அனைத்தும், மாகாண சபையின் பொறுப்பிலேயே விடப்பட வேண்டும் என்ற அதிகார உரிமைக்காக முதலமைச்சர் விக்னேஸ்வரன் குரல் கொடுத்திருந்தார்.
நியாயமான கோரிக்கையாக இருந்த போதிலும், இதனை ஏற்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. இதன் மூலம், பொதுநலவாய மாநாட்டின் பின்னரான காலப்பகுதியிலும்கூட, தமிழ்த்தேசிய கூட்டமைப்புடனான உறவில் அல்லது தொடர்புகளில் அரசாங்கம் விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்வதற்கு முன்வரவில்லை. அதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரியவில்லை. ஏனென்றால், போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சர்வதேச நிலைப்பாட்டை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலேயே அரசாங்கம் ஆர்வம் காட்டி வருகின்றது. காணாமல் போனவர்கள் பற்றிய பதிவுகளை மேற்கொள்வது, போர்க்காலப் பாதிப்புக்கள் பற்றிய கணக்கெடுப்பை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளில் அது தீவிரமாக இறங்கியிருக்கின்றது.

எனவே, வடமாகாண சபை பொறுப்பேற்றதன் பின்னர், தமிழ்;த்தேசிய கூட்டமைப்பும், அரசாங்கமும் இணைந்து செயற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாத ஒரு போக்கே இப்போது காணப்படுகின்றது. பொதுநலவாய மாநாட்டுக்கு முன்னரும் கூட்டமைப்புடன் இணைந்து செல்லும் போக்கை அராசங்கத்திடம் காணப்படவி;ல்லை என்றாலும், வடமாகாண சபை செயற்படத் தொடங்கியதையடுத்து, அவ்வாறு செயற்படுவதற்கு அரசாங்கம் தூண்டப்படலாம் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது, ஆனால், பொதுநலவாய மாநாட்டின் போக்கும், அரசாங்கத்திற்கு அதனால் ஏற்பட்டுள்ள சர்வதேச நெருக்கடிகளும் அந்த எதிர்பார்ப்பை மேலும் பின்னோக்கித் தள்ளியிருப்பதுடன், இனப்பிரச்சினைக்கு அரசியில் தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கத்திற்கும், தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான தூரத்தை அதிகப்படுத்தியிருப்பதாகவே தென்னிலங்கை அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
இந்தியாவின் நிலைப்பாடு

இலங்க அரசாங்கம் போர்க்கால உரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப்பு கூறும் வகையில் ஏற்றுக்கொள்ளத்தக்க, சுதந்திரமான விசாரணைகளை நடத்த வேண்டும் என்ற சர்வதேச அழுத்தத்தில் இந்தியாவும் இணைந்து குரல் கொடுத்திருக்கின்றது. இறுதி யுத்த நேரத்தில் இலங்கையில் இனப்படுகொலைகள் நடைபெற்றதாகக் குறிப்பிட்டிருந்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் வகையில் கொண்டு வரப்பட்ட 13 ஆவது அரசியல் திருத்தத்தை நடைமுமறப்படுத்துவதற்கு இந்தியா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் என்று கூறியிருந்தார்.

பிரிட்டன் உட்பட சர்வதேச நாடுகள் போர்க்குற்றச் செயற்பாடுகள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டும் என்று மாத்திரம் வலியுறுத்தி வருகின்ற நேரத்தில் இந்தியா இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்றும் குரல் கொடுத்திருக்கின்றது. இது வித்தியாசமானது. வரவேற்கத்தக்கது என்று அரசியல் அவதானிகள் குறிப்பிடுகி;ன்றார்கள். பதின்மூன்றாவது அரசியல் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் இந்தியா தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்துள்ளது. அந்த வகையிலேயே வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்றும், 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்வதற்காக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை இந்தியா தலையிட்டு தடுத்து நிறுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

போர்க்காலச் செயற்பாடுகளுக்கு குறிப்பாக மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூறுகின்ற அதேநேரத்தில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதும் சமாந்தரமாக நடைபெற வேண்டும். இது மிகவும் முக்கியமாகும். போர்க்காலச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பு கூறுவதுடன் பிரச்சினைகள் முடிந்துவிடப் போவதில்லை. நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்ற எட்டுவதன் மூலம் மட்டுமே, நிரந்தர அமைதியும் சமாதானமும் இலங்கையில் நிலவுவுதற்கு வழியேற்படும்.
வடமாகாண சபையின் பொறுப்புக்களையும், நிர்வாகச் செய்பாடுகளையும் முன்னெடுப்பதில் வடமாகாண முதல்வரும், சபையினரும் பல்வேறு இடர்ப்பாடுகளை எதிர்நோக்கியிருக்கின்றார்கள். அவர்கள் முன்னேற்றப்பாதையில் எடுத்து வைக்கின்ற ஒவ்வோர் அடியும் முள்ளின் மீதும் கரடு முரடான கல்லின் மீதும் வைக்கின்ற அடியாகவே இருக்கின்றது. இந்த முட்டுக்கட்டைகள் முதலில் நீக்கப்பட வேண்டும். இல்லையேல் யுத்த மோதல்கள் மோசமான இடம்பெற்ற வடபகுதியில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக நடத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தலும், வாக்களி;ப்பின் மூலம் வடமாகாண சபையைத் தெரிளூவு செய்வதில் மக்கள் காட்டிய நம்பிக்கையும் விழலுக்கு இறைத்த நீராகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பொறுப்பு

