என்னதான் செய்யப் போகிறோம்?

29.12.13

மட்டக்களப்பில் பாம்பு தீண்டி 12 வயதுச் சிறுவன் மரணம், திருகோணமலையில் மர்மப் பொருள் வெடித்து சிறுவன் பலி, யாழ். அராலியில் 11 நாள் குழந்தையை அந்தரிக்கவிட்டு இளம் தாய் சுருக்கிட்டு தற்கொலை, மன்னாரில் மலேரியா தாக்கத்தினால் இளம் தாய் பலி!
இது இன்று கண்ணில்பட்ட மரணங்கள் இப்பதானே விடிஞ்சிருக்கு.. ஒரு நாள் 10 பேர் என்ற கணக்கிற்கு ஏற்றவாறு இரவுக்குள் மிச்ச மரணங்களும் வந்து சேர்ந்துவிடும். அந்த கவலை வேண்டாம் அவை வந்து சேர்ந்துவிடும். இதை விட கொள்ளை, நிலப்பறிப்பு, கைது, கடத்தல்,பண்பாட்டு கலாசார சிதைப்புக்களை பதிவிடவில்லை. இங்கு பதிய இடம் காணாது.
தாயகத்தில் இப்படியாக தினமும் குறைந்தது 10 பேரை இழந்து கொண்டிருக்கிறோம்.

இது தனிப்பட்ட 10 பேரின் பிரச்சினையல்ல. அவர்கள் சார்ந்த 10 குடும்பத்தின் முடக்கம். அவர்கள் மீள பல வருடங்கள் ஆகும். தினமும் 10 குடும்பங்கள் முடங்கினால் அவர்கள் சார்ந்திருக்கிற ஒரு இனத்திற்கு என்ன நடக்கும்? இதுதான் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு (Structural Genocide).
மேலே உள்ள மரணங்கள் அப்பட்டமான இனஅழிப்பின் விளைவுகள். இதைத்தான் குறிப்பாக "கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு" என்கிறோம். எழுதி எழுதி சலித்துபோனாலும் இவற்றை உணர்ந்து ஒரு கட்டத்தில் ஒரு புரட்சி வெடிக்கும் என்ற நம்பிக்கையில் திரும்ப திரும்ப எழுதிக்கொண்டிருக்கிறோம்.
முதலில் பாம்புக்கடி மற்றும் மலேரியா மரணங்களை பார்ப்போம்.
இன அழிப்பு என்பது நுட்பமாக நடக்கிற ஒன்று.. அதை வெளியாக உணர முடியாது. குறிப்பாக வன்னியை எடுத்துக்கொள்வோம். வன்னி மக்களுக்கு மழை வெள்ளம், குள உடைப்பு, பாம்புக்கடி, மலேரியா எல்லாம் புதிதல்ல..அது அவர்கள் வாழ்வின் தவிர்க்க முடியாத கூறு. முன்பைவிட தற்போது ஏன் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதில்தான் இன அழிப்பின் நுண்மையான பின்னணி இருக்கிறது.

மே 18 ற்கு முன்பு தமது சொந்த நிலத்தில் பருவ நிலைகளுக்கு ஏற்றமாதிரி தமது குடியிருப்புக்களை மாற்றிக் கொள்வார்கள். விச ஜந்துக்களின் நடமாட்டத்திற்கு எற்றமாதிரி சில முன்னேற்பாடுகளை செய்து கொள்வார்கள். ஆனால் தற்போது அவர்களை இடம்மாறி போட்டு நிலங்களையும் அபகரித்து அவர்கள் வாழ்வு நெறி அனைத்து வழிகளிலும் துண்டாடப்பட்டுள்ளது.
தங்களுக்கு சம்பந்தமில்லாத நிலப்பரப்பில் தறப்பாள் கூடாரங்களில் இருந்து கொண்டு மழை வெள்ளத்தையும் விச ஜந்துக்களையும் எப்படி சமாளிப்பது? மலேரியா நெருப்புக்காய்ச்சல் போன்ற நோய்களுக்கு எந்த வழியில் தடுப்பை ஏற்படுத்துவது? அதுதான் முன்பைவிட இதன் தாக்கங்களால் மரணத்தை சந்திக்க நேரிடுகிறது.
இதுதான் இன அழிப்பு உத்தி. ஏற்கனவே போரின் வடுக்களினால் உளவியல் சிக்கல்களும், பொருளாதார நெருக்கடிகளும் சூழந்துள்ள வேளையில் சுயபாதுகாப்பு என்பது இயல்பாகவே அவர்களை விட்டு போய்விட்டது. தினமும் நடைபெறும் தற்கொலைகள் எல்லாம் இந்த பின்னணியிலேயே நடக்கின்றன..

