ஜெனீவாவில் அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள பிரேரணையும் இந்தியத் தேர்தலும்

22.12.13

மூன்றாவது முறையாகவும் ஜெனீவா மனித உரிமைச் சபையில் அமெரிக்கா இலங்கைக்கு எதிரான பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளது. ஆனால் அந்த பிரேரணை இலங்கை அரசாங்கத்தை கட்டுப்பாட்டில் கொண்டுவருமா என்பதுதான் இங்கு கேள்வி. இந்தியா சீனா போன்ற நாடுகளின் அரசியல் போட்டிகள் அதிகரித்துச் செல்லவுள்ள 2014ஆம் ஆண்டில் அமெரிக்கா எடுக்கும் முயற்சி எந்தளவுக்கு தமிழர்களுக்கு உண்மையாக இருக்கும்?

இந்திய அரசாங்கம் என்பதை விட இந்திய கொள்கை வகுப்பாளர்களின் இலங்கை தொடர்பான பார்வையைத்தான் இந்திய அரசியல்வாதிகள் செயற்படுத்த வேண்டும். இது அமெரிக்காவுக்கு நன்றாக தெரியும். ஆகவே இந்திய கொள்கை வகுப்பாளர்களின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டை மீறி அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள பிரேரணை ஈழத் தமிழர்களுக்கு சாதகமான ஒரு நிலையை தோற்றுவிக்குமா?

இந்திய அரசியல் கட்சிகள்:


மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைச் சபை கூடவுள்ளது. ஏப்ரலில் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வாக்குகளை பெறும் நோக்கில் காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதா கட்சியும் ஏட்டிக்கு போட்டியாக ஈழத் தமிழர் விடயத்தில் ஏதோ அக்கறை உள்ளவர்கள் போன்று பிரசாரங்களில் ஈடுபடுவார்கள். சிலவேளை அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள பிரேரணையை கடுமையாக்கி இலங்கைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு முயற்சியிலும் இந்த இரு கட்சிகளும் ஈடுபடலாம்.

‘தமிழ் ஈழம் வெகு தொலைவில் இல்லை’ என அமைச்சர் யத்வன் சிங்ஹா கடந்த வாரம் கூறிய கருத்துக்கள் அதனை வெளிப்படுத்துகின்றன. ஆனால் இந்திய அரசியல்வாதிகளுக்கும் இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளை அமெரிக்கா நன்கு அறிந்துள்ளது. கடந்த இரண்டு முறையும் அமெரிக்கா சமர்ப்பித்த பிரேரணையில் இருந்த கடும் வாசகங்களை இந்தியா அகற்றியிருந்தது.

இம்முறை தேர்தல் நடைபெறவுள்ளதால் அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள பிரேரiணையில் கூறப்பட்டுள்ள கடும் வாசகங்கள் தொடர்பாக இந்தியா மௌனம் காக்கக்கூடி நிலையும் எற்படலாம். ஆனாலும் இந்திய கொள்கை வகுப்பாளர்கள அதற்கு இடமாளிப்பார்;களா என்பது கேள்விதான்? எவ்வாறாயினும் கடந்த முறையை விட இம்முறை இந்தியா மௌனம் காக்கக்கூடிய நிலைதான் உண்டு.
தேர்தல் அதற்கு ஒரு காரணம் என்று கூறினாலும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கும் சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறைந்த பட்சமேனும் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் கீழான மாகாண சபைகளை உரிய முறையில் செயற்படுத்த இலங்கை அரசாங்கம் விதிக்கும் தடை இந்தியாவுக்கு எரிச்சலாக இருக்கின்றது. அந்த அடிப்படையில் இம்முறை அமெரிக்கா சமர்ப்பிக்கும் பிரேரணை தொடர்பாக இந்தியா மௌனமாக இருக்கும் என்பதுடன் அதற்கு ஆதரவாகவும் செயற்படக்கூடிய நிலைமை உள்ளது.

கூட்டமைப்பு செய்ய வேண்டியது?

இந்த இடத்தில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் கடமை என்ன?
அவர்கள் ஜெனீவா கூட்டத் தொடரில் கலந்துகொள்ள முடியாது. ஆனால் அங்கு சென்று நடைபெறவுள்ள சிறிய கூட்டங்களில் கலந்துகொள்ளலாம். தூதுவர்களை சந்திக்கலாம். கொழும்பில் உள்ள தூதுவர்களை கூட சந்தித்து தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கலாம். 2009ஆம் ஆண்டு மே மாத்தின் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் புதிதாக அமைக்கப்பட்ட இராணுவ முகாம்கள், விடுதலை செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பற்றிய தகவல்களை கையளிக்கலாம்.

விக்னேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து நல்லிணக்கத்தை வெளிக்காட்டிய பின்னரும் கூட வடமாகாண சபையின் சுதந்திரமான செயற்பாட்டுக்கு இடமளிக்கப்படவில்லை என்ற விடயத்தையும் அரசியலமைப்பில் உள்ள அதிகாரங்களை கூட ஏனைய சமூகங்கள் அனுபவிக்க முடியாது உள்ளது என்பதையும் எடுத்துக் கூறலாம்.


