யாழ் வலிகாமம் வடக்கை மீட்போமா?

17.12.13

பள்ளிக்கூடங்கள் எந்தவொரு சமூகத்திலும் மிகவும் உன்னத இடங்களாக கருதப்படுபவை. அவைதான் அந்த சமூகத்தை வளர்ப்பவை. அப்படியிருக்க பள்ளிக் கூடங்களையே அழித்து நிலம் பிடிக்கும் நிகழ்வுகள் இலங்கைத்தீவில் நடந்தேறுகின்றன.

யாழ்ப்பாணம் வலி வடக்கில் உள்ள காங்சேன்துறை நடேஸ்வரா கல்லூரியின் பெரும் பகுதியை இராணுவத்தினர் அழித்துள்ளனர். பழம் பெரும் பாடசாலையான நடேஸ்வராக் கல்லூரி வலி வடக்கின் முக்கிய வளங்களில் ஒன்று. பள்ளிக்கூடத்தையே தனது இராணுவத்தின் மூலம் அழிக்கும் அரசு இதைத்தான் தனது நல்லிணக்க வெளிப்பாடாக காட்டுகிறது. இலங்கை இராணுவத்தினரின், இலங்கை அரசின் செயற்பாடுகளுக்கும் அணுகுமுறைக்கும் இது மிகப் பெரிய சாட்சி.

மாவிட்டபுரம் கந்தசாமி கோயில்தான் இப்பொழுது வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயம் தொடங்கும் இடம். வலிவடக்கின் சோதனைச்சாவடி. இலங்கையில் இப்பொழுது சோதனைச்சாவடிகளும் முகாங்களும் இல்லை என்று அரசாங்கம் சொன்னது. மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் மிகவும் பழமையான ஆலயம். இப்பொழுது கைவிடப்பட்ட ஒரு ஆலயத்தைப் போல காட்சி அளிக்கிறது.

வலி வடக்கில் ஈழத் தமிழர்களின் தொன்மங்களில் கீரிமலைக் நகுலேச்சரம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் போன்றவை முக்கியமானவை. வாழ்வோடு பின்னிப் பிணைந்த இந்த வாழிடங்கள் இன்று இராணுவத்தின் தேவைக்காக அபகரிக்கப்பட்டிருப்பது மிகப் பெரும் மனித உரிமை மீறல்.


போர்த்துக்கேசர் காலத்தில் மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயம் அழிக்கப்பட்டது. பின்னர் ஒல்லாந்தர் காலத்தில் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டது. மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் போர்த்துக்கேசர் காலத்தில் அழிவுக் காலத்தை எதிர்கொண்டதைப் போல வலி வடக்கும் சிங்கள அரசின் ஆட்சிக்காலத்தில் ஒரு அழிவுக்காலத்தை எதிர்கொள்ள நேரிட்டிருப்பது ஈழத் தமிழர் வரலாற்றின் இருண்டகாலத்தை உணர்த்துகிறது.

ஏனெனில் இது வலி வடக்கின் பிரச்சினை மாத்திரமல்ல. எமது நிலம் எப்பொழுதும் எப்படியும் ஆக்கிரமிக்கப்படலாம் என்பதையும் எமது வீடுகள் எப்பொழுதும் அழிக்கப்படலாம் என்பதையும் எமது பள்ளிக்கூடங்கள் அழிக்கப்படலாம் என்பதையும் எமது நிலத்தில் எதுவும் அழிக்கப்படலாம் என்பதையும் வலி வடக்கு உலகிற்குச் சொல்கிறது.

ஈழத்தில் இலங்கை அரச படைகள் எண்ணற்ற அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். அவர்கள் அழித்த வீடுகள், பள்ளிக்கூடங்கள், நகரங்கள் கிராமங்கள் போன்றவற்றை எண்ணித் தீர்க்க முடியாது. இதையெல்லாம் சமாதானத்திற்கான யுத்தம் எனவும் மனிதாபிமான யுத்தம் எனவும் செய்து கொண்டிருந்தவர்கள் தங்கள் அழிப்பு நடவடிக்கைகளை இன்னமும் நிறுத்தவில்லை. ஈழத் தமிழர்களின் தேசத்தை அழிப்பதற்காக இலங்கை அரசாங்கம் எப்படியான காரணத்தை வேண்டுமானாலும் உருவாக்கிக் கொள்ளும்.