தாயகத்தில் நடக்கும் ஒவவொரு மரணத்தின் பின்னும் இனப்படுகொலை அரசின் அருப கரங்கள் மறைந்துள்ளன. அது காய்ச்சல் வந்து செத்தாலும் சரி.. பாம்பு கடிச்சாலும் சரி.

அடுத்து இளம் தாய்மாரின் தற்கொலைகளை பார்ப்போம்.

ஒரு இனத்தின் அடிப்படையும் ஆதாரமும் பெண்கள்தான். அந்தப் பெண்களை குறிவைப்பதன் ஆழமான அரசியல் பின்புலம் இன அழிப்பு சிந்தனைகளிலிருந்தே தோற்றம் பெறுகிறது. பெரும்பாலும் இந்த கட்டமைக்கபட்பட்ட இன அழிப்புக்குள் நாம் பெரும்பாலும் பெண்களையே இழக்க நேரிடுகிறது.

பல்லாயிரம் பெண்களின் கணவர்மார் காணாமல்போன பட்டியலில்தான் இருக்கிறார்கள். இனப்படுகொலை அரசு அவர்களது இருப்பு குறித்து எந்த பதிலும் தர மறுக்கிறது.
கொல்லப்பட்டிருந்தால் அதைத்தன்னும் உறுதிப்படுத்து என்றே அவர்கள் கேட்கிறார்கள்.(உண்மையில் ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் கொல்லப்பட்டுவிட்டதே உண்மை) ஆனால் திட்டமிட்ட இன அழிப்பு நோக்குடன் அந்த பட்டியலை வெளியிடாமல் தொடர்ந்து மறுத்து வருகிறது சிங்களம்.

இதனால் அந்த பெண்ககளினதும் அவர்கள் குழந்தைகளினதும் எதிர்காலம் குறித்து எதையும் சொல்லமுடியவில்லை. அவர்களில் பலர் தமது நிலையை உணர்ந்து மறுமணம் செய்ய தயாராகவே இருக்கிறார்கள். ஆனால் இறந்து விட்டார்களா என்று உறுதியாக தெரியாமல் எப்படி மறுமணம் செய்ய முடியும்?
இதனால் மே- 18 ற்கு பிறகான பல பொருளாதார வாழ்வியற் சிக்கல்களுடன் பல உளவியற் சிக்கல்களும் பாலியல் முரண்பாடுகளுமாக எமது இனத்து பெண்களின் வாழ்வு சூறையாடப்படுகிறது.

இது பல சமூக சீரழிவுகளுக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கும் வழிவகுக்கிறது. இதைத்தான் இன அழிப்பு அரசு எதிர்பார்க்கிறது. ஏனெனில் இது இன அழிப்பின் நுண்மையான பின்னணிகளை கொண்டது.

இனஅழிப்பில் கணவனை இழந்த விதவைகளாக, காணாமல்போனதால்  அரை விதவைகள் (Half Widows) ஆனவர்களாக, போரில் ஊனமுற்ற குடும்பத்தலைவர்களால் குடும்பத்தை தாங்க வேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ளவர்களாக என்று எமது பெண்களின் நிலை மிகவும் சிக்கலானது. இதிலிருந்து மீள விடாமல் இனஅழிப்பு அரசு நுட்பமாக வலையைபின்னியிருக்கும் சூழலில் இறுதியில் அவர்கள் மனநோயாளிகளாவோ அல்லது தம்மை அழித்துக்கொள்ளவோ நேரிடுகிறது.
இதுதான் இத்தகைய மரணங்களுக்கான காரணம். இன அழிப்பிற்கும் இந்த சாவுகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று நாமே இதை நம்புவது துரதிஸ்டவசமானது.

அப்படி நம்பும்படிதானே வெளியிலிருந்து மட்டுமல்ல எம்க்குள்ளிருந்தே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம்.  முதலில் இந்த அனாமதேய மரணங்களையும் இன அழிப்பையும் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
என்னதான் செய்யப்போகிறோம்?

பரணி கிருஸ்ணரஜனி

0 கருத்துக்கள் :