கிளிநொச்சி இரணைமடுக் குளத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியது பிரதான கடமை. ஆனால் அந்த நீரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்வது தொடர்பான பேச்சை எடுத்து அந்த விடயத்தில் நேரத்தை செலவு செய்து 60 ஆண்டுகால அரசியல் போராட்டத்தின் முக்கியத்துவத்தை உலகம் மறந்துவிடச் செய்யாதீர்கள். அது பிரதேசவாதத்தை கிளப்பும் அரசாங்கத்தின் பிரித்தாளும் தந்திரம். 2014ஆம் ஆண்டில் உலக அரசியல் ஓட்டம் எப்படி அமையப் போகின்றது? இந்திய தேர்தல் முடிவுகள் கொண்டுவரப் போகும் மாற்றம் என்ன என்ற விடயங்களில் கூடுதல் கவனம் தேவை. வேண்டுமானால் அரசியல் சாராத உள்ளூர் விடயங்களை கையாள ஒரு குழுவும் 60 ஆண்டுகால அரசியல் போராட்டங்களை சர்வதேச மட்டத்தில் பேசி எடுத்துரைக்க மற்றுமொரு குழுவையும் கூட்டமைப்பு நியமிக்கலாம்.

நேர்மையான தீர்வுக்கான யோசனைகள்:

நேர்மையான திர்வுக்கான நேரடி அழுத்தங்களை உலக நாடுகளினால் இலங்கை அரசுக்கு கொடுக்கமுடியாமல் உள்ளது. வெறுமனே கண்டன அறிக்கைகள் எச்சரிக்கைகள் மாத்திரம் அரசாங்கத்தை திருத்துவதற்கு அல்லது வழிக்கு கொண்டு வருவதற்கு போதுமானவையல்ல. 60ஆண்டுகாலம் தமிழர்கள் கண்ட துன்பங்களுக்கு இலங்கை அரசாங்கத்தை நோக்கிய உலக நாடுகளின் கண்டன அறிக்கைகள் ஒரு ஆறுதல் மாத்திரமே. அது அரசியல் தீர்வு அல்ல. இது பற்றிய விடயங்களை கூட்டமைப்பு எடுத்துரைக்க வேண்டும். தற்போதைய அரசியல் யாப்பின் கீழ் தீர்வு காண முடியாது என்பதை இடித்துரைக்க வேண்டும்.

தமிழ் அரசியல் தலைமைகளினால் எதுவும் செய்யமுடியாது என்ற நிலை தற்போது வந்துவிட்டது. அஹிம்சைப் போராட்டம், ஆயுதப்போராட்டம் என்று தொடராக போராட்டங்களை சந்தித்த மக்கள் மீண்டும் ஒரு போராட்டத்தை காண விரும்பவில்லை, ஆனால் அவர்களிடம் நம்பிக்கை இருக்கின்றது. நிரந்தர அரசியல் தீர்வுக்கான சர்வதேச ஆதரவை அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 ஜெனீவா மனித உரிமைச் சபை கூடவுள்ள நிலையில் இலங்கை மீதான கண்ட தீர்மானங்களை விட ஆரோக்கியமான அரசியல் தீர்வுக்கான கடும் நிபந்தணைகள் விதிக்கப்பட வேண்டும். அதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை கூட்டமைப்பு செய்யலாம். அதனடிப்படையில் ஜெனீவா மனித உரிமைச் சபையின் உறுப்பு நாடுகள் செயற்பட வாய்ப்புகள் உண்டு.

உலக நாடுகளின் கவனம்?


மனித உரிமைகளுக்கும் ஜனநாயகத்துக்கும் ஒத்துப்போகாத அதனை மதிக்காத நாடுகளுடன் இலங்கை அரசாங்கம் உறவுகளை வைத்துக் கொண்டு ஜரோப்பிய நாடுகளையும் ஏமாற்றி தான் நினைத்தை செய்து முடிக்கின்ற அரசியல் பண்புகளை மாற்றுவதற்கான கடுமையான யோசனைகளை அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் பரிந்துரைக்கலாம். இலங்கை ஒரு சிறிய நாடு அந்த நாடு தான் விரும்பிய நாடுகளுடன் உறவுகளை வைத்து தனக்கு தேவையானவற்றை பெறட்டும் என்ற நல்ல நோக்கில் உலக நாடுகள் விட்டுக்கொடுப்பதை அல்லது பொறுத்துக் கொண்டிருப்பதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஏனைய சமூகங்களின் அரசியல் இருப்புக்கு உலை வைக்கின்ற வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுப்பதை நிறுத்த, குறைந்த பட்சமேனும் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்.

பிராந்திய அரசியல் நலன் மற்றும் லாபங்களை மாத்திரம் கருத்தில் கொண்டு உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, கனடா, பிரித்தானியா அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் இலங்கை விடயத்தில் தொடர்ந்து செயற்படுமானால் இனப் பிரச்சினைக்கு உலகம் அழியும் வரை தீர்வு கிட்டாது. இந்தியா அயல்நாடு இந்தியா இலங்கைத்தமிழர் பிரச்சினையை பார்த்துக் கொள்ளும் என்று கருதியும் உலக நாடுகள் செயற்படுமானால் அது இன்னும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படும் அல்லது தள்ளப்பட்டு விட்டது என்றும் கூறலாம்.

60ஆண்டுகள் காலம் கடந்து சென்றமைக்கு இந்திய அரசின் லாபங்கள் பிரதான காரணம். ஆகவே இந்த நிலைமைகளை அறிந்து கொண்டு நேர்மையான முறையில் உலக நாடுகள் சிந்திக்க வேண்டும் அதற்கு ஜெனீவா கூட்டத்தொடர் வழிசமைக்கட்டும். அதற்கு தமிழத்தேசிய கூட்டமைப்பு மாத்திரமல்ல ஏனைய தமிழ் கட்சிகள், பொது நிலையினரும் பங்களிப்பு செய்தாக வேண்டும்.

0 கருத்துக்கள் :