ஒரு உயிரினத்தின் இருப்பிடத்தை அழிப்பதும் மறுப்பதும் மிகப் பெரிய உரிமை மீறல். அது ஒரு இரக்கமற்ற கொடிய செயற்பாடும்கூட. நாம் ஒரு வீட்டை கட்டி முடிக்க எவ்வளவு கஷ்டப்படுகின்றோம்? ஒவ்வொரு வீடுகளும் பெரும் போராட்டங்களின் மத்தியில் கட்டி எழுப்படுகின்றன. வீடு என்பது வாழ்தலின் அடையாளம். வீடு வாழும் கனவு நிரம்பியது. வீடு பற்றிய கனவுகள் இல்லாத மனிதர்கள் இல்லை. முப்பது ஆண்டுகால யுத்தத்தினால் ஈழத் தமிழ் மக்களின் வாழ்வில் வீடு என்பது நிரந்தரமற்றது. படையெடுப்பாளர்களால் அழிக்கப்படுவது என்பது தொடர் கதையாகிவிட்டது. நமது போராட்டம் என்பது வாழும் வீட்டிற்கானது.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் உள்ள தமிழ் மக்களின் வீடுகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அண்மையில் அந்தப் பகுதிக்குச் சென்றிருந்தேன். புல்டோசர்கள் மக்கள் காலம் காலமாக வாழ்ந்த பூர்வீக வீடுகளை அழித்துக் கொண்டிருக்கின்றன. காங்கேசன்துறைப் பகுதியில் உள்ள வீடுகள் எல்லாம் உடைத்து குவிக்கப்பட்டிருக்கின்றன. எவ்வளவு கஷ்டப்பட்டு கட்டப்பட்ட வீடுகள். எத்தனை மனிதர்களின் இரத்தமும் கண்ணீரும் வியர்வையும் கலந்து கட்டப்பட்ட வீடுகள்? இந்த வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்று ஏங்கியே இறந்துபோனவர்கள் எத்தனைபேர்? இந்த வீடுகளுக்காக இன்னும் எத்தனை பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்?

2009ஆம் ஆண்டுடன் யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்களைக் கடந்த பின்னரும் இலங்கை அரச படைகளின் அழிப்பு நடவடிக்கைகள் இன்னமும் முடிவுக்கு கொண்டு வரவில்லை. யுத்தம் நடந்த சூழலிலேயே வீடுகள், நினைவிடங்கள், தொன்ம அடையாளங்கள் பலவும் அழிக்கப்பட்டன. பௌத்த சிங்கள இராணுவ அடையாளங்கள் கட்டப்படுகின்றன. வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள சிங்கள இராணுவத்தினர் தினந்தோறும் இரண்டுவிதமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். ஒன்று சிங்கள பௌத்த இராணுவச் சின்னங்களை நிறுவுவது. மற்றையது ஈழத் தமிழர்களின் தொன்மங்களை அழிப்பது.

தமிழர் தாயகத்தை அழித்து சிங்கள பூமியாக்கும் நோக்கமே இந்த திட்டத்திற்குப் பின்னால் உள்ளது. பண்டார வன்னியனின் சிலையை அழிப்பதும் திலீபனின் நினைவுத்தூபியை அழிப்பதும் வேலு நாச்சரியாரின் சிலையை சேதப்படுத்துவதும் கோயில் திருவுருவங்களை அழிப்பதும் இந்த ஒரே நோக்கத்திற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன. இராணுவத்தினர் இந்த அழிப்புக்களை எல்லாம் மேற்கொண்டபடியே இராணுவத்தின் நினைவுத் தூபிகளை அமைக்கிறார்கள். புத்தர்சிலைகளை நடுகிறார்கள். அவற்றை நாளும் பொழுதும் பராமரித்துக் கொண்டே மறுவளத்தில் ஈழத் தமிழர் அடையாளங்களை சேதம் செய்கின்றர். வலிகாமத்தில் வீடுகள் அழிக்கும்போது ஆனையிறவில் ஒரு யுத்த நினைவுத்தூபி நிறுவப்படுகிறது.
யுத்தம் நடக்கும் போதும்; யுத்தம் ஓய்ந்திருக்கும்போதும் இராணுவம் மக்களின் வீடுகளை அழிப்பதுண்டு. யுத்ததின்போது மாத்திரமல்ல யுத்தம் முடிந்த இன்றைய நிலையிலும் வீடுகள் அழிக்கப்படுவதற்கு உள்ள காரணம்

ஒன்றுதான். வீடுகளை அழித்தல் என்பது பண்பாட்டையும் வரலாற்றையும் அழித்தல் ஆகும். அதுவே நிலத்தை கையகப்படுத்தவும் உதவுகிறது. அதுவே ஒரு இனத்தையும் அழிக்க உதவுகிறது. இன்று வீடுகளுடன் சேர்ந்து நாமும் அழிக்கப்பட்டுக் கொண்டிக்கிறோம். வலிவடக்கு வீடுகள் அழிக்கப்படுவதைப் பார்க்கும்போது தாங்க முடியாத நம் மனங்களும் அழிகின்றன. ஓரினத்தின் நாகரிகத்தை அழிக்கிறார்கள் என்று மனம் குமுறுகிறது.