போர்க்காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள், இந்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பதுபோன்று, அங்கு இடம்பெற்ற இனப்படுகொலைகள் என்பவற்றிற்கு நியாயம் தேடுகின்ற அதேநேரம், முப்பது வருடகாலமாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிம்மதியான ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக ஓர் அரசியல் தீர்வைக் காண்பதற்குரிய செயற்பாடுகளையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முனைப்புடன் முன்னெடுக்க வேண்டும். இதற்கு பயங்கரவாதியாகச் சித்தரிக்கப்பட்டு, பின்னர் விடுதலைக்காகப் போராடிய மாமனிதராக உலகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நெல்சன் மண்டேலாவின் அரசியல் செயற்பாடுகளை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்.
அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் அவர் கட்டியெழுப்பியிருந்த கட்சியின் கட்டமைப்பும், அவர் முன்னெடுத்திருந்த அரசியல் நகர்வுகள் என்பன அவரது அரசியல் வெற்றிக்குப் பேருதவியாக அமைந்திருந்தன. அவரை இன்று உலகமே வியந்து போற்றுகின்றது. அவரது மறைவுக்காக உலகமே வருத்தம் தெரிவித்திருக்கின்றது. அஞ்சலி செலுத்தி வருகின்றது. இந்த வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் அவருக்கு செலுத்தக் கூடிய சிறந்த அஞ்சலி என்பது அவருடைய அடியொட்டி, அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதே சிறந்த அஞ்சலியாக இருக்க முடியும்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள அரசியல் கட்சிகளை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வந்து கூட்டமைப்பை வலுவான ஓர் அரசியல் சக்தியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை கூட்டமைப்பின் தலைவர்கள் முன்னெடுக்க வேண்டும். அதற்கென சிறப்பான கட்டமைப்பை உருவாக்கி அனைவரும் ஒரு குரலில் பேசத் தக்க வகையில் வழியேற்படுத்த வேண்டும். தமிழரசுக் கட்சியென்றும், ஆயுதமேந்திய குழுக்களாக இருந்து வந்தவர்களின் கட்சிகள் என்றும் பேதங்கள் பேசுவதை நிறுத்தி, அனைவரும் தமிழ் மக்களின் உரிமைக்காக, அவர்களின் அரசியல் விடுதலைக்காகப் பாடுபட புறப்பட்டவர்கள் என்ற அடிப்படை உண்மையைத் தெளிந்து, நன்கு உணர்ந்து அதற்காகத் தொடர்ந்து செயற்பட வேண்டும்.

அதற்குரிய அரசியல் முன்னெடுப்பாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை இறுக்கமான ஒரு கட்டமைப்புக்குள் புகுத்திச் செயற்பட வேண்டும். கூட்டமைப்பின் முக்கிய அரசியல் பொறுப்புக்களில் இளைஞர்களையும் யுவதிகளையும் உள்ளீர்க்க வேண்டும். பழம்பெருமைகளைப் பேசுவதன் மூலம், அல்லது பெருமைக்குரியவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்வதன் மூலம், இளம் சமுகத்தினரை நேர்த்தியான ஓர் அரசியல் பாதைக்குள் கொண்டு வர முடியாது. இன்றைய அசியல், விஞ்ஞான தொழில்நுட்ப, பொதுவான நாகரிகப் போக்குகளின் அடிப்படையில், இளைஞர்களின் சிந்தனைப் போக்கில் சென்று அவர்களை அரசியலில் அரவணைக்க வேண்டும்.

பேச்சுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாத பழைய அரசியல் போக்குகள் இன்றைய காலத்திற்குப் பொருந்தமாட்டாது. ஏனெனில் தமிழ் மக்கள் முப்பது வருடகால யுத்தச் சூழலில் சிக்கியிருந்து போதிய அரசியல் அனுபவங்களைப் பெற்றிருக்கின்றார்கள். இதன் காரணமாகத்தான் பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியிலும், அந்தக் கெடுபிடிகளில் இருந்து தம்மை விடுவிப்பதற்கான உறுதியான தலைவர்களைக் காணாத போதிலும், அவர்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற அமைப்புக்குள் இறுக்கமாகக் கட்டுண்டிருக்கின்றார்கள்.
எனவே மக்களை அணிதிரட்ட வேண்டிய அவசியம் கூட்டமைப்பினருக்குக் கிடையாது. அணிதிரண்டுள்ள மக்களுக்கு கட்டுக்கோப்புடன் கூடிய ஓர் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கினாலே போதும். அதன் ஊடாக பிரச்சினைளை எதிர்கொள்ளவும், அதற்காகச் செயற்படவும் போராடவும் மக்கள் தயாராக இருக்கின்றார்கள். எனவே, அணிதிரண்டுள்ள மக்களுக்கு கூட்டமைப்பின் தலைவர்கள் ஓரணியில் இணைந்து உறுதியான ஓர் அரசியல் தலைமையை வழங்க முன்வரவேண்டும். இதன் ஊடாகத்தான் போர்க்கால பாதிப்புகளுக்குரிய நியாயத்தைப் பெறவும், அதிகாரப் பரவலாக்கலின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும் இயலுமாக இருக்கும்.

-செல்வரட்னம் சிறிதரன்-

0 கருத்துக்கள் :