வலிகாமம் வடக்கு, இராணுவத்தினரின் உச்ச கட்ட பாதுகாப்பில் உள்ள பகுதி. இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதிக்குள் தனியான போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. அங்கு சுற்றுலாப் பிரயாணிகள் மாத்திரம் சென்று பார்வையிட முடியும். ஆனால் அந்தப் பிரதேச மக்கள் அங்கு சென்று வசிக்கவோ பார்வையிடவோ முடியாது. அதைப்போல ஈழத் தமிழர்களின் மக்கள் பிரதிநிதிகளும் அங்கு செல்ல முடியாது. வடக்கு மாகாண முதலமைச்சரோ அல்லது எம்.பி ஒருவரோ அங்கு செல்ல முடியாது. அங்கு ஈழ மக்களுக்கு எதிராகவும் அங்கு சட்டவிரோதமாகவும் வீடுகள் அழிக்கப்படுவதன் காரணமாகவே அந்த பிரதேச மக்கள் தடுக்கப்படுகின்றனர்.


முழுக்க முழுக்க இராணுவ வாடையடிக்கும் பயங்கரப் பிரதேசமாகவே காணப்படுகிறது. இராணுவத்தின் தனியான ஆட்சிதான் அந்தப் பகுதியில் நடக்கிறது. அவர்கள் அங்கு எதைச் செய்ய முடியும்? இன்று அங்கிருந்த வீடுகளை அழிக்கும் காட்சி ஒன்றைத்தான் அங்கு செல்பவர்கள் காண முடியும். புதிதாக அமைக்கப்படும் இராணுவ முகாங்களையும் இராணுவத்தினர் நடத்தும் சொகுசு விடுதிகளையுமே பார்வையிட முடியும். ஆனால் மனித மனங்களை மிகவும் குற்ற உணர்வுக்கு உள்ளாக்கக் கூடிய ஒரு பிரதேசமாகவே காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. வலிக்கச் செய்கிறது வலி வடக்குப் பிரதேசம். அங்கு செல்லும் சிங்கள மக்கள் தமிழர்களின் வாழ் நிலங்களும் வாழ் வீடுகளும் இப்படி அழிக்கப்படுவதை பார்த்து என்ன நினைப்பார்கள்?

ஒரு இனத்தின் வீடுகள் அழிக்கப்படுவதைப் பார்த்து சிங்கள மக்கள் மனிதாபிமான ரீதியில் அதைத் தடுத்து நிறுத்த எதுவும் செய்யவில்லை. தோற்கடிக்கப்பட்ட இனத்தின் வீடுகளை தமது படையினர் அழிப்பதாக அவர்கள் நினைக்கக்கூடும். அந்த இடத்தில் சிங்கள இராணுவத்தின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குடியேற்றப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. இராணுவ வலயத்தில் அழிக்கப்படும் வீடுகள்தான் இன்று அங்கு காட்சியாக தெரிகின்றன. இதையெல்லாம் சிங்களவர்கள் பார்த்துக் கொண்டே தமது பொழுதைக் கழிக்கின்றனர். சிங்கள மக்களும் இந்த வீடழிப்பை தடுக்காததின் மூலம் தமிழ் மக்கள்மீதான தமது எண்ணப்பாடு எப்படியானது என்பதை வெளிப்படுத்துவதையே காணமுடிகிறது.

எமது சனங்கள் வாழத் துடிக்கும் அந்த வீடுகளை இரக்கமற்ற சிங்கள இராணுவத்தினர் இடித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த வருடம் அங்கு சென்ற பொழுது அந்த வீடுகள் எல்லாம் பாழடைந்தபடியே இருந்தன. சில வீடுகளில் இராணுவத்தினர் முகாமிட்டிருந்தார்கள். மக்கள் இல்லாத வீடுகளின் முகம் பயங்கரமானது. மக்கள் துரத்தப்பட்டு இராணுவத்தால் சூழப்பட்ட வீடுகளும், வளவுகளும், தெருக்களும் கிராமங்களும் மிக மிக பயங்கரமாக காட்சி அளிக்கும். அவ்வாறான பயங்கரத்துடன் அந்தப் பகுதி உறைந்து போயிருந்தது. 24 வருடங்களின் பின்னரும் அந்த வீடுகள் சனங்களுக்காக தங்கள் உயிரை பிடித்துக் கொண்டிருந்தன.

வலி வடக்கு மக்கள் தமது மீளக்குடியேற்றத்தை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியிருந்தார்கள். அந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மக்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டன.

பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடக்கும்போது தான் இவை எல்லாம் நடந்து கொண்டிருந்தன. இத்தகைய தாக்குதல்கள் வலி வடக்கை ஏன் அபகரித்துள்ளார்கள் என்பதை உணர்த்துகிறது. அதே வேளை வலி வடக்கு நில அபகரிப்புககு எதிராக அந்த நிலப் பகுதியை மீட்கத் தீராப் போராட்டத்தை நடத்த வேண்டியது எவ்வளவு அவசியமானது என்பதும் உணர்த்தப்படுகிறது.
வலிகாமம் வடக்கில் வயாவிளான், கட்டுவன், மாவிட்டபுரம், தையிட்டி, மயிலிட்டி, பலாலி, காங்சேன்துறை முதலிய பல கிராமங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களும் யாழப்பாணத்தில் உள்ள முகாங்களிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் வசிக்கின்றார்கள். யாழ்ப்பாண முகாங்களில் உள்ள வயதான தாயொருவர் நாங்கள் இறந்து போவதற்கு முன்பாக எனது குழந்தைக்கு எனது காணியின் எல்லையை காட்ட வேண்டும் என்று சொன்னார். நிலத்திற்கும் நிலத்தில் வாழ்ந்த முன்னவர்களுக்கும் புதிய தலைமுறைக்குமான தொடர்பு அதுதான். நிலம் என்பது எமது சந்ததிக்கானது.


23 வருடங்கள் நிலத்தை இழந்து வீடுகளை இழந்து அகதிகளாக வாழ்தல் என்பது எவ்வளவு பெரிய கொடுமை? அன்று இடம்பெயரும்பொழுது சிறுவர்களாக இருந்தவர்கள் இன்று பிள்ளைகளை உடைய பெற்றோர்களாக இருக்கிறார்கள். இருபது வருடங்களுக்கு முன்னர் பிறந்த சந்ததிக்கு அவர்களின் நிலத்தின் எல்லை தெரியாது. அவர்களின் ஊர் எப்படி இருக்கும் என்று தெரியாது. அவர்களுக்கு அவர்களின் வீடு மாத்திரமல்ல ஒரு வீடு எப்படியிருக்கும் என்றே தெரியாது. ஏனெனில் அவர்கள் பிறந்தது வளர்ந்தது எல்லாமே அகதி முகாங்களில் தான். தனது பூர்வீக நிலத்தின் எல்லையை காட்டி விட்டு இறக்க வேண்டும் என்று காத்திருப்பவர்கள் பலர்.

இன்று எல்லைகள் பறிபோய் விட்டன. தமிழர்களின் தாயகத்தின் எல்லைகள் எல்லாம் ஆக்கிரமிக்கப்படுகின்றன. வலி வடக்கில் தற்போழுது ஒரு காணியின் எல்லையை கண்டு பிடிக்க முடியாதளவில் வீடுகள் முதல் எல்லாத் தடயங்களும் அழிக்கப்படுகின்றன. அந்தக் கிராமங்களுக்கு காலம் காலமாக அழைக்கப்பட்ட பெயர்கள் இருக்கின்றன. இப்பொழுது அந்தப் பெயர்கள் எதுவுமற்ற நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட இராணுவ வலயமாக்கப்பட்டிருக்கிறது.


ஒரு தலைமுறைக்கு அகதி என்ற அடையாளத்தை வழங்கி நிலம் தெரியாத தலைமுறையை உருவாக்கிய உயர்பாதுகாப்பு வலயம் என்பது சிங்கள இராணுவ வலயம் என்றே சுட்டிக்காட்ட வேண்டும். பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் உலகத்தில் எங்கும் நிலத்தை அபகரிக்கலாம் என்று சிங்களப் படைகள் நினைக்கின்றன. தமிழர்களின் நிலத்தை அபகரிக்க பாதுகாப்பு வலயம் என்ற காரணத்தையும் சிங்கள அரசு கூறுகிறது.

துறைமுகங்களும் விமான நிலையங்களும் உள்ள இடத்தில் இராணுவப் படைமுகாம்களை அமைக்க வேண்டும் என்று மக்கள் எங்கு சென்று குடியமர்வது? கட்டுநாயக்காவிலும் கொழும்பு துறைமுகத்திலும் அநுராதபுரத்தில் விமான நிலையங்கள் அமைந்திருக்கின்றன என்பதற்காக அங்கு மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு படைமுகாங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றனவா? இப்படி மக்களின் வீடுகள் அழிக்கப்படுகின்றனவா? படைமுகாங்கள் அமைப்பதற்கு மக்கள் ஊரோடு பிரதேசத்தோடு அகதியாக வேண்டும் எனில் படைமுகாம்களுக்கும் அதை நிலைநிறுத்தியுள்ள அரசுக்கும் எதிராக மக்கள் போராடுவது தவிர்க்க முடியாதது.

இலங்கை அரசின் மீள்குடியேற்ற நடவடிக்கையின் வெற்றிக்கு வலி வடக்கு நல்லதொரு உதாரணம். ஈழத் தமிழர்களின் நிலத்திற்கு ஏற்பட்ட துர்க்கதியை வலி வடக்குத்தான் இந்த உலகத்திற்குச் சொல்லிக் கொண்டிருக்கிறது. என்ன காரணங்களைச் சொல்லியும் ஈழத் தமிழ் தமிழர்களின் நிலத்தை

அபகரிக்கலாம் என்கிற சிங்களப் பேரினவாத நில அபகரிப்பை வலி வடக்கு வெளிப்படுத்துகிறது. வலி வடக்கு மக்களை இப்பொழுது வலி மக்கள் என்றே அழைக்க வேண்டும். வலி மிகுந்த மக்களாகவே அவர்கள் இருக்கிறார்கள். ஊர் திரும்ப வேண்டும் என்கிற கனவோடு முகாம்களிலும் தெருக்களிலும் அவர்கள் சந்திக்காத வலியில்லை.

இராணுவம் வடக்கு கிழக்கில் நிலை கொண்டிருப்பதனால் தான் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. வலி வடக்கு கடல் வளமும் நில வளமும் நிறைந்த பிரதேசம். இராணுவத்தை நிறைப்பதன் மூலமும் முக்கிய வள நிலங்களை உயர்பாதுகாப்பு வலயமாக்கி இராணுவத்தின் கோட்டையாக்குவதன் மூலமும் ஈழத் தமிழர்களின் நிலத்தை நிரந்தர ராணுவ வலயமாக்குவதே சிங்கள அரசின் நோக்கம். இராணுவ வலயம் என்பது மக்களை வேட்டையாடும் களம். சிங்கள அரசின் இயந்திரமான சிங்கள இராணுவம் தமிழர் நிலத்தையும் தமிழ் இனத்தையும் வேட்டையாடும் நோக்கோடுதான் எல்லாவற்றையும் மேற்கொள்கிறது.

பலாலியில் தமிழர் காணியில் தோட்டம் செய்யும் இராணுவம்…


வலி வடக்கு மக்கள் இன்று இன ஒடுக்குமுறையாலும் நில ஒடுக்குமுறையாலும் மிகப் பெரும் மனித உரிமை மீறலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். வாழ் நிலத்தை அபகரித்து மறுப்பது என்பது மிகப் பெரும் மனித உரிமை மீறல். உண்மையில் இன்றைய நமது போராட்டம் என்பது வடக்கு கிழக்கை விட்டு சிங்கள இராணுவமே வெளியேறு! என்பதாகத்தான் இருக்க வேண்டும். நாம் வாழ வேண்டிய நிலத்தில் எல்லாவற்றையும் அழிக்கும் இராணுவத்தை வெளியேறு என்பதைத் தவிர வேறு என்ன சொல்லுவது?

வெளிநாட்டுத் தலைவர்கள் வரும் பொழுது நடத்தம் சம்பிரதாய குறுங்காலப் போராட்டங்களும் வெறும் அறிக்கைகளும் வலி வடக்கை மீட்க உதவாது. வலி வடக்கை மீட்பதற்கு வினைதிறனான போராட்டமே தேவை. பார்த்துக் கொண்டே காத்துக் கொண்டே இருக்க முடியாது என்பதை வலி வடக்கின் நிலமை தெளிவாகச் சொல்கிறது. எமது சந்ததிக்கு எமது பூர்வீக நிலத்தின் எல்லையையோ கட்ட முடியாமல் பூர்வீக வீடு அழிக்கப்படுவதை பார்த்துக்கொண்டு அகதி என்ற அடையாளத்தை வழங்கிச்செல்ல முடியாது. அதனால் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வலிவடக்கை மீட்பது ஒவ்வொரு ஈழத்தமிழரதும் கடமை.

 பார்த்தீபன், GTN -

0 கருத்துக்கள் :